பொதுவாக ஒரு துறையில் நடக்கும் தவறுகள் ரகசியமாக வெளியில் தெரிகிறது என்றால், அத்துறையில் ஏதோ ஒரு கருப்பு ஆடு இருக்கிறது என்பதை நிஜத்தில்கேள்விப்படவில்லை என்றாலும் கூட, சினிமா வசனத்தில் கேட்டிருப்பீர்கள்.
கூடவே, அந்த கருப்பு ஆடால், சமுதாயத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களின் விளைவு எப்படியிருக்கும் என்பதையும் அச்சினிமாவிலேயேபார்த்திருப்பீர்கள். ஒரு சிலர் நேரடியாகவே பார்த்திருப்பீர்கள் அல்லது அனுபவித்து இருப்பீர்கள்.
அரசு துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டுமானால் நீதித்துறையைதாம் நாம் நாட வேண்டும்.
அப்படி நாடும் நீதித்துறையில் ஒரு கருப்பு ஆடு இருந்தால் கூட, அரசுத்துறையின் அவலம் என்னவோ அதுதானே நீதித்துறைக்கும்? அப்படியானால், நீதியின்நிலைமை என்னவாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா?
ஒரு கருப்பு ஆட்டின் விளைவையே கற்பனை செய்து பார்க்க முடியாத போது, நீதித்துறையில் எல்லாமே கருப்பு ஆடுகளாக இருந்தால் நீதியின் நிலைமைஎன்னாகும்? நீதிக்கே அநீதிதானே!
நீதிக்கே அநீதி என்றால், நமக்கெல்லாம் என்ன மீதி இருக்கும் தெரியுமா?
கேட்காமல் கொடுப்பது நீதி.
கேட்டப் பின் கொடுப்பது அநீதி!
கேட்டப் பின்னும் கொடுக்க மறுப்பது நீதிக்குச் சமாதி!!
ஆம்! சமாதிதான் மீதி என்பது, நம்மிடம் இருந்து விடை பெற்ற 2012 இறுதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிரை துறந்த மருத்துவ துணைமாணவியின் வரலாறாக இருக்கப்போகிறது.
நீதித்துறையின் தலையாய கடமை குற்றத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, கேட்காமலேயே நீதியை வழங்குவதுதான். ஆனால்,ஆங்கிலேயர்களது நீதியே பரவாயில்லை என்கிற அளவிற்கு கேட்டப் பின்னும் கொடுக்காமல் பலருக்கும் சமாதி கட்டுவதுதான் இன்றைய இந்திய(நீ)நிதிபதிகளின் லட்சியமாக இருக்கிறது.
குற்றங்கள் குறைய வேண்டுமெனில் வலுவான சட்டங்கள் தேவை என்கிற கருத்து பரவலாக நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. நீதியை நிலைநாட்டஇருக்கின்ற சட்டங்களே போதும்! ஏனெனில், நாட்டில் எவ்வளவு சட்டங்கள் இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது என்று நான் சொன்னால், உங்களுக்கு நம்பசற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் உண்மை.
தமிழ்நாடு சட்டத்துறை கடிதம்
இதனை ஆவணத்தின் வழி நிறுபிக்கவே, எவ்வளவு சட்டங்கள் இருக்கிறது என்பது குறித்த ஆவணங்களை பராமரிக்கவில்லை என்கிற தமிழக சட்டத்துறையின்சான்று நகலை சமர்ப்பிக்கிறேன். இந்நிலையில், இதற்கு மேலும் முன்னுக்கு பின் முரணான சட்டங்கள் எதற்கு?
அமலில் இருக்கிற சட்டங்களை, அதிலும் குறிப்பாக பஞ்ச பூதங்கள், ஐம்புலன்கள் போல, இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச்சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள் மற்றும் உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்கிற இந்த ஐந்து அடிப்படையான சட்டங்களை மிகச் சரியாகநடைமுறைப்படுத்தினாலே போதும்! சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்; குற்றங்கள் குறைந்து விடும்!!
ஆனால், இவ்வைந்து சட்டங்களையும், ‘‘நியாயம்தான் சட்டம்’’ என்கிற கொள்கை நீதி கோட்பாட்டிற்கு இணங்க நடைமுறைப்படுத்த சட்டத் தெளிவுள்ள,தைரியமான, எதற்கும் மயங்காத கொள்கையுள்ள நீதிபதிகள் இந்தியாவில் ஒருவர் கூட இல்லை என்பதுதான் எனது ஆணித்தரமான கருத்து.
இவைகளை இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்ட அத்தனை தீர்ப்புகள் மூலமாகவே என்னால் நிறுபிக்க முடியும். இப்படிச் சொல்வதால், எனக்கு எல்லாச்சட்டமும் தெரியும் என்பது அல்ல உட்பொருள். மாறாக, மற்ற சட்டங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கின்ற இவ்வைந்து சட்டங்களும், எனது கருத்தைநிறுபிக்க தேவையான அளவிற்கு தெரியும். அவ்வளவே!
நீதிபதிகளின் இவ்வறியாமைக்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால், வக்கீல்களில் இருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதே ஆகும்!
ஏனெனில், நியாயத்தை சொல்ல சமயோசித்த புத்தியும், சாதுரியமாக கேட்டு அறியும் தன்மையும், நடுநிலை நோக்கும்தாம் தேவையே ஒழிய, ஒருபோதும்நிச்சயமாக சட்ட அறிவு தேவையில்லை. சட்டம் என்பது இதன் விளைவு இதுதான் என்பதை விளக்கும் வாய்ப்பாடே என்பதால் அந்த அளவிற்கு சட்டத்தைதெரிந்து வைத்திருந்தாலே போதும்.
ஆனால், இதுவும் தெரியவில்லை என்பதோடு, மேற்சொன்ன எந்தஒரு தகுதியும் நீதிபதிகளுக்கு இருப்பதில்லை. இது ஏன் தெரியுமா?வக்கீல்களில் இருந்துநீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதுதான்.
அப்படியானால் வக்கீல் என்பவர்கள் யார் என்றால், வக்கீலாக கடமையாற்றிய நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி வக்கீல் தொழிலை விபச்சாரத் தொழில்என்றும் வக்கீல் தொழில் செய்பவர்களை ஈனப் பிறவிகள் என்று தந்தைப் பெரியாரும் சொல்லியுள்ளதை முகப்பு பக்கத்தில் படித்து இருப்பீர்கள். ஒருவேளைபடிக்காமல் இருந்தால்,படித்தப்பின் இதனை தொடருங்கள்.
ஆமாம்! எல்லாம் புரிந்து விட்டது இதற்கு மேல் நீங்கள் என்ன சொல்ல வேண்டியிருக்கு என்று கேட்கலாம்.
ஆனாலும், அவர்கள் தெளிவாக சொல்லாத ஓரிரு உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கிறது. தற்போது வக்கீல்களுக்கு படிப்பவர்களை மூன்று விதங்களில்வகைப்படுத்தலாம்.
முதலாம் வகையில், வக்கீல்களின் கல்வித் தகுதியை ஆராய்ந்தால், நன்றாக படிப்பவர்கள் எல்லாம் தகவல் தொழில் நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்றபல்வேறு துறைகளுக்கு சென்று விடுகின்றனர். அப்படியில்லாதவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கௌரவத் தொழிலே வக்கீல் தொழில்.
இரண்டாம் வகையில், வக்கீல்களின் ஒழுக்க தகுதியை ஆராய்ந்தால், இன்றைக்கு வக்கீல்களுக்கு படிப்பவர்களில் அறுபது சதவிகிதம் பேர் குற்ற வழக்குகளில்சம்பந்தப்பட்டவர்களே! அவர்களுக்கு படிக்கும் திறன் இல்லாத போது, தனது குடும்பத்தில் ஒருவரை படிக்க வைக்கிறார்கள்.
மூன்றாம் வகையில், வக்கீல்களின் சான்றிதழ் தகுதியை ஆராய்ந்தால், இன்றைக்கு வக்கீல்களுக்கு படிப்பவர்களில் எழுபது சதவிகிதம் கர்நாடகா மற்றும்ஆந்திராவில் செயல்படும் சட்டக்கல்லூரிகளில் இருந்து, பகுதி நேரமாக படித்ததாக காசு கொடுத்து வங்குவதுதான்.
இப்படிப்பட்டவர்கள்தான், பின்னர் நீதிபதிகளாகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமையல்லவா?
சுருக்கமாக சொல்லப்போனால், வக்கீல்கள் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!
இதைத்தவிர வேறு எந்த தகுதியும் வக்கீல்களுக்கு கிடையாது என்கிற எதார்த்த நிலையில் இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகள் கருப்புஆடுகளாக இல்லாமல் வேறு எப்படி இருப்பார்கள்? ஆதலால்தான், இவர்களின் குற்றங்களை, அசிங்கங்களை மறைப்பதற்கு பொருத்தமாக கருப்பு நிறஅங்கிகளை போர்த்திக் கொள்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள் நீதித்துறையில் எல்லாமே கருப்பு ஆடுகள்தானே?