நாமெல்லாம் சட்டப்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால், இதுதான் உண்மை!

சட்டப்படி வாழ்வதால்தான் வெளியில் இருக்கிறோம்! இல்லையென்றால் சிறையில்தானே இருப்போம்? சட்டம் தெரியாமலேயே சட்டப்படி வாழும் நமக்கு, அச்சட்டத்தை தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்?!

ஆனாலும், இதைப்பற்றிய அக்கறை குடிமக்களான நமக்கு அறவே இல்லை. இந்த அக்கறை இன்மைக்கு பற்பல காரணங்கள் உண்டு என்றாலும் கூட, ‘‘சட்டம் ஒரு இருட்டறை. அதில், வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு’’ என்ற அறிஞர் அண்ணாவின் கூற்று, சட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தைப்பற்றி ஒன்றும் தெரியாத நம் மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்தது மிகமிக முக்கிய காரணமாகும்.

ஆம், சட்டம் தெரியாமலேயே, நாம் சட்டப்படி வாழும் போது, சட்டம் எப்படி இருட்டறையாக இருக்க முடியும்? அதில், கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களான வக்கீல்களின் வாதம் மட்டும் எப்படி, விளக்காக இருக்க முடியும்! ஒருபோதும் இருக்க முடியாது.

மாறாக, நிச்சயமாக வதமாகத்தான் (துன்பமாகத்தான்) இருக்க முடியும். அப்படித்தாம் இதுவரையிலும், இருந்து கொண்டிருக்கிறது.

ஆம்! எங்காவது ஒரு சில வக்கீல்களுக்கு ஏற்படும் பிரச்சினைக்காக (பாடாய்ப்படுத்தும் சட்டப் பட்டப்படிப்பு) வக்கீல்கள் மாநிலம் முழுவதும் அல்லது நாடு முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம், கறுப்பு கொடி காட்டுதல், மனித சங்கிலி என சாலையில்தாம் போராடுகின்றனர்.
இவர்களின் பெரியப்பன் பிள்ளைகளான நீதிபதிகளோ, நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு என்னும் வகையில், நீதிமன்ற புறக்கணிப்பை கைவிட்டு வழக்கு நடத்த வாருங்கள் என வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்காத குறையாக அவ்வப்போது அறிக்கை விடுகிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

உண்மையில், வக்கீல்களுக்கு சட்டம் தெரியும் என்றால், தங்களது பிரச்சினைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடாமல், ரோட்டில் போராட வேண்டியதன் அவசியம் என்ன? அவர்களது பிரச்சினையையே அவர்கள் தீர்த்துக் கொள்ள வழி தெரியாமல் நடுத்தெருவில் நின்று போராடும் போது, உங்களது பிரச்சினையை எப்படி தீர்த்துத் தருவார்கள்?

மாறாக, அவர்களின் நல்வாழ்விக்காக, உங்களை தீர்த்துகட்ட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை செயல்களையும்தாம் செய்வார்கள். உண்மையில் சண்டக் கல்லூரி மாணவர்கள் எப்படியெல்லாம் பாடசாலையில், கல்லூரியில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதை அனுதினமும் ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். அவர்கள், எப்படிப்பட்ட சமூக அக்கறையோடு பாடங்களைப் படிக்கிறார்கள் என்பதை இவ்வொளி ஒலிக் காட்சியைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

நாமென்ன, மகாத்மா காந்தி அல்லது தந்தைப் பெரியாரை விட அறிவாளிகளா? இவர்களே, ‘‘வக்கீல் தொழிலை விபச்சாரம் என்று சொல்லி விட்ட பிறகு, அதற்கு மாற்று வழி வேறென்னவென்று சொல்ல வேண்டுமோ அவைகளைத்தாம், விளக்கமாக உங்களுக்காக சொல்லிக் கொண்டு இருக்கிறேன்’’.

எனவே, தேசிய கட்சியை வீழ்த்த, ரூபாய்க்கு மூன்றுபடி என, அரிசியை முன்னிருத்தி, ஆசை வார்த்தை பேசி , ஆட்சியைப் பிடித்த அண்ணா, தமிழக அரசியலில் வேண்டுமானால், பொய்யர்களுக்கெல்லாம் அறிஞராக இருந்திருக்கலாம். ஆனால், சட்டத்தில் வறிஞரே! என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அண்ணா மட்டுமல்ல; வக்கீல்கள் அனைவரும், வக்கீலாய் இருந்து நீதிபதிகளான நீதிபதிகளும் சட்டத்தில் அறிவு வறுமை யானவர்களே! என்பதை மனதில் நிறுத்தி சட்டத்தை படிக்க தொடங்குங்கள். எனது இக்கூற்றுக்கள் எவ்வளவு உண்மை என்பதை விரைவில் அறிவீர்கள்.

நமது சந்தோசம் மற்றும் நல்வாழ்வுக்காக இயற்றப்படும் சட்டம் பற்றிய விழிப்பறிவுணர்வின்மையால், சட்டமானது சங்கடத்தை தரும் சங்கதியாகவே (செய்தியாகவே) தெரிகிறது. உண்மையில், நாட்டில் நடக்கும் செயல்கள் எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படுவதே சட்டம்.

எந்த சட்டமும் திருடுங்கள், ஏமாற்றுங்கள், கொள்ளையடியுங்கள், கொலை செய்யுங்கள், தேர்தலில் தில்லுமுல்லு செய்தாவது தேர்ச்சி பெறுங்கள், அதிகாரத்துக்கு வர லஞ்சம் கொடுங்கள், அதிகாரத்துக்கு வந்ததும் லஞ்சம் வாங்குங்கள், கோடிக் கணக்கில் ஊழல் செய்யுங்கள், இயற்கை வளங்களை கொள்ளையடியுங்கள், அடுத்தவன் சொத்தை அபகரியுங்கள், மனைவியிடம் மணக்கொடை கேளுங்கள், ஏழை எளிய மக்களை வன்கொடுமை செய்யுங்கள், பெற்றவர்களை பிச்சை எடுக்க வையுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை.

மாறாக, இவைகளை எல்லாம், எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்றும், அப்படி மீறிச் செய்தால், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும்தாம் அறிவுறுத்துகிறது. ஆனாலும், நம்மில் பலர் அச்சுப்பிசகாமல், அப்படியேச் செய்து விட்டு, தண்டனையை அடைந்திருக்கிறோம் அல்லது அடையக் காத்திருக்கிறோம் அல்லது இத்தண்டனையில் இருந்து தப்பிக்க என்ன வழி என பொய்யர்களிடம் ஆலோசனையை நாடிக் கொண்டிருக்கிறோம்.

பின், எப்படி சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஒட்டைகள் இருக்க முடியும்? இருக்கவே வாய்ப்பில்லைதானே! இல்லை என்பதுதாம் நமது ஆணித்தரமான கருத்து. ஒருவேளை, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் கூட, அது சரி செய்யப்பட வேண்டிய ஒன்றுதானே தவிர, அதையேச் சாக்குப்போக்காக சொல்லி தப்பிக்க முடியாது.

சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை இருக்கிறது என்று சொல்பவர்கள், அந்த ஓட்டையுள்ள சட்ட அதிகாரத்தில் இருந்து விலகாமல் அதைப்பிடித்துக் கொண்டே பிழைப்பு நடத்த வேண்டியதன் ரகசியம் என்ன என்பதைப்பற்றி நீங்கள் (நாம்) சிந்திப்பதில்லை.

ஆம்! சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் என்று சொல்லக்கூடிய சட்ட அதிகார மிக்கவர்கள் எல்லாம், அச்சட்டத்தில்தான் அவர்களின் அடக்கு முறை அதிகாரங்கள் அனைத்தும் அடங்கியிருக்கிறது என, சட்டம் குறித்த தவறான புரிதலில் அல்லது அறிவு வெறுமையால் நம்புகிறார்கள்.

நமது ஊழியர்கள் ஆன அவர்கள் அனைவரும், (அதாவது, அரசாங்கத்தில் அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்தில் அல்லது நமது நல விருப்பத்திற்கு கூலிக்கு அல்லது மதிப்பு ஊதியத்திற்கு வேலை பார்ப்பவர்கள், அப்படி தவறாக நம்புவதற்கு அடிப்படை காரணம்) அவர்களுக்கு அரைகுறையாக தெரிந்த கொஞ்ச நஞ்ச சட்டம் கூட, உங்களுக்கு (நமக்கு) தெரியாமல் இருப்பதுதான்.

முதலாளியாக இருக்கும் நீங்கள், ஒருவரை வேலைக்கு வைத்து அவரை சரியானபடி வேலை வாங்க வேண்டுமென்றால், அவ்வேலைக்காரரை விட, அந்த வேலையில் நீங்கள் தெளிவானவராக இருக்க வேண்டும்தானே? அப்படி தெளிவில்லாது இருந்தால், அவ்வேலைக்காரர் என்ன சொல்கிறாரோ, செய்கிறாரோ அதுதானே சரி என நினைப்பீர்கள்!

இதுபோலவேதாம் சட்ட அறிவில், முதலாளிகளான நாம் இருக்கிறோம்! இதனாலேயே, நம் வேலைக் காரர்களான அரசு ஊழியர்கள் முதல் வக்கீல்கள், நீதிபதிகள் வரை நம்மை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது ஊழியர்கள் அனைவரும் சட்டத்தை தவறாக பயன்படுத்தி எப்படியெல்லாம் நம்மை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள், அதிலிருந்து நீங்கள், சட்டத்தை முறையாகப் பயன்படுத்தி தப்பித்து அல்லது தற்காத்து அல்லது தட்டிக்கேட்டு, உங்களின் வாழ்வை வளப்படுத்துவது எப்படி என வழிகாட்டவே இத்தளத்தை இயக்குகிறோம்.

சட்டமென்பது அனைவருக்குமான பொதுச் சொத்தே தவிர, குறிப்பிட்ட ஒரு சிலரின் அல்லது வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் மக்களை ஏய்த்துப் பிழைக்க உதவும் பாட்டன், முப்பாட்டன் சொத்தோ அன்று. ஆனாலும், சட்டத்தை உங்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாததால் அன்று அப்படித்தான் நடந்தது.

ஆனால் கடந்த 2005 ஆண்டு முதல் நூல்கள் மூலம் மட்டுமல்லாது எளிய தமிழில், சாதாரண வழக்கு மொழியில், சாதாரண குடிமகன் முதல் குடியரசுத் தலைவர் வரை, சராசரியான சட்ட அறிவைப் பெற வேண்டும்; தனது பிரச்சனைக்காக தானே வாதாடி, தனது தரப்பு நியாயத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் நடத்தப்படும் உலகின் ஒரே சட்ட விழிப்பறிவுணர்வுக்கானத் தளம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book