3
நேர்மை வீணையை மீட்டி
மறைந்த கடலோரக் கவிதையே!
ஆழம்காணா ஆயிரம் ஆழி மனங்களின்
உண்மைமுகம் காணத் துடிக்கின்றேன்!
வாழ்க்கைப் படகுப் போராட்டத்தில்
நீ வென்ற பாதையிலே
விரைவாக நடைபோடக் காத்திருக்கும்
இளைய சமுதாயம் எங்கே?
சப்தஸ்வரங்களின் இன்னிசையாய்
2020-வலிமை பாரதம் வழிகாண
எத்தொழிலும் பேதமில்லை!
பிச்சை எடுப்பதுகூட
தொழிலாகிவிட்ட கறைதுடைக்க
எங்கே செல்வது சட்டக் கறை நீக்கி மருந்திற்கு?
ஆயிரங்கோடி அறிவை அகிலத்திற்களித்த
அற்புத ஒளிவிளக்கே!
இன்று அறிவுஒளி இருட்டாகிக் கிடக்கிறது!
தமிழகம் பெற்றெடுத்த நல்முத்தே!
உன்னைப் போன்ற நல்முத்தை
உலகெங்கும் வலை வீசித்தான் பார்க்கின்றேன்!
வீசிய வலையில் இலஞ்ச சுறாக்கள்
கடித்த வேதனையில் மனிதவலை
சொல்லாமலே வாழ்க்கைக்கடலின்
மண்பார்த்து வெகுநாளாகிவிட்டது!
சாதித்திமிங்கிலங்கள் விழுங்கக் காத்திருக்கும்
ஒற்றுமையின்மை சமுதாயம் காக்க
இனி யார் வருவார்?
ஔவைத்தமிழால் நடை பழகிய
ஊக்க ஒளிவிளக்கே!
உன் ஊக்கமருந்து வெளிச்சத்தில்
இன்று வான்வெளியில் வரவேற்க
சொர்க்கத்தில் புஷ்பக்கூடைப் பல்லக்கு
தயாராகி வந்துகொண்டிருக்கிறது!
ஆயிரங்கோடி அறிவை அகிலத்திற்களித்த
அற்புத ஒளிவிளக்கே!
நீ பிறந்த தீவினிலே நானும்தானே
ஓட்டுகின்றேன்!
ஒரு சாண் வயிறு வளர்க்க
ஓடாய்த் தேய்ந்தாலும்
தமிழ்வழிக்கல்வி செழிக்க வாய்ப்பில்லை!
தொழில்நுட்பத்தமிழ் கல்விகாண
உழைத்தவரே!
கோடி மூலையிலே நீ பிறந்திருந்தாலும்
சாதி,மதமே இல்லா ஒற்றுமை உலகு காண
இன்னொருமுறை பிறப்பாயா!