11
மதுவால் வந்த நம் பிரிவு
கானல் நீராய் ஓடி விடும்
நேசங்கள் என்றும் மறையாது
உறவுகள் என்றும் பிரியாது
கோபங்கள் என்றும் நிலைக்காது
குளிருகின்ற மையிருட்டில் உன்
மையல்முகம் தொலைந்த இடம்
தேடி அலைகின்றேன்!
நிலைக்காத காதல் இல்லையம்மா
நம் காதல் வாழ்வு!
உடலால் வந்த காதல்
ஊனழுகிப்போன போது மாறிவிடும்!
நிலைக்கின்ற நம் காதல்உறவு
மன(ண)ச் சங்கிலியால் வந்ததம்மா!
மதுபுட்டி மயக்கத்தினைத்
தொலைத்து உன்னைத் தேடுகின்றேன்!
விடியாத மாதங்கள் விடிந்து விடும்
நான் திருந்தி வாழும் வாழ்க்கை காண
எனைக் காண விரைந்தோடி வருவாயா!
கண்ணின் இமைபோல காத்தவளே
கடல்தாண்டி போனாயோ!
தொட்டுப் புரிதல் சுகம் அல்ல
தொடர்ந்து தொடரும் மன(ண) உறவு இது
என்றே நாமும் பகிர்ந்திட்டோம்!
இடையில் வந்த ஊடல் மயக்கம்
எதற்கம்மா மாதக்கணக்காய்!
அழிபடும் நீர்க்குமிழியல்ல நம் உறவு
நெடுநல்வாடையில் மயங்கி
இங்கே வாழ்கின்றேன்!
மருதமரமாய் நிற்கின்றேன்!
சுவர் ஏறும் பூனை போல
மனம் இங்கு அலை பாயுதே!
அன்றில் பறவை ஜோடி போல
எந்தன் மனம் துடிக்கிறதே!
மயங்காத உன் கண்விழிகள்
காண வெள்ளைமன நாய்க்குட்டி
உந்தன் வருகை காண ஏங்குதம்மா!
முல்லைப் பூத் தோட்டமுமே
உலர் பூக்களாய் மாறியதம்மா!
உன் விரல் தொடும் நிகழ்வுக்காக
முல்லைக்கொடியும் காத்திருக்கிறது
மது புட்டிகள் அனைத்தும்
மணிபிளாண்ட் செடி தொட்டி ஆனதம்மா!
புரியாத உறவுகளுக்கு புரியாது
நம் உள்ளார்ந்த பாச வாழ்க்கை
புரிந்துவிட்ட உள்ளங்களுக்கு
வாழ்க்கைப்பாடம் இனித்திடுமோ!