38
மண்மகளின் மண்வாசனையுடன்
பழகிய எனக்கு விண்மகளின் நட்புடன்
ஏகாந்த வெண்பஞ்சு மேகங்கள்
தாலாட்டுடன் நேர்காணல் ஆரம்பம்.
மண்மகளின் செயற்கை குழந்தைக் கட்டிடங்கள்
அந்நியமாய் மாறிவிட உயர உயர விண்மகளின்
மடியில் கிடந்தேன்.
தாய் மடிதான் அந்நியமாய் மாறிவிட
அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்திட
இறைவன் எங்கு தெரிவான் என்ற
ஆவலில் வெற்று வான்வெளி பெரிதா!
தாயன்பு பெரிதா! என்ற கணக்குக் கூட்டல்
பாடத்தை காலப்பாடம் கற்றுக்கொடுத்த
காலக்கடிகார முள்ளில் ஊர்ப்பண்பாடு
ஒளிந்திருந்து கண்ணாமூச்சி
ஆடுகின்ற நேரத்தில் தமிழ்த் தேடலில்
காணாமல் போன மழலைமுகத்தை
தேடிக் கொண்டிருக்கிறேன்!
அறிவுத்தேடலை அகண்டமாக்கிய
பட்டங்கள் பரிகாசமாய் காகிதமாய் சிரித்திட
உறவுகள் அந்நியமாய் பரிதியின் ஊசிக்குத்தல்
ஒளிக்கதிராய் மென்பஞ்சு மேக
மழலை மனதில் ஈட்டிகளாய் மாறிவிட
தாயின் ஸ்பரிசத்திற்கு ஏனோ மனம் தள்ளாடுகிறது!
இழப்புகள் ஏற்பட்டால் மனதளவில் சுமை
தாங்க ஆலமரம் பாடம் ஆதி பகவனால்
நடத்தப்படுகிறதா?
பட்டங்கள் சுமந்து சென்றாலும் பாராமுகம் காட்ட
பாறாங்கல் மனதாய் மாற்றிக் கொண்ட
மர்மத்தை அறிய என்னைப் படைத்த
இறைவன் எங்குள்ளான்?
தூது செல்ல நாரதர் எங்குள்ளார்?
என்றறிய ஆவலாய் விண்வெளியில் நான்!