18

 

பாட்டியின் நகைப்பித்தில்

சிதறிய வைரக்கல்

பூகம்பத்தின் இடிபாடுகளுக்கிடையில்

சிக்குண்டு பிரகாசித்து

கடலுக்கடியில் கிடக்கிறது!

பங்காளி சண்டையில்

நசுக்குண்ட பித்தளைவாளி

கேட்பாரற்று பச்சையத்துடன்

மாடிப் பரணில் கிடக்கிறது!

வாளிக்குக் கொடுத்த மதிப்பை

வாழ்நாளின் நாட்குறிப்பிற்குக்

காட்ட மறந்ததேனோ?

அத்தையின் முந்தானையில்

பளபளத்த உரலும் அம்மியும்

பூமி மகளின் பொறுமைக்கு

இலக்கணமாய் புதையுண்டு

யார் வரவுக்காக காத்திருக்கிறது?

மாங்காய் அண்டாவின்

கனத்த மௌனம் வட்டியில்லாக்

கடனை யாருக்குச் செலுத்தக் காத்திருக்கிறது!

வாங்குவார் யாருமின்றி

யாருக்குச் சொந்தம் என்பதை அறியாமல்

தொல் பொருள் கண்காட்சிப் பொருளாய்

சண்டையிட்ட மனிதரைத் தேடி

இன்று காட்சியளிக்கிறது!!!

பரணில் அமர்ந்த பித்தளைக் கிளிக்குடங்களின்

பளீரிட்டுத் தேய்ந்த சிரிப்பொலிகள்

தூக்கிச் சுமந்த பெண்ணின்

கைவளை உரசக் காத்திருக்கிறது!!

மரநாற்காலியின் தேய்ந்த இருக்கை

நடந்து முடிந்த

மண்ணாசை சண்டையில்

மண்ணாகி ஓரமாய்

செல்லரித்து யாருக்கோ

உணவானோம் என்ற திருப்தியில்

வாழ்ந்து முடித்த மனநிறைவுடன்!!

வாளியும் குடமும்

அண்டாவும் அம்மியும்

சிரித்த எள்ளல் ஓசை

நனவோடை சண்டையினை

பிரதிபலித்துக் காட்டுகிறதோ?

மனிதன் மட்டும் கல்லாகிப்போனான்

மனதளவில் என்றே எண்ணியதோ!

புகழ் வேண்டி இவ்வுலகில்

வாழும் மனித நெஞ்சங்களுக்கு

மனிதநேயத்தினை கடன் வழங்குவது எவ்வங்கி?

தேடிப் பார்த்த களைப்பில்

தென்றலாய் ஆசிரியர்

நட்டு வளர்த்த தென்னைமரம்

யார் வரவுக்காக காத்திருக்கிறது?!

License

Share This Book