22

 

சாதிக்கப் பிறந்த பெண்ணே!

இன்னுமா அடுக்களைப் பாத்திரங்களுடன்

கிண்கிணிப் பேச்சுகள்!

வாழ்வின் அர்த்தமற்ற அறுவை பொழுதுபோக்கில்

இன்னமும் ஏனடி இந்த மோகம்?

சாதி மேலாடை பொய்க்கவசத்தை உடைத்துவிடு!

வரதட்சணை பூதங்கள் கந்தக நெருப்பாய்

சாதி சாக்கடையில் மூழ்கிய

முதிர்கன்னி முத்துகளை

உணவாக்கக் காத்திருக்கின்றன!

சாதி சாக்கடையில் மூழ்கிய

முத்துகள் ஒளிரும் காலம் எப்போது?

நெருப்பணைக்க கல்விச்சிறகுகள் இருந்தும்

ஆணாதிக்க மதச்சுடரில் கருகிய பெண்மலரின்

கண்ணில்வழியும் நீர் துடைக்க வருவாயா!

குடித்துக் குடி கெடுக்கும் கோணல் நெஞ்சங்களைச்

சீர்திருத்த பெண்சிங்கமென சீறி

எழுந்து சாதிக்க நீயும் வருவாயா!

சுருங்கிய முகவரி முதியோர் நலங்காண

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே

நீயும் சாதிக்க வருவாயா!

சாதி மதமற்ற சமுதாயம்காண

புரட்சிப் பெண்ணே!

ஏழை துயர் துடைக்க எப்போது வருவாய்?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சோலை வனம் - கவிதைகள் Copyright © 2015 by இரா. பாரதி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book