32

அந்தி சாயும் நேரம்தான்

ஆற்றுப்பக்கம் பேசிய ஆயிரம் பேய் கதை

ஆண்டாண்டு பேசினாலும்

ஆயுள் முழுக்கத் தீராது!

தோள் கொடுக்க தோழி

நேசம் எல்லாம் இப்புவி உலகில்

கானல்நீராய் தெரியுதடி!

சுயநல உலகத்திலே

பொருளும்,புகழும்

பெரிதென வாழும் உலகத்திலே

என்ன சாதித்தோம் தோழியே!

கடற்கரை மணல் எண்ணிக்கைபோல

காக்கை பிடிக்கும் மனிதர் கூட்டம்

கிண்கிணியாய் நம்மைச் சுற்ற

கீழ்வானம் சிவப்பது எப்போது?

மண்ணுக்குள்ளே பிறப்பவர் யாரும்

மக்காப் பொருளாய் இருப்பதில்லை!

இடுக்கண் களைய வரும் நட்புபாலம்

புவி உலகைக் காக்காதா!

கற்ற பெண்கள் யாவருமே

காக்கை உண்ண உணவிட

அடுக்களை மந்திரம் போதுமா?

புவி ஆளும் பெண்களுக்கு

கவி பாடவும் நேரம் உண்டே!

உலகைத் திருத்தும் வரைபடத்தை

ஒப்பனையுடன் சமர்ப்பிப்பாய்!

நாதியற்ற சேய்கள் கூட்டம்

தெருவெங்கும் பிச்சைக்காரர்களின் அணிவகுப்பு

தொலைய சட்டங்கள் எங்கே?

உழைத்து ஓய்ந்திருக்கும் முதியோர்

உடல் நலம் காக்க அன்னை தெரசாவுக்கு எங்கே போவது?

குடித்துக் குடி அழிக்கும்

கோணங்கி சமுதாயம் திருத்த வழி வரைவாயே!

குடியும்,புகையும் அழிந்துவிட

புதிய உலகம் காண்பாயோ!

பகிர்ந்து உண்ணும் காக்கைகூட

இன்று பகிராநிலை உண்டென்றால்

காரணம் ஏன் தோழி!

வான்கொடைத் தூறல்

தேக்கநிலை இடம்மாறி

அடுக்ககத் திட்டங்களான

அவலநிலை என்று மாறும்?

தூது செல்லும் காக்கைகள்

சுயநலமில்லா வாஞ்சையோடு

நீ கொடுக்கும் தமிழ் தூது மடலுக்காக

விடியல் உலகைக் காணக் காத்திருக்கின்றன!

 

License

Share This Book