2
வரிசையை மறந்த
மிதியடிகள் எனது அறிவை
விலை பேசிய
சுயநலச் சுனாமிகள்
அறைக்குள் நீ ஈட்டிய
கருவூலகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன!
புறக்கண் இல்லா
எந்தன் இதயம் நோக்க
கிண்கிணி நாதப்பேச்சு
மெல்லிசைத் தமிழே
எங்கே சென்றாய்?
வாசித்துக் காட்டிய
மாதுளை முத்து இதழ்கள்
சிந்திய தமிழ் கேட்க
அகக்கண் மட்டுமே
அருளிய ஆண்டவனுக்கு
ஏனிந்த ஓரவஞ்சனை!
வானவில்லாய் வளைந்து
வான்முகிலில் வர்ணஜாலங்கள்
உரைத்திட்ட செந்தமிழழகி
அந்தகனை விட்டு ஏன் மறைந்தாய்?
பாடுபட்டுப் பணத்தைப் பூட்டி
வைத்த பேதையே!
சொல்லாமலேயே கூற்றுவன் விருந்தினராய்
சென்றவளே!
இன்னொரு யுகப் புரட்சியிலே
உனக்குமட்டும் சகோதரனாய்
இருந்திடவே கடவுளிடம்
யாசிக்கின்றேன்!
கூற்றுவனிடம் இன்றுபோய்
நாளை வருவேன் என்று
ஓடி நீயும் வந்துவிடு!
வாசிக்க யாருமற்ற செய்திததாள்
உனது புரட்டலுக்காக காத்திருந்து
கண் சோர்ந்துவிட்டது!
நீ அமர்ந்த நாற்காலி
உனது வருகைக்காக காத்திருக்கிறது!