4
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஆயிரம் நினைவுகள் சுகந்தானடி!
வெள்ளித்தட்டு முகத்தில்
கருப்பு திராட்சை அன்பு கண் வண்டுகள்
வட்டமிட்டு கிறங்கடிக்க
நீ சிணுங்கிய சிணுக்கலில்
உதிர்ந்த மாதுளை முத்து எச்சில்
என் பாதவெடிப்பு மருந்தானதடி!
எனைப் பார்த்து வியர்த்த
புருவமிரண்டைக் கண்ட என் நெஞ்சில்
பாசக் கணை பாயுதடி!
பிரம்மன் வரைந்த கழுத்து ஓவியத்தில்
இந்திய நதியில் மூழ்கிய சங்கு கூட
வெட்கமிட்டு தோற்றோடியது ஏனோ!
வாழைத்தண்டின் மௌனம்
உன் மடிசார் கொசுவிய
கால்களின் அழகு வெற்றியைப் பாடுதடி!
சொக்கிய கண்களில் தூக்கம் தழுவ உன்
பேரன் கொஞ்சிய வெண்டை விரல்களில்
சொடுக்க தோணுதடி!
படுக்கையறையே கோமாவாய் மாறி
பல காலம் ஆனாலும் கண்களிரண்டிலும்
இருவருக்கும் தொடரும் உறவு நீளப் பாலமடி!
நெஞ்சம் பிணிக்கும் அன்புதானடி!
காதலுக்குக் காமம் பதின்மம் இல்லையடி!
காமமே காதலுக்கு முதன்மையும் இல்லையடி!
புரிந்த நெஞ்சங்கள் அன்பு இல்லத்தின் வெற்றிப்படிகள்தான்!
பிரியா நிலை வேண்டி இருவரும் இன்று
அறுபது வயதுக் காதல் வாழ்வில்
அன்றில் பறவையாய் பறக்கின்றோமடி!