8
தாமரைத் தட்டெடுத்து தரணியெங்கும் சுற்றி வந்து
கேழ்வரகுக் கூழ் கையை முகர்ந்து நான் பார்க்கையிலே
இன்னொரு பிறவிதான் எடுக்கவேண்டுமடி பிரிய சகியே!
ஓட்டைப்பானையில் இருந்து விழும் ஒவ்வொரு துளிநீரும்
நாம் மகிழ்ந்திருந்த எச்சங்கள்!
பொத்தல் குடிசையில் பாளவரிப்பாயில் இடமளித்த நீ
புவி மகள் கட்டைமஞ்சத்தில்
எனக்கு இடம் கேட்க மறந்தனையோ!
பறந்துவந்த கரித்துகள்தான் பிறைநுதல்
நெற்றியைத் தீண்டுகையிலே இதழ்நுனியால் துடைக்கத்தான்
தோணுதடி!
கட்டைவிரல் இரண்டும் சேர்த்துக் கட்டுகையிலே
ஆவிதான் துடிக்குதடி!
வாழ்ந்து வந்த காலம் வரை எதிர்த்து வாய்பேசாத
உதடுகளின் அசைவுக்காக ஏங்கிக் காத்திருக்கும்
கையறுகணவன்நிலை காண பிரியசகியே!
எழுந்திங்கு வாராயோ!
ஷாஜகான் கோட்டை கட்ட எனக்கிங்கு மனமில்லை!
அணிலும் கிளியும் அவரவர் துணையுடன்
வீற்றிருக்க இப்படி நாம் காதலிப்போம்!
அடுத்த பிறவியில் நீயே எனது
மனைவியானால்!