14

இன்று ஏன் பிறந்தாய் என் குல விளக்கே!

இருண்ட வித்துக் கருவறை வாழ்விலிருந்து

இன்று உனக்கு விடுதலைத் திருநாள்!

செங்கதிரோனின் தங்கப் பொய்கையில்

குளித்த என் பசுஞ் சித்திரமே!

இன்று ஏன் பிறந்தாய்?

ஆனந்த வெள்ளத்தில் ஆல் தாயின்

எலும்பு வரித்த நரம்பு இலைகளின்

சலசலத்த பேச்சு ஆரம்பம்!

காந்திவிரல் தொட்டஇடம் மண்மாதாவின் மடியில்

சுயநலமின்மை ஆணிவேராய் பதிந்திருக்க

சிந்தாமணியாய் சிரிக்கின்றேன்!

கொடுத்தவரும் வளர்த்தவரும் எல்லாப்பொருளும் எனக்கல்ல!

கற்றுக் கொடுத்ததில் வாழ்கின்றேன்!

வான் மங்கையின் வெள்ளிக்கொலுசுப் பின்னலில்

சிதறிய மழைத்துளி மணிகளாய் சிரிக்கின்றேன்!

மண்மாதாவின் மடியில் மண்டியிட்ட

என் குழந்தைகள் எங்கே?

வருடந்தோறும் கொடிபிடிக்கும்

அரசியல்கூட்டம் கொண்டாடும்

சுதந்திரதினஅணிவகுப்பில் நாற்றாய் நடுவதற்கு

மனமின்றி சென்றனரோ?

மிரட்சியின் உச்சகட்டத்தில் எறும்புகள் கூட்டம்!

என்காலடிவேரில் சேமித்த உணவுடன் தஞ்சம்!

எறும்பு சேமித்த உணவும் இங்கு பணத்திற்கு விற்கப்படும்!

புன்னகையுடன் மனிதர்களின் அணிவகுப்பு!

பணத்திற்கே உணவளிப்போம்!

சாக்கடையில் அழுகிய உணவிற்காக

கைதுழாவித்தேடிய பிச்சி

யாரோ அளித்த கொடையுடன்

வயிற்றுப் பிள்ளைக்காக என் கைகளில்

தொட்டில் கட்ட தயாராகிறாள்!

சுயநலக்கூட்டத்தில் பணத்துக்காக நாமும் வாழ்ந்தால்

மனிதர்கூட்டம் உணவுக்கு எங்கே செல்லும்?

விழுதுபற்றித் தொட்டு விளையாடிய மழலை இன்று

செல்லிடபேசி தொட்டு விளையாடும்

அறிவியல் உலகத்தில் மண்ணாகிப்போன மனிதநேயத்தில்

மரமாய் வளர்ந்து மனிதனுக்கு நீ ஏன்

சாமரமாய் வீச வேண்டும்?

வெட்டிய சுற்றத்தினரின் கைகளினால்

கட்டப்பட்ட கட்டிலில் குளிரூட்டப்பட்ட

அடுக்கக கிரகப்பிரவேச வாசலில்

இப்போதெல்லாம் விருந்தோம்பலுக்காக

காத்திருக்காத வாழை அண்ணா

பணத்தின் எண்ணலில்

அனாதையாய் முதியோராய் நிற்கின்றார்!

ஏன் வளர்ந்தாய் என் மரமே?

என்று கேட்க இன்று இல்லை காந்தி மகான்!

சுயநலமனித ஓட்டு விதைப் பணம்

தேடி நாமும் சென்றால் உலகம் என்ன செய்யும்?

பனியாய் உயர்ந்த இமயக்கல் மனதில்

மனிதநேயப் பாகாய் கசியும்

சகோதரக்கூட்டம் தொலைந்த

புவியினில் ஏன் பிறந்தாய் சின்ன மரமே?

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சோலை வனம் - கவிதைகள் Copyright © 2015 by இரா. பாரதி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book