21
காலையில் எழுந்தவுடன் காலை வணக்கத்துடன்
நாளிதழ் பையனுடன் உறவுகள் ஆரம்பம்!
இவனுக்கு காசை கொடுத்தால்
நாளிதழ் இதிலென்ன இவனிடத்தில் உறவுமுறை!
மனந்தான் எக்காளமிட மணக்கும் குளம்பியுடன்
தாரத்தின் கொலுசு சலங்கை ஒலி
எஞ்சிய இரவு நகைக்கடை பாடத்தில்
வங்கியில் சேமிப்புக்கணக்கின்
ஆறிலக்கம் குறையப் போவதின்
அபாய அறிகுறி!
காசு கேட்காத தென்றல் சகோதரனின்
மடியில் நான் தவழ தாலாட்டும் விசிறியாய்
தாத்தா வைத்த தென்னை!
துவைத்து எஞ்சிய தண்ணீரில் தென்னை வளர
ஹோட்டலில் மிஞ்சிய சோற்றுத் தண்ணீரில்
நான் வளர இன்பம் மட்டுமே
அங்கு கண்டேன்.
காசு கேட்காத தென்னை இன்று
கையூட்டு வாங்கும் எனக்கும் சேர்த்து
தென்றலாய் விசுறுகிறாள்!
மனசாட்சி உறவு என்றோ விலைமகளாய்
மாறியிருக்க உறவுகள் மட்டும்
தண்ணீரில் கவிழ்ந்த காகிதக் கப்பலாய்
நாவில் இனிக்கும் இனிப்பாய் உலா வர
அறுசுவையும் அருகிலிருக்க துன்பந்தான் சூழ்ந்திருக்க
தென்னை என்று அக்னிப் பூக்களாய்
மாறிக் கொட்டும் பயத்தில் உலா வரும்
கையூட்டு இயந்திரம்!