25
சில்லென்ற குளிர்காற்று
படபடக்கும் புட்களின் பரபரப்பு
ஆதவ தந்தையின்
அன்புக்கு ஏங்கும்
மதலை கமலங்களின்
ஆனந்த அணிவகுப்பு
ஞாயிறின் மஞ்சள் குளியலுக்கு
பயந்து பச்சைக் குடைக்குள்
பதுங்கிய முயல்காது மலைகள்
உருக்கி விட்ட பாலருவியில்
குளித்தெழுந்த மூலிகைகள் வாசம்
வானத்து விடிவிளக்கின்
எச்ச வெளிச்சம்
போட்டுக் காட்டிய
தெருவீதிகள்!
வசந்தத் தாயின் அரவணைப்பில்
தலைவாரிய பிரெஞ்ச்நாட்
கொண்டை மரங்களின்
முத்து மலர்களின்
இடைசெருகல்
ஆலயமணியின்தெய்வ உச்சரிப்பு
கனவு கலைந்தது!
கலையாத கனவுகளாய்
வானம் முட்டும்
சன்னலோரத்து அடுக்ககங்கள்
எங்கே சென்றன?
எனது கனவுலக்காட்சி?………..
சுற்றுப்புற சூழலை காக்க
மறந்த இயந்திர மனிதர்கள்!
நெருப்பிலிட்ட மலராய்
முடிந்துவிடும் உலகவாழ்வு
என்பதை மறந்தவர்கள்!
இன்னொரு சுனாமிக்காக
வாழும் கண்ணாடிமாளிகைவாசிகள்!?