37
பனியில் பூத்த ரோஜா
பார்த்து ரசிக்க ஆளின்றி
வாடிக் கிடக்கிறது!
வெண்டை விரலின் ஸ்பரிசம் தேடி
தோட்டத்தில் வெண்டைப்பூவின் தேடுதல் ஆரம்பம்!
என் குழந்தையின் மழலை
அடுத்த வீட்டிற்கு மட்டும்
சொந்தமாகி விட்டது!
அடுப்படியின் சிணுங்கல் ஒலி
அன்னியமாகி விட்டது!
குளிர்பதனப் பெட்டியில்
உறைந்த உணவுகள்
அன்றாட நண்பர்களாகி விட்டன!
ஆறிலக்கப் பணித்தொகை
உறவுகளின் ஆற்றுப்படையாகி விட்டன!
உடைகளின் எண்ணிக்கை
எனது துயரத்தினை வெளிக்காட்டாத
மெழுகு முகமூடிகள்!
எதைக் கொண்டு வந்தோம்
எதைக் கொண்டு செல்கிறோம்?
என்ற நோக்கின்றி வாழும்
உயிரிருந்தும் இயந்திர மனிதர்களாய் நாங்கள்
எங்கு செல்கிறோம்?