48
பெண்ணே! உலக ஆணாதிக்கச் சுவரில்
நெகிழி முகமூடிகளாய்
எத்தனைநாள் தொங்க இயலும்?
உலக அரங்க மேடையில்
விதவிதமான பெண்ணிய மன முகமூடிகள்!
விந்தையான பல எண்ணங்கள் ஒருங்குபட
பாலியல் வன்முறை கொடுமைகள்
வெருண்டோட ஆணாதிக்கச் சுவரில்
சாதி களைக்கொல்லி முகமூடி எங்கே?
கல்விப்பூவின் தேனெடுக்க
வண்ணத்துப்பூச்சி
துரோக விரோதிகள் சதியறுக்க
பேய் வடிவம்
குழந்தைகள் உண்ண
மனம் மயக்கும் வண்ண வடிவம்
எத்தனை வண்ண மயமடி உனக்கு!
வானவில் கோலமாய்
மனக் குமுறல் முட்களை மறைக்க
விதவிதமான முகமூடிகள்!
ஒன்றை ஒன்று சார்ந்தது
அர்த்தநாரீஸ்வரம்!
அடிமை வாழ்க்கையல்ல பெண்ணே!
பொறாமை தொலைந்தோட
விழித்தெழு பெண்ணே!
நிலவான முகம் மறைத்தால்
மட்டுமே உனக்கு முக முத்திரைகள்
இங்கு பதிக்கப்படும் நிலை மாறி
இதமான உளம் சார்ந்த
புதுஉலகம் படைக்க
புவியினில் சாதிக்க
ஆண் சமுதாயம் வரவேற்கும்
அச்சமின்மை அதிகார
முகமூடி எங்கே?