காப்பு
கணபதி
முத்தமிழ் சொல்லெடுக்க என் நாவினிலே
முழுமுதற் பொருள் விளங்க-தேறலாய்
தித்திக்கும் தமிழால் பாமாலை சூட்ட
தரணி முழுதும் காப்பாயே!
சிவன்
நகாதிபன் வாழ் மாநடன் போற்றி
நங்கையாள் குழை தௌதிகம் நக
நந்திசூழ் தேவர் வாழ்த்த இருவரின்
நடனம் காண வாரீர்!
திருமால்
தூவறு எழுகிரி மாயோன் வாழ்த்த
தூமணி மாடத்து மடந்தை காண்!
தேன் ஆரம் சூட்டி மகிழ
தேயம் விளங்க பாடுவாயே!
முருகன்
முத்து இதழ் சிரிப்பால் எனை
மோகனச் சிரிப்பால் இழுத்தாயோ- தித்திக்கும்
மௌவல் ஆரம் சூழ் வடிவழகு
வேலுடனே வடபழனி காப்பாயே!
இயேசு
செங்கதிர் விரிப்ப உலகம் காக்க
செந்நீர் சிந்தி சிலுவை சுமந்தாயே!
அன்பெனும் அசையா சுடரொளி எங்கும்
இனிதாய் பரவ வாழ்த்துவாயே!
நபி பெருமான்
இறையில்லாப் பெருவாழ்வே ஈடில்லா
இஸ்லாம் நெறி பகர்ந்தவனே- கருணை
இன்பம் எங்கும் தரணியிலே பாய்ந்தோட
இனிய தமிழால் வாழ்த்துவாயே!
புத்தர்
அன்பின் வடிவாய் அருளின் வடிவான
ஆனந்தப் பெருங்கடல் தேவா- நின்
இனிய சொல் கேட்கும் பொன்னாள்
ஈங்கு எனக்கு அருள்வாயே!
அருகதேவன்
எண்குணம் போற்றி மும்மலம் நீக்கி
பண்போடு வாழ வழி வகுத்தோனே!
உன் பாதமலர் பணிந்து வந்து
நின் புகழ் வழுத்துவமே!