மண் மீது கொண்டகாதல் ஒருபுறம் தமிழன் என்ற இனத்தையே அழிக்கத் துடிக்கும் இனவாத ஆட்சியின் போர் முற்றுகை ஒரு புறம் என வன்னி மண் வாட்டம் கண்ட நிலையில் !

விடுதலையின் பாதையில் சேர்ந்து ரகுவும்  இப்போது ஒரு போராளி.இந்த வாழ்கை அம்பானியின் வாரிசுபோலவோ அரசியல் வாதியின் வாரிசு போலவோ  அவ்வளவு எளிதானது இல்லை. மரணபயம் என்பது அவனுக்கு துளியும் இல்லை. காரணம் மூன்று தலைமுறை கடந்து தொடர்கின்றது .தமிழர்மீது  யுத்தம் ஆனாலும் தலைக்கு மேல் நாகபாசுரம் போல மரணம் இப்போது இருக்கின்றது.இன்று மரணமோ இல்லை அடுத்த நொடி மரணமோ என்று தெரியாத நிச்சயம் அற்ற வாழ்க்கை.

பிரெஞ்சு நோர்மண்டி தரை இறக்கம் போலவும், ஸ்டாலின் கிராட்டு சமர் போலவும் கண் எதிரே வீரச்சாவினைத் தழுவும் போராளிகள் ,அவயங்கள் இழக்கும் வீரவேங்கைகள் . காலையில் காண்பவரை மாலையில் காணக்கிடைக்காது,

மண்ணுக்காக தம் உயிரை தாரை வார்த்து வித்தாகிப் போவார்கள் வீரத்துடன் இது பழகிபோன விடயமாக நாளாந்தம் நடக்கும் விடயமாக மாறிவிட்டது எல்லாப்போராளிகள் போலவே ரகுவின் வாழ்க்கையிலும்.

சிலவேளை நாம் வெல்வோம் என்ற கோஷத்துடன் கொலவெறித்தாண்டவம் ஆடிவரும் இனவாத இராணுவத்துடன்  காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து சண்டை நடக்கும் .இரண்டும் மூன்று நாட்கள் கூட தொடர்ந்து சண்டை நடக்கும்,!

இனவாத ஊடகம் தனிக்கை என்று உள்நாட்டில் கவசம்போட்டாலும் கசிந்துவிடும் கடல்கடந்து  வெளிநாட்டு சுதந்திர ஊடகத்திற்கு .ஏன் நம்மவர் அறியக்கூடாதா என்று விடைதேடினால் வீட்டிற்கு வரும் வெடிகுண்டு .கேட்டுப்பாருங்கள் ஆய்வுக்களம் எழுதும் இக்பால் அத்தாஸ் வாழும் சாட்சி இனவாத நாட்டில் .!

அதுமட்டுமா??போர்களத்தில் உணவு ,தண்ணீர் இருக்காது,சோற்றைக்காண்பது கடவுளை காண்பது போல இருக்கும்.நெல்விளைந்த எங்கள் நெஞ்சம் போன்ற தாய்பூமி எங்கும் கந்தக குண்டுமழை பொழிந்த இறையாண்மை ஆட்சியினர் மீது எந்த இணைத்தலைமை நாடும் நிறுத்துங்கள் என்று குரல் கொடுக்கவில்லை .தமிழர் குரலை மட்டும் அடக்கி வாசியுங்கள் என்று அதிகாரப்பாட்டல்லவா பாடினார்கள்!

காயம்  அடைகின்ற நண்பர்களை வாகனத்தில் ஏற்றிவிட்டு வரும் போது அங்கம் எல்லாம்இந்தமண்ணு எங்கள் சொந்த மண் என்ற தன்மானத்தில்  அந்தக் குருதி சிந்தியிருக்கும்.

அதை கழுவ முடியாது தண்ணீர் இருக்காது.எங்கும் நீர் இருந்த பூமியில் தடைகள் போட்டு அணைகள் எல்லாம் பெருக்கு எடுக்காமல் இருக்க போர் வெறியர்கள் வாய்க்கால்கள் மீது கொட்டிய சீமெந்து எந்த சுனாமி நிதியில் சுட்டதோ ?யார் அறிவார்கள் ??,ஆனாலும் தேசத்துக்காக ஒருவன் சிந்திய குருதி என்பதால் அதில் வீரமும் ,பற்றும் இருக்கும்.அதில் பிரதேசவாத வாடை வீசாது தாய்  மண்வாசமே வீசும்.

கோபாலபுரத்தில் குந்தியிருந்து ஈழம் காண்பேன் ஈழம் காண்பதே என் இலட்சியம் என்று அரசியல் நாடகம் போடும் ஈனப்பிறவிக்கு தெரியுமா? ஈழம் காண்பது ஒன்றும் திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதுவது போல இல்லை என்று.
பெற்றவர்கள் கூடவந்தவர்கள் நேசித்தவர்கள் எல்லாரையும் நெஞ்சில் இருந்து நீக்கி தூய மண் மீது நேசிப்பில் தாய்நாட்டிற்காக போராடும் உணர்வை கவிதையாகவோ ,கதையாகவோ வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.தேசத்திறாக போராடுகின்றோம் என்ற விடிவெள்ளி உணர்வைத்தவிர வேறு எதுவும் மனதில் இருக்காது.
போராட்டச் சூழலில் ரகு சுகியை முழுவதும் மறந்தே போய்விட்டான்.
சுகிக்கு ரகுவில் கடுமையான வஞ்சினம் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மண்நேசிப்பில் போராளியாக போய்விட்டானே !என்னை கடைசிவரை விரும்பவேயில்லை என்னைப்புரிந்துகொள்ளாத முரட்டுக்காளை போல படுபாவி என்னை தவிக்கவிட்டுவிட்டு இப்ப எங்க இருக்கின்றானோ ?எப்படி இருக்கின்றானோ ?அவன் உயிருக்கு போராட்டகளத்தில் எந்த பாதிப்பும் வரக்கூடாது. எங்க இருந்தாலும் அவன் பத்திரமாக இருக்கவேண்டும் என்று அவள் வேண்டிக்கொண்டாள்.
தனது பதினோராம் தர பரீட்சையில் பாஸ் ஆகிவிட்டால் சுகி அடுத்து உயர்தரத்தில் படிப்பதற்கு வேறு பாடசாலைக்கு சென்றுவிட்டாள்.
ரகுவை பற்றி அறிந்துகொள்ள அவள் பல முயற்சிகள் எடுத்தும் எந்த பயனும் இல்லை .

போராட்ட களத்தில் இருப்போரிடம் சுடச்சுட செய்தி சொல்லுமா ஊடகம் சினிமா ஒளியில் இருப்பவர்  மீது மட்டும் முன்னும் பின்னும் முகத்தை நீட்டும் துப்பாக்கி முணைபோல!அவன் பற்றிய எந்த தொடர்புகளும் இல்லை.அவனது நண்பர்களிடமும் போய் கேட்க முடியாது அவர்களும் போராட்டகளத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து போய்விட்டார்கள்.

நாம் நேசிப்பவர்கள் நம்காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை பார்த்துக்கொண்டு இருந்தாலே பாதி வலிகுறைந்துவிடும். ஆனால் அவர்கள் பிரிந்துவிடும் போது அதுவும் அவர்கள் பற்றிய எந்த தகவலும் தெரியாத போது அது கொடுமையிலும் கொடுமை.!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book