கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் -சங்கடஹர சதுர்த்தி வந்த கதை!
பிள்ளையார் குளிக்கத் தயாராய்க் காத்துட்டு இருக்கார். கீழே பாருங்க, சாப்பாடு அவருக்குக் கொடுக்கிறாங்க, எல்லாருக்கும் உண்டு, அம்பியைத் தவிர! 😛 இன்னிக்கு விஜய் தொலைக்காட்சியிலே பால கணேஷ் குழந்தைகளுக்கான கார்ட்டுன் படம் போட்டாங்க. ஹிஹிஹி, நானும் குழந்தை தானே, பார்த்துட்டு இருந்தேன்! நல்லாவே எடுத்திருக்காங்க, என்றாலும் இசை திரைப்பட இசையாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாமோ??? ஆனால் பிள்ளையார், ராக்-அன் -ரோல் ஆடுகின்றார், ஆங்கில இசைக்குக் கணங்களோடு ஆடுகின்றார், ஸ்கேட்டிங் செய்கின்றார், ஐஸ் ஸ்கேட்டிங் செய்கின்றார், சர்ஃபிங் செய்கின்றார். இப்படி மிக நாகரீகமாகவே குழந்தைகளின் மனதைக் கவருகின்றார். உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு விசிலும் அடிக்கின்றார் மூஷிகனைப் பார்த்து, கொழுக்கட்டை திருடும்போதும், நந்தியை ஜெயிக்கும்போதும், கணங்களை ஜெயிக்கும்போதும். சிவனின் உடுக்கையைத் தூக்கிக் கொண்டு கணங்களோடு ஆடுவது, நம்ம வீட்டில் குழந்தை அப்பாவோட பேனா, பென்சில், மொபைல் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாடும் நினைப்பே வருது. நந்தி மேல் சவாரி செய்யும் கணநாயகனைக் கொழுக்கட்டை பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது பார்த்தால் குழந்தைகளின் மனதை நாம் மாற்றச் செய்யும் ஓர் முயற்சியாகவே மனதில் பதிகின்றது. ஜெரி மாதிரியான பாத்திரப் படைப்பு மூஷிகனுக்கு. அதனால் நல்லாவே நடிக்குது அந்தக் கார்ட்டூன் பாத்திரமும்! :))))))))))))) கொட்டம் அடிக்கிறார் பிள்ளையார். மறுபடி வந்தாலும் பார்க்கலாம், என்னைப் பொறுத்தவரை!
************************************************************************************
விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.
ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான். “ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன்.
https://commons.wikimedia.org/wiki/File:Ganesh_maharashtra.jpg