அடுத்து நாம பார்க்கப் போறவர் ஸ்ரீமஹாகணபதி. இவர் ராஞ்சன்காமின் என்னும் இடத்தில் கோயில் கொண்டுள்ளார். இந்தத் தலம் புனே-கோரேகான் – அஹமத் நகர் நெடுஞ்சாலையில் புனேயில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
திரேதா யுகத்தில் கிருத்சதமர் என்னும் பெயரில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். இவரே கணபதியின் மூல மந்திரமான, “கணானாம் த்வா” எனத் தொடங்கும் மந்திரத்தை உருவாக்கியவர் ஆவார். இந்த முனிவர் ஒரு தரம் இருமல் தாங்க முடியாமல் உரக்க இருமினார். அந்த இருமலில் இருந்து சிவப்பான குழந்தை ஒன்று அவர் வாயிலிருந்து வெளி வந்தது. அந்தக் குழந்தைக்கு கணபதி மூலமந்திரத்தை உபதேசித்து, கணேசனை நோக்கி நீண்ட தவம் செய்யும்படியும், நினைத்தது நடக்கும் என்றும் கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே அந்தக் குழந்தையும் தவம் செய்து வந்தான். கணேசர் மிகவும் மகிழ்ந்து அந்தக் குழந்தைக்குக் காக்ஷி அளித்து, பொன், இரும்பு, வெள்ளி ஆகிய மூன்று உலோகங்களால் ஆன முப்புரத்தையும் வழங்கினார். அவனுக்குத் திரிபுரன் எனவும் பெயர் சூட்டினார். மேலும் தன் அம்மையும், அப்பனுமான ஈசனைத் தவிர வேறு எவராலும் திரிபுரனை வெல்ல முடியாது என்றும் வரமளித்து மறைந்தார்.
திரிபுரன் வரங்கள் கிடைக்கவும் மெல்ல மெல்ல ஆணவம் கொண்டான். அகந்தை புத்தியை மறைத்தது. அநியாயம் செய்யத் தொடங்கினான். மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். திருமணம் செய்து கொண்டதன் மூலம், சண்டன், பிரசண்டன் என்னும் பெயரில் இரு புத்திரர்களைப் பெற்று ராக்ஷசர்களாக வளர்த்து தேவர்கள் அனைவருக்கும், பிரம்மா, விஷ்ணு உள்பட அனைவரையும் கதிகலங்க அடித்தான். நாரதர் ஈசன் ஒருவனால் மட்டுமே திரிபுரனை அடக்க முடியும். கஜானனைத் துதித்தால் வழி பிறக்கும் என யோசனை சொல்ல அனைவரும் அவ்வாறே ஓம் எனத் தொடங்கி கணபதி மூல மந்திரத்தை உபாசிக்க ஆரம்பித்தனர். கணபதி காக்ஷி அளித்தார். தேவர்களின் துக்கத்தை அறிந்து கொண்ட அவர் ஈசனிடம் தானே நேரில் வேண்டிக்கொள்வதாயும், அவர் திரிபுரனை அழித்து தேவர்களைக் காப்பார் என்றும் வாக்குறுதி கொடுக்கிறார். என்றாலும் திரிபுரனையும் ஒரு வழி பண்ண வேண்டும் என நினைத்த கணபதி ஒரு பிராமண இளைஞனாக உருமாறி திரிபுரனிடம் சென்றார். தன் பெயர் கலாதரன் என்றும் தனக்கு வேதத்துடன் கூடவே 64 கலைகளும் தெரியும் எனவும் கூறிக்கொண்டார்.
64 கலைகளில் ஒன்றை அப்போதே செய்து காட்டும்படி திரிபுரன் கேட்க, என்ன பரிசு கொடுப்பாய் என கணேசன் கேட்கிறார். வந்திருப்பது கணேசனே என்பதை அறியாத திரிபுரன் தன் உயிரையே கொடுப்பதாய்ச் சொல்கிறான். உடனேயே தன் வலிமையால் மூன்று ஆகாய விமானங்களை உருவாக்கினார் கணேசன். அவற்றைத் திரிபுரனுக்கு அளித்தார். இவற்றில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் எனவும், எது கேட்டாலும் கிடைக்கும் எனவும் கூறினார். கலாதராக வந்த கணேசனுக்குப் பரிசளிக்க விரும்பிய திரிபுரன் என்ன வேண்டும் எனக் கேட்க ஈசனிடம் உள்ள சிந்தாமணிச் சிற்பம் தான் வேண்டும் என்று கணேசன் சொல்கிறார். ஈசனோடு போரிட்டுச் சிந்தாமணிச் சிற்பத்தைக் கைப்பற்ற திரிபுரன் கிளம்பிச் செல்கிறான். முதலில் சிந்தாமணிச் சிற்பத்தைத் தனக்குத் தரும்படி ஈசனிடம் கேட்டுப் பார்க்கிறான் திரிபுராசுரன். ஈசன் மறுக்கப் போர் தொடங்கியது. அந்தப் போரில் ஈசனின் தேரின் அச்சு முறிய, சிந்தாமணிச் சிற்பத்தை எப்படியோ கைப்பற்றிய திரிபுராசுரன் அதை எடுத்துக்கொண்டு திரும்புகிறான். பார்வதியோ மனம் வருந்தி தன் தகப்பன் வீட்டிற்கு ஆறுதலுக்குச் செல்கிறாள்.
ஆனால் ஈசனிடம் மட்டுமே இருக்க வேண்டிய சிந்தாமணிச் சிற்பம் அசுரன் கையில் வந்ததால் இருக்குமா என்ன? பாதி வழியிலேயே சிந்தாமணிச் சிற்பம் மாயமாய் மறைந்து போகிறது. திரிபுரனுக்குக் கவலையோடு, கோபமும் அதிகரிக்க அவனுடைய அட்டகாசம் அதிகம் ஆகிறது. ஈசனோ கணபதி மூலமந்திரத்தைத் தியானித்து மீண்டும் போருக்கு ஆயத்தமாகிறார். கணபதி பீஜ மந்திரத்தை உச்சரித்து திரிபுரன் மீது அம்புவிடத் தயாராகிறார். பூமாதேவி தானே முன்வந்து ரதமாக மாறி ஈசனைத் தாங்க, சூரிய, சந்திரர்கள் அந்த ரதத்தின் சக்கரங்களாக மாறுகின்றன. பிரம்மன் சாரதியாக ரதத்தை ஓட்ட, மேரு மலை வில்லாக மாறுகிறது. மஹாவிஷ்ணுவே அம்பாகவும், அஷ்வினி குமாரர்கள் குதிரைகளாகவும் மாறுகின்றனர். ஈசன் எய்த அம்பானது திரிபுரனைத் தாக்க பளீரென்ற மின்னல் அண்ட பகிரண்டத்தையும் நடுங்க வைக்கிறது. திரிபுரன் கீழே விழுந்து இறக்க அவன் உடலில் இருந்து கிளம்பிய ஜோதியானது ஈசனிடமே அடைக்கலம் ஆனது. திரிபுரங்களையும் தன் சக்தியால் எரித்தார் ஈசன். பின்னர் இந்நிகழ்வின் நினைவாக மணிப்பூர் என்னும் இடத்தில் கணேசப் பெருமானுக்கு ஒரு கோயில் அமைக்கப் பட்டது. அதுவே தற்சமயம் ராஞ்சன்காமின் என்ற பெயரால் வழங்கப் படுகிறது.
ஸ்ரீமஹா கணபதி கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். இரு கால்களையும் குறுக்காக வைத்து அமர்ந்த கோலம். சித்தி, புத்தி இருபக்கமும் காணப்படுகின்றனர். இந்தக் கோயில் பெஷாவர்கள் காலத்தில் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. அஷ்ட விநாயகர்களிலேயே மிகவும் அழகு வாய்ந்த இந்த விநாயகர் அலங்காரப் பிரியரும் கூட என்கின்றனர். இந்நகரில் பயணிகளுக்குத் தங்குமிடங்களும், சத்திரங்களும் உள்ளன