குழ ந்தைகளான உங்களுக்கெல்லாம் ஔவைப் பாட்டியைத் தெரியாமல் இருக்காது இல்லையா? அந்த ஒளவைப் பாட்டி சிறு வயதிலேயே அவள் தாய், தகப்பனால் கைவிடப் பட்டு வேறு ஒருவர் தன் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்து வந்த பெண் ஆவார். அவர் சிறு வயதில் இருந்தே விநாயகரை வழிபட்டு அவர் மேல் மிக்க பக்தி பூண்டு வழிபாடுகள் நடத்தி வந்தார். திருமணத்தில் அவருக்கு ஆசையே இல்லை. என்றாலும் பெற்றோர் வளர்ப்பாக இருந்தாலும் தங்கள் மகளுக்கு முறையாகத் திருமணம் செய்து பார்க்கவே ஆசைப் பட்டனர். ஆகவே ஒரு பையனைப் பார்த்து நிச்சயமும் செய்தனார். ஆனால் ஒளவைக்கோ திருமணத்தில் நாட்டமே இல்லை. என்ன செய்வது? தன் ஊரில் இருந்த குளத்தங்கரைப் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டார் ஒளவைப் பாட்டி. ஆனால் அப்போது அவர் பாட்டி அல்ல. இளம்பெண் தான். அந்த இளம்பெண் இவ்வாறு வேண்டித் துதித்ததும் அவளுக்கு உண்மையிலேயே திருமணத்தில் நாட்டம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட பிள்ளையார், அவளை அந்தச் சிறு வயதிலேயே கிழவி ஆக்கினார். இவ்விதம் சிறு வயதிலேயே கிழவி ஆன அந்தப் பெண்தான் ஒளவைப் பாட்டி என்று நம் அனைவராலும் அழைக்கப் படுகின்றாள்.

இந்த ஒளவைப் பாட்டி விநாயகர் மேல் பல பாடல்கள் இயற்றி இருந்தாலும், இவரின் விநாயகர் அகவல் என்னும் பாடல் தொகுப்பு மிகுந்த பிரசித்தி அடைந்த ஒன்று. இந்தப் பாடலை அவர் எப்போது இயற்றினார் தெரியுமா? ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் கைலை செல்ல இறைவனை வேண்ட, இறைவனும் அவருக்கு யானனயை வாகனமாய் அளித்து அருளி, விரைவில் கைலை வருமாறு பணிக்கின்றார். அவர் இனிய நண்பர் ஆன சேரமான் பெருமாள் நாயனார் என்னும் அரசரும் இதை அறிந்து தம் குதிரை மேல் ஏறிக் கைலைப் பயணத்தைச் சுந்தரமூர்த்தி நாயன்மாருடன் தொடங்குகின்றார். செல்லும் வழியில் திருக்கோவலூர் என்னும் ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலில் ஒளவைப் பாட்டி விநாயகருக்குப் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும், ஒளவையிடம் தாங்கள் திருக்கைலை செல்வதாய்த் தெரிவிக்க ஒளவைப் பாட்டியும், சரி என்று சொல்லிவிட்டுத் தன் வழிபாட்டைத் தொடர்ந்தாள். வழிபாடு நடக்கும்போது ஒளவைப் பாட்டி, “சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட” என்று ஆரம்பிக்கும் விநாயகர் அகவலைப் பாடித் துதிக்கின்றார். இந்தப் பாடல் தொகுப்பானது யோக சாஸ்திரங்களைச் சொல்லித் தருவது. இதில் யோகத்தின் ஆரம்பமான மூலாதாரத்தில் குடி இருக்கும் கணபதியைத் துதிப்பதில் ஆரம்பித்துக் கடைசியில் சகஸ்ராரம் என்னும் யோகசித்தியை அடையும் விதம் குறித்துப் பாடியுள்ளார்.

“சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி”

என்று பாடி அந்தச் சதாசிவனின் உள்ளொளியைக் காட்டித் தந்தது பற்றிப் பாடி இருக்கின்றார். இதனால் மனம் மகிழ்ந்த விநாயகர் ஒளவைப்பாட்டியைத் தன் துதிக்கையால் ஒரே தூக்காகத் தூக்கிக் கைலையில் உட்கார்த்தி வைத்துவிட்டார். ஒளவைப் பாட்டிக்கு மிக்க மகிழ்ச்சி. அப்போது தான் மெதுவாக அங்கே வந்தனர் சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும். இருவருமே ஒளவையைப் பார்த்துத் திகைத்தனர். என்ன இது? நாம் பார்க்கும்போது கிழவி கிளம்பக் கூட இல்லையே? இப்போ இங்கே எப்படி என்று கேட்க ஒளவை பதில் சொல்கின்றாள்:

“மதுர மொழி நல் உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை
முதிர நினைய வல்லார்க்கரிதோ முகில் போன் முழங்கி
அதிர நடந்தீம் யானனயும் தேரும் அதன்பின் வருங்
குதிரையுங் காதங் கிழவியும் காதங் குல மன்னரே!”

என்று தான் மதுரமான மொழியுடைய உமையம்மையின் புதல்வன் ஆன விநாயகனைத் துதித்து வந்ததால் அவன் அருளாலே, யானைக்கும், குதிரைக்கும் முன்னாலேயே கைலை வந்தடைய முடிந்தது என்று சொல்கின்றார். விநாயக வழிபாட்டுக்குக் கைமேல் பலன் கிடைக்கிறது அல்லவா?

Ganesha - Indian Hindu Deity - Bronze