"

ஒரு முறை தேவேந்திரன் பூவுலகிற்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த மனிதர்களுக்கே உரிய பசியும், தாகமும் அவனுக்கும் ஏற்பட்டு விட்டது. பொதுவாகத் தேவர்கள் அமுதம் உண்டவர்கள் என்பதால் நம்மைப் போல் பசி, தாகம் அவர்களுக்குக் கிடையாது என்று சொல்லுவதுண்டு அல்லவா? மிக்கக் களைப்புடன் உணவைத் தேடி அலைந்த அவன் கண்களில் பட்டது ஒரு அழகிய ஆசிரமம். அருகே சென்று பார்த்தால் அது கபில முனிவரின் ஆசிரமம். சென்று முனிவரைப் பணிந்த தேவேந்திரனைப் பார்த்த முனிவர் தன் விருந்தோம்பலைக் கைவிடாமல் அவனைக் கனியும், பாலும் கொடுத்து உபசரித்தார்.

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று!”

என்பது வள்ளுவன் வாக்கல்லவா? முனிவரின் உபசரிப்பினால் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ஏதேனும் பொருளைக் கொடுக்க எண்ணி, மிகவும் யோசித்துக் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி என்னும் அபூர்வ மணியைக் கபில முனிவருக்குப் பரிசாக அளித்தான்.

கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி கிடைத்தும் பெரிதும் கர்வமோ, அதை வீணாகவோ உபயோகிக்காமல் முனிவரும் தனக்கு மட்டுமே அதைச் சொந்தம் ஆக்கிக் கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் வகையிலேயே அதைப் பயன்படுத்தி வந்தார். ஒரு நாள், காட்டுக்கு ஒரு அரச பரிவாரம் வந்தது, வேட்டைக்கு. அந்தப் பரிவாரத்தின் அரசன் கணன் என்பவர். அவர் வேட்டையாடி வரும் வழியில் கபில முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். மன்னனாக இருந்தாலும் தவமுனிவர்களையோ, ரிஷிகளையோ கண்டால் வணங்குவது மரபல்லவா? அதன்படி ஆசிரமத்திற்குள் சென்று முனிவரைப் பணிந்தான் கணன் என்னும் மன்னன். மன்னனை வரவேற்ற முனிவர், அவனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும், சிந்தாமணியின் உதவியால் அற்புதமான விருந்து அளித்தார். விருந்துண்ட மன்னன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் முனிவரின் மேல் பொறாமை கொண்டான்.

“என்ன? நாடாளும் மன்னன் நான்! காட்டில் தவம் செய்யும் ரிஷியிடம் போய் இந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இருப்பதா? என்னையே சேர வேண்டியது இந்தச் சிந்தாமணி!” என எண்ணினான் மன்னன் கணன். முதலில் முனிவரிடம் பணிவோடு கேட்போம், கொடுத்து விடுவார் என நினைத்துச் சிந்தாமணியைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டான். முனிவர் சொன்னார்:”மன்னா, இது எனக்குப் பரிசாக வந்தது. தேவேந்திரனால் கொடுக்கப் பட்டது. பிறருக்குப் பரிசாக வந்த ஒரு பொருளை நீ அடைய எண்ணுவது தவறு. மேலும் பரிசுப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பதும் தவறு! என்னால் கொடுக்க முடியாது!” என்று திட்டவட்டமாய்ச் சொன்னார் கபில முனிவர். உடனேயே மன்னன் பெரிதாக நகைத்துவிட்டு முனிவரிடம் இருந்து பலவந்தமாய்ச் சிந்தாமணியைப் பறித்துக் கொண்டு போனான். ஆசிரமம் ஒளி இழந்தது. முனிவரின் மனமோ துயரத்தில் ஆழ்ந்தது. அடுத்தது என்ன? யோசனையில் ஆழ்ந்தார் முனிவர்.

அப்போது ஒரு அசரீரி எழுந்து, “முனிவரே, கணனிடம் இருந்து சிந்தாமணியைத் திரும்பப் பெறும் வல்லமை படைத்தவர் கணங்களுக்கெல்லாம் அதிபதியான “கணபதி” ஒருவரே! அவரைப் பூஜித்து வேண்டுகோள் விடுத்தால் உமது துயரம் நீங்கும்.” என்று சொன்னது, அந்தக் குரல். உடனேயே கபில முனிவர் கணபதியைப் பல்வேறு துதிகளால் துதித்து, கணபதி ஹோமம், யாகங்கள் போன்றவை செய்து பூஜித்தார். மிகவும் மன ஒருமையுடன் கணபதியை வணங்கி வழிபட்டார். அவர் முன் தோன்றிய கணபதி, தாமே நேரில் சென்று கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்று வருவதாய்ச் சொல்லிவிட்டுக் கணனோடு கணபதியே நேரில் சென்று போரிட்டார். கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்ற கணபதி, அதைக் கபில முனிவரிடம் திருப்பித் தர, முனிவரோ அதை முழு மனதோடு கணபதிக்கே பரிசளித்தார். “விநாயகரே, இந்த உயர்ந்த மணி இருக்க வேண்டிய இடம் உம்மிடமே. நீர் அதை எப்போதும் தரித்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன்.” என்று சொல்லி அதைக் கணபதிக்கே அளித்து விட்டார். முனிவர் விலை உயர்ந்த பொருளைக் கணபதிக்குக் கொடுத்தாலும், அதைக் கணபதி என்றும் அணிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு பணிவான வேண்டுகோளாகவே வைத்தார் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

விநாயகர் அன்று முதல் “சிந்தாமணி விநாயகர்” எனவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/c/ce/Ganesha_statue_from_Andra_Pradesh.jpg

Share This Book