"

ஒரு முறை சிவ கணங்களில் ஒருவர் மகாவிஷ்ணுவின் சங்கை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். செய்வதறியாது திகைத்த விஷ்ணு, சிவனிடம் சென்று முறையிடச் சென்றார். அப்போது தன் சங்கின் ஒலி அவருக்குக் கேட்டது. சங்கொலி கேட்ட திசை நோக்கிச் சென்றார் அவர். சிவ கணங்களில் ஒருவர் அந்தச் சங்கை ஊதிக் கொண்டு இருப்பதைக் கவனித்தார். உடனே சிவனிடம் சென்று முறையிட, அவரும் விநாயகரைத் துதித்து வேண்டச் சொல்ல, விஷ்ணுவும் அவ்வாறே விநாயகரைத் துதிக்கின்றார். விநாயகர் அந்தச் சங்கை சிவகணத்திடம் இருந்து வாங்கித் தான் ஊதி விட்டு, விஷ்ணுவிடம் கொடுக்கின்றார். இந்தச் சங்கு ஊதும் கோலத்தில் ஆன விநாயகர் திரு உருவம் சிதம்பரம் கோயிலில் இருக்கின்றது. இந்த விநாயகருக்கு வேண்டிக் கொண்டால், சிறு குழந்தைகளுக்கு வரும், “பாலாரிஷ்டம்” என்னும் நோய் தீரும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது. இந்த விநாயகர் திரு உருவம் சிதம்பரம் கோயிலின் பிராகாரத்தில் அர்த்தஜாம சுந்தரர் சந்நிதிக்கு அருகே காணப்படுகின்றது.

காக்கும் கடவுள் ஆயிற்றே விஷ்ணு?? அவருக்குக் கூடவா இப்படி விநாயகரைத் துதிக்க வேண்டி இருந்தது என்று தோன்றுகிறது அல்லவா? விஷ்ணுவுக்கு மட்டுமல்ல. விநாயகரின் தந்தை ஆன சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனே விநாயகரைத் துதிக்காமல் சென்றதால் கஷ்டப் பட்டான். ஏற்கெனவே பார்த்திருப்போம் என்றாலும், திரும்பப் பார்ப்போமா?? அருணகிரிநாதர் தன் திருப்புகழில் முதலில் பாடிய விநாயகர் வாழ்த்தில் கீழ்க்கண்ட வரிகளின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கெல்லாம்???

“முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா” என்று சொல்கின்றார் அருணகிரியார். முப்புரத்தையும் எரித்து, திரிபுர சம்ஹாரம் செய்ய சிவன் தேரில் ஏறிவிட்டாராம். அதுவும் எப்படி???? தேவர்கள் அனைவரும் ஆயுதங்களாகவும், வாகனங்களாகவும் மாறி நிற்க, மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாக அந்த வில்லில் கட்டி, அந்த ஸ்ரீமந்நாராயணனையே அம்பாக மாற்றிக் கொண்டு, சூரிய, சந்திரத் தேரிலே புறப்பட்டாராம் ஈச்வரன். ஆனால் கிளம்பிய தேர் நின்று விட்டதாம். ஏன்? அச்சு முறிந்து விட்டது. அதனால் தேர் நின்றுவிட்டது. அப்போது தான் புரிந்ததாம் பரமேஸ்வரனுக்கு. விநாயகனை வழிபடாமல் தான் கிளம்பியதும், தேவர்கள் அனைவருமே விநாயக வழிபாடு செய்யாததும் புரிந்ததாம். உடனேயே விநாயகரை வழிபட, தேர் அச்சு மீண்டும் பொருத்தப் பட்டு சிவனார் தேரிலேறித் தன்னுடைய அட்டஹாசம் என்னும் சிரிப்பால் திரிபுர சம்ஹாரம் செய்தாராம். இந்தத் தேர் முறிந்த இடம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ள அச்சிறுபாக்கம் என்னும் சிறு ஊர் ஆகும் என்றும் சொல்கின்றனர்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9a/’Seated_Ganesha’,_1200-1300,_India,_Karnataka_state,_schist,_Asian_Art_Museum_of_San_Francisco.JPG

Share This Book