இது தவிர, பாற்கடலைக் கடையும்போதும், தேவர்களோ, அசுரர்களோ விநாயக வழிபாடு இல்லாமலேயே கடைய ஆரம்பித்தனர். வாசுகி பாம்பு தான் கயிறு, மேரு மலை, மத்து. மேரு மலையில் வாசுகியைக் கட்டி இரு பக்கமும் இழுக்கின்றனர். பாற்கடலில் இருந்து அமிர்தம் வரவேண்டியதற்குப் பதிலாக வாசுகி கக்கும் விஷம் தான் வருகின்றது. அந்தச் சூடு தாங்காமல் தேவாசுரர்கள் அலறுகின்றனர். வெண்மையாக அன்று வரை இருந்த மகாவிஷ்ணுவோ, இந்த விஷக் காற்றுப் பட்டதும் நீலமாகிவிட்டார். திடீரென ஒரு பெரும் சத்தம்!! வாசுகியால் முடியவில்லை, கயிறு தளர, மேரு மலை சரியத் தொடங்கியது. கலங்கினர் அனைவரும். அப்போது தோன்றியதாம் விநாயகரை வழிபடாமல் தொடங்கி விட்டோம் எனத் தேவேந்திரனுக்கு. உடனே விநாயகரை வழிபட எண்ணினான். ஆனால் திரு உருவம் கிடைக்கவில்லையே?? கடல் நுரையையே விநாயகராய்ப் பிரதிஷ்டை பண்ணினான். அந்தக் கடல் நுரையிலே விக்னேஸ்வரனை ஆவாஹனம் செய்து பூஜை, வழிபாடுகள் செய்ய வாசுகியும் மீண்டும் தயார் ஆனான். பொங்கிய ஆலகாலத்தையும் விஷ்ணு, பரமசிவனுக்குக் கொடுக்கச் சொல்ல, அந்த விஷத்தை ஆலகால சுந்தரர் ஏந்தி வந்து சிவனிடம் கொடுக்க சிவன் அதை ஒரே வாயாக முழுங்க, விஷம் உள்ளே போனால் அண்ட சராசரங்களுக்கும் ஆபத்து நேரிடும் என உணர்ந்த அம்மையோ, சிவன் கழுத்தைத் தன் திருக்கரங்களால் பிடிக்க, சிவன் “திருநீலகண்டன்” ஆகி ஆசிகள் புரிய, பாற்கடல் கடையப்பட்டு, அமிர்தம் கிடைத்தது. கடல் நுரையால் ஆன விநாயகர் திரு உருவம் கும்பகோணம் சுவாமி மலைக்கு அருகே திருவலஞ்சுழி என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இன்றும் திருவலஞ்சுழியில் விநாயகரைக் கடல் நுரை உருவில் காணலாம்.
விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்,. இன்னும் தொடரும்.
மாகத ரிஷியின் மகன் கஜாசுரன் என்பவன். அவன் ரிஷி புத்திரனாக இருந்தாலும், அவன் தோழர்கள் அனைவருமே அரக்கர்களாக இருந்தமையால் அவனுக்கும் அரக்க குணமே மேலோங்கி இருந்தது. அனைவரையும் துன்புறுத்தி வந்தான். முக்கியமாய் அவனைப் பார்ப்பவர்கள் அனைவருமே தலையில் குட்டிக் கொண்டு தோர்பி கரணம் போட்டுக் கொண்டு வணங்க வேண்டும் என ஆணையே பிறப்பித்திருந்தான். இந்த கஜாசுரன் ஒரு முறை விண்ணில் பறந்து கொண்டிருந்த போது, தன் வலிமையைக் காட்டுவதற்காக அண்டச் சுவர் ஒன்றை இடித்துத் தள்ள, ஆகாய கங்கை பொத்துக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. அத்தனை வெள்ளமும் அனைத்து உலகங்களையும் மூழ்க அடிக்க, உலகே ஜலப் பிரளயத்தில் மிதந்தது. அண்ட சராசரமும் வெள்ளத்தில் மூழ்க அனைவரும் கதி கலங்கினார்கள். என்ன செய்வது எனத் திகைத்தனர். பூலோகத்தில் ஒரே ஒரு இடம் மட்டுமே மூழ்காமல் இருக்கவே, அனைவரும் அதிசயத்துடன் அங்கே வந்து ஒதுங்கலாம் என நினைத்து வந்து பார்த்தனர்.
அங்கே விநாயகர் வீற்றிருந்தார். உடனேயே தேவர்கள் அனைவரும், விநாயகரைத் துதித்து வணங்க, விநாயகரும் தம் துதிக்கையால் அனைத்துப் பிரளய நீரையும் உறிஞ்ச, வெள்ளம் வடிந்தது. தேவர்கள் கஜாசுரனைப் பற்றிச் சொல்ல விநாயகர் அவனுடன் போரிட்டு வென்று, அவனைத் தன் வாகனமாக மாற்றிக் கொண்டார். இந்த விநாயகர் “கலங்காமல் காத்த விநாயகர்” என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் இடம் பெற்று அருள் பாலித்து வருகின்றார். இன்னும் விநாயகரால் காவிரி நதி பெருக்கெடுத்து ஓடிய வரலாற்றை அடுத்துக் காணலாம்.
https://upload.wikimedia.org/wikipedia/commons/6/65/Ganesh_Festival.jpg