"

சூரியனைக் குறித்துத் தான் செய்த தவம் மூலம் தனக்குக் கிடைத்த ஒப்பற்ற மணியான ச்யமந்தகத்தைக் கிருஷ்ணர் கேட்டது சத்ராஜித்திற்குப் பிடிக்கவில்லை. என்னதான் கிருஷ்ணர் மணியைத் தனக்காகக் கேட்கவில்லை என்றாலும், சத்ராஜித் அந்த மணியைக் கிருஷ்ணர் தனக்கென ஆசைப்பட்டுக் கேட்டதாகவே நினைத்தான். அந்த மணியைத் தன் தம்பியான பிரசேனனிடம் கொடுத்து வைத்தான். பிரசேனன் ஒரு நாள் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். இந்த ச்யமந்தக மணியை வைத்திருப்பவர் அனுஷ்டிக்க வேண்டிய ஆசார நியமங்களைக் காட்டில் பிரசேனனால் கடைபிடிக்க முடியவில்லை. அவனுடன் கூட வந்தவர்களில் கிருஷ்ணரும் ஒருவர் என ஸ்காந்த புராணம் சொல்லுகின்றது. நம் கதையும் அதை ஒட்டியே போகும். கூட வந்த கிருஷ்ணரையும் மற்றவர்களையும் பிரசேனன் பிரிந்துவிடுகின்றான். தனியாய்ச் சென்ற பிரசேனன் ஒரு வலிமை வாய்ந்த சிங்கத்திடம் மாட்டிக் கொள்ள, சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு மணியை ஏதோ உண்ணும் பொருளென நினைத்து வாயில் கவ்விக் கொண்டு சென்றது.

காட்டில் உள்ளே ஒரு மலைக்குகையில் நம்ம ராமாயணத்து ஜாம்பவான் தன் குடும்பத்தோடு வசித்துக் கொண்டிருந்தார். அவர் இங்கே எங்கே வந்தார் என்பதை அப்புறம் தனியாச் சொல்றேன். இந்த ஜாம்பவானுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள், ஜாம்பவதி என்ற பெயரில். அந்தப் பெண் பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர் ஜாம்பவானுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஸுகுமாரன் என்ற பெயரிட்டு அந்தக் குழந்தையை மிக மிக ஆசையுடன் வளர்த்து வந்தார் ஜாம்பவான். ஜாம்பவான் காட்டில் உலாவிக் கொண்டிருந்தபோது வாயில் ஒளிவீசும் மணியுடன் வந்து கொண்டிருந்த சிங்கத்தைப் பார்த்தார். உடனேயே மிகுந்த பலசாலியான அவர் அந்தச் சிங்கத்தைக் கொன்றுவிட்டு மணியைத் தான் எடுத்துக் கொண்டார். அருமையாகப் பிறந்திருக்கும் தன்னுடைய ஆண் குழந்தைக்கு இந்த அபூர்வமான ஒளி வீசும் மணி ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கும் என நினைத்த ஜாம்பவான் ச்யமந்தக மணியைத் தன் அருமைப் பிள்ளையின் தொட்டிலில் மேலே கட்டி வைத்தார். தொட்டிலுக்குள்ளே இருக்கும் குழந்தைக் கரடி அந்தப் பொம்மையின் ஒளியைப் பார்த்துக் குதூகலித்துக் கூக்குரலிட்டுக் கொண்டு விளையாடியது. ஜாம்பவதிக்கும் தன் தம்பியின் விளையாட்டைப் பார்த்துக் குதூகலம் உண்டாக, அவளும் சந்தோஷம் அடைகின்றாள். இது இவ்வாறிருக்க, இங்கே காட்டினுள் வெகு தூரம் சென்ற கிருஷ்ணரும் மற்றவர்களும் பிரசேனனை எங்கும் காணாமல் தேடினார்கள். சூரிய அஸ்தமனமும் ஆகிவிட்டது.

காட்டில் மெல்லிய இருள் கவ்வத் தொடங்கியது. தற்செயலாக வானத்தைப் பார்த்த கிருஷ்ணர் கண்களில் பிறைச்சந்திரன் தென்பட்டான். அன்று நாலாம்பிறை நாளாக இருந்தது. நாலாம் பிறைச் சந்திரன் தான் பளிச்செனக் கண்ணில் தெரியும். அதே போல் கிருஷ்ணர் கண்ணிலும் பட்டது. ஆகா, நிலவு தோன்றிவிட்டதே, இனி இருட்டி விடும், காட்டில் இருக்க முடியாது என நினைத்த கிருஷ்ணர் த்வாரகைக்குத் திரும்பினார். கிருஷ்ணருடன் ப்ரசேனன் வராதது கண்ட சத்ராஜித்திற்குச் சந்தேகம் வருகின்றது. தம்பியைத் தேட ஆட்களை அனுப்ப, பிரசேனன் இறந்து கிடப்பது கண்டு சத்ராஜித் கோபம் அடைந்தான். ச்யமந்தக மணியை அடைய கிருஷ்ணர் செய்த வேலைதான் இது என நினைத்தான் சத்ராஜித். ஆட்களை அனுப்பியோ, அல்லது கிருஷ்ணரே தந்திரமாகவோ பிரசேனனைக் கொன்றுவிட்டு ச்யமந்தக மணியை அபகரித்துக் கொண்டதாய் த்வாரகை முழுதும் தென்படுவோரிடம் எல்லாம் சத்ராஜித் சொல்ல ஆரம்பித்தான். மெல்ல, மெல்ல நாட்கள் கடக்கக் கடக்க, சிலர் நம்பவும் ஆரம்பித்தனர். கிருஷ்ணர் மனம் சஞ்சலம் அடைந்தது.

ஆஹா, தான் ஒரு பாவமும் அறியாதிருக்கத் தன் மேல் இப்படி அபாண்டமாய்ப் பழி சுமத்துகின்றார்களே என மனம் வருந்திய கிருஷ்ணர் சத்ராஜித்தின் ஆட்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் காட்டுக்குச் சென்றார். பிரசேனன் இறந்து கிடந்த இடத்திலிருந்து தொடர்ந்து செல்ல ஆட்களையும் பணித்துத் தாமும் உடன் சென்றார். சிறிது தூரம் வரையிலும் ஒரு மிருகத்தின் காலடி ரத்தத்தில் தோய்ந்த நிலையில் காணப்பட்டது. சிறிது தூரத்திற்குப் பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் போனதும் சிங்கத்தின் செத்த உடலும் கிடைத்தது. சிங்கத்தின் உடல் கிடந்த இடத்திலே ஒரு பெரிய சண்டை நடந்திருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. மற்றோர் மிருகத்தின் காலடியும் தென்பட்டது. சிங்கத்தைவிடக் காலடி பெரியதாய் இருந்ததால் கரடியாகவோ, அல்லது வேறே ஏதோ மிருகமாகவோ இருக்கலாம் என நினைத்தார்கள். அந்தக் காலடிச் சுவட்டைப் பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு குகையில் கொண்டுவிட்டது. குகைக்குள் எட்டிப் பார்த்தால் ஒரே இருட்டு. சத்ராஜித்தின் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இந்த மாயக் கிருஷ்ணன் ஏதோ தந்திரம் செய்து இருட்டுக் குகையில் நம்மை எல்லாம் தள்ளப் பார்க்கின்றானே? நாம் இந்த ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவர்களாய் உள்ளே வர மறுத்தனர். கிருஷ்ணரும் சரி எனச் சம்மதித்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே செல்கின்றார். கிருஷ்ணரின் உடலின் பிரகாசமே வெளிச்சமாய்த் தெரிய கிருஷ்ணர் குகைக்குள்ளே நுழைந்தார்.

கிருஷ்ணர் குகையினுள் நுழைந்தபோது ஜாம்பவதி தன் தம்பியான சுகுமாரனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள். அதை ஒரு ஸ்லோகமாய்க் கீழே காணலாம்.

ஸிம்ஹ: ப்ரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:

ஸுகுமார்க மா ரோதீ தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:”

இந்த ஸ்லோகம் ஸ்காந்தத்தில் காணப் படுவதாய்த் தெரிய வருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், “சிங்கமானது ப்ரஸேநனைக் கொன்றது. அந்தச் சிங்கத்தை ஜாம்பவான் கொன்றார். ஸ்யமந்தகமணி இப்போது உனக்குத் தான் ஸுகுமாரனாகிய என் அருமைக் குழந்தையே, நீ இனி அழாதே!” என்று அர்த்தம் தொனிக்கும்படிப் பாடிக் கொண்டிருந்தாள் ஜாம்பவதி. கிருஷ்ணருக்கு நடந்தது என்னவென்று புரிந்துவிட்டது. உள்ளே நுழைந்தார். கிருஷ்ணரைக் கண்டதுமே ஜாம்பவதிக்கு அவர் மேல் இனம் புரியாத மரியாதையும், அன்பும் ஏற்பட்டது. என்றாலும் யாராலும் நுழைய முடியாத இந்தக் காட்டுக் குகைக்குள்ளே இவர் வந்தது எப்படி? இவர் யாராயிருக்கும்? தந்தையான ஜாம்பவான் கண்டால் இவரை என்ன செய்வாரோ என எண்ணி அஞ்சினாள். ஜாம்பவதி கிருஷ்ணரிடம் அவர் யார் என்றும் என்ன விஷயமாய் வந்திருக்கின்றார் என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ஆஹா, ஸ்யமந்தகம் தான் இவரை இங்கே வர வைத்திருக்கின்றதா?? என நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் தொட்டிலின் மேலே கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த மணியைக் காட்டி, அதைக் கழற்றி எடுத்துக் கொண்டு சத்தம் செய்யாமல் திரும்பும்படிக் கேட்டுக் கொண்டாள். தன் தகப்பனுக்கு விஷயம் தெரிய வேண்டாம் என்றும் கூறினாள்.

தனக்கு அவர் பேரில் ஏற்பட்டிருக்கும் அன்பை விட, அவர் தன்னைப் பிரியக் கூடாது எனத் தான் நினைப்பதைவிட, இப்போது அவர் தன் தந்தையிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிச் செல்வதே சரி எனவும் நினைத்தாள் ஜாம்பவதி. ஆனால் கிருஷ்ணர் மறுத்தார். ஏற்கெனவே இந்த மணியை நான் தான் திருடிக் கொண்டு வந்தேன் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. இப்போது உன் தந்தையையும் நான் பகைத்துக் கொண்டு இதை எடுத்துச் செல்ல வேண்டுமா? என்னால் முடியாது. அவர் எங்கே? அவருடன் நேருக்கு நேர் மோதிவிட்டே நான் இந்த மணியை வெற்றி வீரனாக எடுத்துச் செல்கின்றேன் என்று கூறுகின்றார். ஆனால் தன் தந்தையின் உடல் பலத்தையும், அவர் மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்றவர் என்றும் கூறிய ஜாம்பவதி, அவரால் கிருஷ்ணருக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ என அஞ்சி மறுக்கின்றாள். கிருஷ்ணரை உடனே அந்த இடத்தை விட்டு மணியை எடுத்துச் செல்லும்படிக் கூறுகின்றாள். கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துச் சங்க நாதம் செய்கின்றார்.

சங்கின் முழக்கத்தைக் கேட்ட ஜாம்பவான் விழித்துக் கொண்டார். கிருஷ்ணர் வந்திருப்பதையும், அவர் வந்ததன் காரணத்தையும் தெரிந்து கொண்டார். “ஆஹா, இவன் என்னை என்ன கிழட்டுக் கரடி என நினைத்துக் கொண்டானோ? இருக்கட்டும், ஒரு கை இல்லை, இரு கையாலும் பார்த்துவிடுகின்றேன்.“ என்று நினைத்துக் கொண்டு, கிருஷ்ணருடன் போருக்குத் தயார் ஆனார். த்வந்த்வ யுத்தம் நடக்கின்றது, கிட்டத் தட்ட இருபத்தொரு நாட்கள். ஜாம்பவான் தன்னால் முடிந்தவரையில் சமாளித்தார். ஆனால் மூன்று வாரத்துக்கு மேலே அவரால் முடியவில்லை. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை நினைத்துக் கொண்டு மேலும் முயன்றார். சட்டென உண்மை பளிச்சிட்டது. வந்திருப்பது சாமானியமானவர் இல்லை. ஆஹா, இவன் சாட்சாத் அந்தப் பரம்பொருளே அல்லவோ? பரம்பொருளோடா சண்டை போட்டோம்? ஜாம்பவான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஸ்யமந்தக மணியையும், தன் பெண்ணான ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்குத் தானம் செய்கின்றார். ஜாம்பவதிக்கும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. மீண்டும் த்வாரகையை அடைந்த கிருஷ்ணர் ச்யமந்தகத்தை நினைவாக சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார்.

சத்ராஜித்தும் கிருஷ்ணரை அநாவசியமாய் அவதூறு செய்துவிட்டதை நினைத்து வருந்தி தன் ஒரே பெண்ணான சத்யபாமாவைக் கிருஷ்ணருக்குத் திருமணம் செய்வித்துக் கூடவே ஸ்யமந்தகத்தையும் ஸ்ரீதனமாய்க் கொடுக்கின்றான். ஆனால் கிருஷ்ணரோ அந்த மணியால் தனக்கு விளைந்த அபவாதத்தை மறக்கவே இல்லை. ஆகையால் திரும்ப ஸத்ராஜித்திடமே கொடுத்துவிட்டார். இன்னும் பிள்ளையார் வரலையேனு நினைக்கிறவங்களுக்குக் கொஞ்சம் பொறுங்க, இதோ பிள்ளையார் இந்தக் கதையில் நுழையும் நேரம் வந்தே ஆச்சு.

Ganesh in Blue

Share This Book