"

சத்யபாமாவைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்கள் அரக்கு மாளிகையில் அக்னியில் எரிந்து குடும்பத்தோடு சாம்பலாகிவிட்டனர் எனக் கேள்விப் பட்டு அதைப்பற்றி விசாரிக்க ஹஸ்தினாபுரம் சென்றார். பாமாவைத் துவாரகையிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். ஸத்ராஜித் ஏற்கெனவே பாமாவை சததன்வா என்னும் ஒருவனுக்கும், க்ருதவர்மா என்பவனுக்கும் அல்லது அக்ரூரருக்கேயாவது சத்யபாமாவைத் திருமணம் செய்வித்துவிட முயன்று கொண்டிருந்தான். ஆனால் கடைசியில் கிருஷ்ணர் சத்யபாமாவைத் திருமணம் செய்து கொள்ளவே, மிக மிக நல்லவராயும், கிருஷ்ணரை ஆரம்பத்தில் இருந்தே காப்பாற்றி வந்தவரும் ஆன அக்ரூரருக்கே கிருஷ்ணர் பேரில் கொஞ்சம் பொறாமை உண்டாகிவிட்டது. அவருடன் க்ருதவர்மாவும் சேர்ந்து கொள்ள, இருவரும் சததன்வாவைப் போய்ச் சந்தித்து, எப்படியேனும் ஸ்யமந்த்கத்தையாவது ஸத்ராஜித்திடம் இருந்து அபகரிக்க வேண்டும் என நினைத்துத் திட்டம் தீட்டினார்கள். ஸததன்வாவோ, ஸ்த்ராஜித்தை அநியாயமாயும், முறையற்றும் கொன்றுவிட்டு மணியை அபகரித்து வந்துவிடுகின்றான். சத்யபாமாவோ அலறிக் கலங்கினாள். கிருஷ்ணர் வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் தன் மாமனாரைக் கொன்றவனைத் தானும் கொன்று பழி தீர்க்கப் போவதாய்ச் சபதம் எடுக்கின்றார்.

விஷயம் தெரிந்ததும் சததன்மாவுக்குக் கிலி ஏற்படுகின்றது. கிருஷ்ணர் எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்துத் தன்னைக் கொன்றுவிடுவார் என நினைத்த அவன் அந்த ஸ்யமந்தக மணியை அக்ரூரர் வீட்டிலே போட்டுவிட்டு, துவாரகையை விட்டு ஓட்டம் பிடித்தான். ஸ்யமந்தகம் இருக்குமிடத்திலே சகல செளபாக்கியங்களும் ஏற்படவேண்டி இருக்க இம்மாதிரியான சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், அகசுத்தியும், புறசுத்தியும் அதை வைத்திருந்தவர்களிடையே இல்லாத காரணமே ஆகும். சூரிய பகவான் சத்ராஜித்திடம் அதைக் கொடுத்தபோதே அகமும், புறமும் சுத்தமாக இல்லாவிட்டால் மணியால் நாசமே விளையும் எனச் சொல்லி இருந்தார். ஆகவே அந்த மணியால் தனக்குத் தொந்திரவு ஏற்படுமோ எனக் கலங்கியே சததன்வா அதை இப்போது அக்ரூரரிடம் போட்டுவிட்டு ஏற்படும் நாசம் அவருக்கு ஏற்படட்டும், அல்லது கிருஷ்ணர் விஷயம் தெரிந்து அக்ரூரரைக் கொன்றுவிட்டு எடுத்துக் கொள்ளட்டும். எப்படியானாலும் தன் தலை தப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டு அக்ரூரரிடம் போட்டான்.

அக்ரூரரோ பரமபாகவத சிரோன்மணி. ஏதோ சகவாச தோஷத்தால் கிருஷ்ணரிடம் கோபம் ஏற்பட்டதே தவிர, உண்மையில் அதற்காக வருந்திக் கொண்டிருந்தார். இங்கே கிருஷ்ணரோ, சததன்வா துவாரகையை விட்டு ஓடும் செய்தி அறிந்ததும், தன் அண்ணனாகிய பலராமரையும் கூப்பிட்டுக் கொண்டு, அவனைப் பிடித்து ச்யமந்தக மணி பற்றி அறிந்துவரப் போகின்றார். கிருஷ்ணரும், பலராமரும் ரதத்தில் செல்ல, சததன்வா குதிரையில் ஓடுகின்றான். குதிரை களைத்து விழுந்துவிடக் கால்நடையாக ஓடும் சததன்வாவைப் பிடிக்கக் கிருஷ்ணரும் ரதத்தில் இருந்து இறங்கி ஓடுகின்றார். பலராமர் கிருஷ்ணரோடு போகவில்லை. தப்பி ஓடும் ஒருவனைப் பிடிக்க இருவர் தேவையில்லை என்பது அவர் கருத்து. கிருஷ்ணர் சததன்வாவைப் பிடித்து, சண்டைபோட, சண்டையில் தோற்ற சததன்வா, பின்னர் கிருஷ்ணரால் கொல்லவும் படுகின்றான். அவனிடம் ச்யமந்தகமணியைத் தேடும் கிருஷ்ணருக்கு அது கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பி ரதத்துக்கு வந்து பலராமரிடம் நடந்ததைச் சொல்ல, பலராமர் நம்பவில்லை.

கிருஷ்ணர் கபடமாய் மணியை அபகரித்து வைத்துக் கொண்டு சததன்வாவையும் கொன்றுவிட்டு இப்போது பொய் சொல்லுவதாய் நினைத்த பலராமர் கோபத்துடன், கிருஷ்ணருடன் துவாரகைக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு, விதேஹ நாட்டுக்குப் போய்விட்டார். அண்ணனும் திரும்பாமல், மணியும் கிட்டாமல், அனைவரையும் விரோதித்துக் கொண்ட கிருஷ்ணர் செய்வதறியாது விழித்தார். அப்போது தான் அவருக்குத் தான் என்ன தப்பு செய்தோம் இம்மாதிரி அபாண்டமாய்ப் பழி சுமக்க என்று தோன்றுகிறது.

ச்யமந்தகத்தை வைத்துக் கொண்டிருந்த அக்ரூரரோ கிருஷ்ணரிடம் அபாரமான பக்தியும், அன்பும் கொண்டவராதலால் ஒரு க்ஷண நேரம் தன் மனம் மாறியதை நினைத்தும், இப்போது ச்யமந்தகம் தன்னிடம் இருப்பதால் கிருஷ்ணருக்குத் தன்னிடம் உள்ள அன்பு போய் விரோதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தாலும், த்வாரகையை விட்டுக் கிளம்பி, ஒவ்வொரு ஊராக க்ஷேத்திராடனம் செய்து கொண்டு கடைசியில் காசியை அடைகின்றார். அங்கே போனதும் ஏற்கெனவே வேதனைப் பட்டுப் புழுங்கிக் கொண்டிருந்தவர் மனம் நிர்மலமாக, ஸ்யமந்தகம் எட்டு பாரம் பொன்னை வாரி வழங்க ஆரம்பித்தது. அந்தப் பொன்னையோ, அல்லது ச்யமந்தகத்தையோ தனக்கெனக் கருதாமல், தன் குடும்பத்திற்கும் செலவு செய்யாமல் தேவாலயத் திருப்பணிகளுக்கும், மற்ற உதவிகளுக்கும் செலவு செய்தார் அக்ரூரர். நாளடைவில் காசி க்ஷேத்திரமே செழிப்பாக மாறியது.

இங்கே த்வாரகையில் மனவேதனைப் பட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர் தன் அண்ணன் இல்லாமலும், ச்யமந்தக மணியின் காரணத்தால் உயிரிழந்த தன் சிறிய மாமனார் ஆன பிரசேனன், மாமனார் சத்ராஜித், நண்பன் ஆன சததன்வா ஆகியோரையும் நினைத்து வேதனைப் பட்டார். அக்ரூரரும் த்வாரகையில் இல்லாமையால் அவரிடம் ச்யமந்தகம் இருக்க வேண்டும் என நினைத்தார். அப்போது ஒரு நாள் நாரதர் அங்கே வர கிருஷ்ணர் அவரிடம் தன் துன்பத்தைச் சொல்லிக் காரணம் கேட்டார். நாரதர் சொல்கின்றார்:”கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாத சுக்கில பக்ஷ சதுர்த்தி நாள். அன்றைய பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது என இருக்க நீ அதைப் பார்த்துவிட்டாய். அதுவே உன் பேரில் ஏற்பட்ட வீண்பழிக்கும் அபவாதங்களுக்கும் காரணம்” என்று சொன்னார். “பாத்ரபத சுக்கில பக்ஷ சதுர்த்தியன்று சந்திரனைக் காணக் கூடாதா? இது என்ன புது விஷயம்? என்ன காரணம் சொல்லுங்கள் ஸ்வாமி!” என்று கேட்டார் கிருஷ்ணர். நாரதரும் சொல்ல ஆரம்பித்தார். குழந்தைகளே, இதோ இப்போ வரப்போறார் பிள்ளையார்.

Ganesh Chaturthi 2010

Share This Book