ஹையா, பிள்ளையார் வந்துட்டாரே! எப்படி இருக்கார் தெரியுமா? மூஞ்சுறு மேலே ஏறிக் கொண்டு, வேக, வேகமாய் அதிலேயே அகில உலகத்தையும் சஞ்சாரம் பண்ணிக் கொண்டு போனார். நீண்ட துதிக்கை, நம்பிக்கையைக் கொடுக்கின்றது. ஏக தந்தம், அவர் தியாகத்தைக் குறிக்கின்றது. ஆடிக் கொண்டிருக்கும் இரு காதுகளும், மாறி மாறி வரும் பருவங்களையும் குறிக்கின்றது. சாந்தமும், அன்பும், ஞானமும், விவேகமும் கொண்ட அதி அற்புதமான வடிவம். கொழு, கொழுவென்ற பெரிய தொந்தி, குட்டிக் குட்டியாய்க் கால், கைகள், பார்க்கவே அழகு, அழகு கொஞ்சும் இந்தத் தோற்றத்துடன் பிள்ளையார் சஞ்சாரம் பண்ணும்போது, அப்படியே சந்திரலோகத்தையும் ஒரு எட்டு எட்டிப் பார்த்தாராம். அங்கே சந்திரன், தன் அருமை மனைவியான ரோகிணியுடன் வீற்றிருந்தான். ஏற்கெனவே சந்திரனுக்குத் தன் அழகிலும், குளுமையிலும் கர்வம் அதிகம் ஆகி இருந்தது. இப்போ வேறே மனைவியோட இருக்கானா? அவளுக்கு முன்னாலே தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்டிக்கிறதா நினைச்சு, சந்திரன் பிள்ளையாரையும் அவரின் உருவத்தையும் பார்த்துப் பரிகசித்துச் சிரித்தான். கேலி செய்தான், ஏகதந்தத்தையும், யானைத் தலையையும், முறக் காதுகளையும், கொழு கொழு தொப்பையையும், குட்டிக் குட்டிக் கால், கைகளையும்.
கோபமே வராத விநாயகனுக்குக் கோபம் வந்துவிட்டது. சந்திரனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும், அப்போதுதான் அவன் கர்வம் அடங்கும் என நினைத்தார் விநாயகர். சந்திரனைப் பார்த்து, “அப்பா, சந்திரா, உன்னுடைய ஒளியானது உண்மை அல்லவே? சூரியனிடம் ஒளியைக் கடன் அல்லவோ வாங்கிக் கொண்டு பிரகாசிக்கின்றாய்? நீ குளுமையான பால் போன்ற ஒளியைக் கொடுப்பது உன் சொந்த முயற்சியால் அல்லவே. மேலும் ஏற்கெனவே உன்னுடைய சொந்த மாமனாரிடம் நீ சாபம் வேறு வாங்கிக் கொண்டு பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின்னர் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வருகின்றாய். அப்படி இருக்கையிலேயே உனக்கு இத்தனை கர்வம் தேவையா அப்பா? கொஞ்சம் யோசி!” என்று சொன்னார். ஆனால் அகங்காரத்தின் உச்சியிலிருந்த சந்திரன் மீண்டும் சிரித்தான். கோபம் கொண்ட விக்னேஸ்வரன், “இனி யாருமே சந்திரனைப் பார்க்கக் கூடாது, பார்க்கவும் முடியாது. அப்படி யாரேனும் உன்னைப் பார்த்தாலோ களங்கம் உள்ள மனதுள்ள உன்னைப் பார்த்த அவர்களும் களங்கத்தால் பீடிக்கப் படுவார்கள். உன்னைப் பார்ப்பவர்கள் வீண் பழிக்கும், அபவாதத்துக்கும், மித்திரத் துரோகத்துக்கும் ஆளாவார்கள்.” என்று சொல்லி விடுகின்றார். சந்திரனுக்குப் பயத்துடன் அபவாதம் செய்வார்களே என்ற அவமானமும் மேலோங்க, சமுத்திரத்தினுள் சென்று மறைந்தான்.
சந்திர ஒளியிலே மட்டுமே மூலிகைகள் வளரும். நிலவொளி இல்லாமல் மூலிகைகள் வளரவில்லை. வைத்தியர்கள் வைத்தியம் செய்ய முடியவில்லை. உலகிலே எங்கே பார்த்தாலும் நோய், நொடி பரவி, அதைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்தனர். சூரிய ஒளி எவ்வாறு முக்கியமோ அதே போல் சந்திரனும் முக்கியம் என்பதை அறிந்த அனைவரும் வழக்கம் போல் பிரம்மாவிடம் முதலில் சென்று அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். பிரம்மாவோ மஹா கணபதியின் வாக்குக்கு மறு வாக்கு நான் சொல்ல முடியுமா? நீங்கள் அனைவரும் சாபம் நீங்க அவரையே வழிபடுங்கள். அவர் ஆவிர்ப்பவித்த திதியான சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விசேஷ வழிபாடுகள் செய்து அவருக்குப் பிடித்த நைவேத்தியங்கள் செய்து, அவர் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். மனம் உருகப் பிரார்த்தித்து உலக க்ஷேமத்துக்காக வேண்டி சந்திரனின் தோற்றமும், ஒளியும் தேவை என்று கேளுங்கள்.” என்று சொல்லிவிடுகின்றார். தேவர்கள் அனைவரும் சமுத்திரத்துக்குள்ளே ஒளிந்து கொண்டிருந்த சந்திரனைத் தேடிக் கண்டுபிடித்து, “நீயும் சேர்ந்து விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டு வழிபாடுகள் நடத்தினாலொழிய இந்தக் காரியம் பூர்த்தி அடையாது.“ என்று கூப்பிட, ஏற்கெனவே தான் செய்த தப்பை எண்ணி வருந்திய சந்திரனும் உடனே வந்தான்.
சந்திரனும், தேவர்களும் வழிபட்டு முடிக்கும் வேளையில் பிள்ளையார் பிரசன்ன வதனத்துடன் பிரசன்னமாகி, தான் கொடுத்த சாபத்தைத் திரும்ப வாங்க முடியாது என்றும், அதில் கொஞ்சம் மாறுதல் செய்வதாயும் கூறிவிட்டு, சுக்கில பட்ச சதுர்த்தி திதிகளில் உதிக்கும் நாலாம் பிறைச் சந்திரனைப் பார்க்கின்றவர்களுக்கே அபவாதம் ஏற்படும். ஆகவே அன்றைய நாள் மட்டும் யாரும் சந்திரனைப் பார்க்க வேண்டாம். மீறினால் அபவாதம், வீண்பழிக்கு ஆளாவார்கள். இதன் மூலம் யாருக்கும் தன் அழகிலோ, அறிவிலோ கர்வம் ஏற்படாமல் யாரையும் யாரும் புண்படுத்தும் செயல்களையும் செய்யாமல் இருப்பார்கள். ஆகவே நான் சொன்னதில் சிறு மாற்றத்தோடு சந்திரனுக்கு, சாபத்திலிருந்து விடுதலை அளிக்கின்றேன்.” என்று சொல்கின்றார். தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லவா? இது மனிதரானாலும் தேவரானாலும் அனைவருக்கும் பொதுவே என்பதையும் காட்டுகின்றது அல்லவா? அதோடு இல்லாமல் மேலும் சந்திரனுக்கு உதவி செய்யும் வண்ணமாய்ப் பிள்ளையார், பெளர்ணமி கழிந்த கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து பிள்ளையாரைப் பூஜித்து வழிபாடுகள் செய்து அன்று தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டு அவனையும் வழிபடுகின்றவர்களுக்கு அனைத்துச் சங்கடங்களையும் நான் போக்குவேன்.” என்று சொல்லி சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்படவும் வழி செய்தார் பிள்ளையார். தேய்பிறையிலே அவனைப் பார்த்தலே நன்மை என்று சொல்லிவிட்டு வளர்பிறையிலே பார்க்கக் கூடாது என்று சொன்னதோடு அல்லாமல், அமாவாசைக்கு அப்புறம் சந்திரன் நன்கு தெரியும் முதல் திதியில் அவனைப் பார்ப்பவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்றும், பெண்களுக்கு விசேஷமாய் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் எனவும் சொல்கின்றார். பிறைச் சந்திரனைச் சிரசிலே தரித்துக் கொண்டிருப்பதில் ஈசன் ஆன சிவபெருமான் தவிர, அம்பாள் ஆன பார்வதி தேவியும், பிள்ளையாருமே ஆகும்.
பின்னர் அந்தப் பிறைச் சந்திரனைத் தன் சிரசிலே சூடிக் கொண்டு “பாலசந்திரன்” ஆகக் காட்சி அளித்தார் பிள்ளையார். இங்கே பால சந்திரன் பற்றிய ஒரு சிறு விளக்கம். பால என்ற இந்தச் சொல்லுக்கு, குழந்தை என்ற அர்த்தம் வராது. BHALA CHANDRAN என்ற உச்சரிப்புடன் கூடிய இந்தச் சொல்லில் பால என்பது, நெற்றியை அல்லது முன்னந்தலையைக் குறிக்கும். முன் நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவர் என்ற பொருளிலேயே இது குறிப்பிடப் படுகின்றது. அல்லது PHALA CHANDRAN என்று எடுத்துக் கொண்டால், கேசத்தின் நடுவில் வகிடு எடுத்து இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்ட ஒரு பகுதி. சிவபெருமான் தனது சடாமுடியில் இடது பக்கமாய்ச் சாய்த்து வைத்துக் கொண்டிருப்பார் இல்லையா அதைக் குறிப்பது, PHALA என்ற சொல் என்றாலும் பால சந்திரன் Bhala Chandran என்றாலே பிள்ளையார் ஒருத்தர் மட்டுமே.
மேற்கண்ட கதையை நாரதர் கிருஷ்ணரிடம் சொல்லிவிட்டு, “கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாதத்து நாலாம்பிறைச் சந்திரனைப் பார்த்துவிட்டாய். அதன் காரணமாகவே இப்போது இத்தகைய வீண் அபவாதங்களை நீ சுமக்க வேண்டி இருந்தது. என்னதான் அவதாரம் ஆனாலும், மனித உருவில் வந்திருப்பதால் மனிதருக்குள்ள சுகம், துக்கம் இரண்டையும் நீயும் அனுபவித்தே கழிக்க வேண்டும். ஆகையால் இப்போது விநாயகருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டாயானால் உன்னுடைய தொல்லைகள் குறையும்.“ என்று ஆசீர்வதித்துவிட்டுச் செல்கின்றார் நாரதர். கிருஷ்ணரும் அவ்வாறே விநாயகருக்கு சங்கட ஹர சதுர்த்தியில் ஆரம்பித்து விரதம் இருந்து வழிபாடுகள் செய்துவருகின்றார். விநாயகரும் கிருஷ்ணரின் பக்தி வழிபாட்டில் மனம் மகிழ்ந்து, கிருஷ்ணர் அபவாதத்தில் இருந்து விலகுவாரென்றும், சுக்கிலபட்ச சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பதால் வரும் அபவாதமும், பழியும், ஒரு மாதம் சென்ற பின்னர் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் விலகும் என்று இருந்ததை உங்களுக்காக மாற்றி, வேறு மாதிரியாகக் கொடுக்கின்றேன். எவரொருவர் இந்த ச்யமந்தகமணியின் கதையைப் படித்து வருகின்றார்களோ, அல்லது கேட்கின்றார்களோ அவர்களுக்கு பாத்ரபத மாதத்து சுக்லபட்ச சதுர்த்திச் சந்திரனைப் பார்த்தால் கூடப் பாவம் வராது. ஆகவே இந்த ச்யமந்தக மணியின் கதையும், அதில் நீங்கள் சம்பந்தப் பட்டிருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதே போல உங்கள் பிறந்த திதியான கோகுலாஷ்டமியிலும், வழிபாடுகள் நடத்திய பின்னர் சந்திரனுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும், என்றும் இந்த சதுர்த்தி தின வழிபாடுகளில் கிருஷ்ணரும், சந்திரனும் இடம் பெறுவார்கள் என்றும் கூறுகின்றார் பிள்ளையார் கிருஷ்ணரிடம்.
அது மாதிரியே கிருஷ்ணரும் விரதம் இருந்து வழிபாடுகள் செய்ததில் அக்ரூரர் காசியில் இருக்கும் விபரம் தெரிந்து விடுகிறது, காசிநகரின் செழிப்பான தன்மையிலிருந்து. உடனேயே ஆள் அனுப்பி அக்ரூரரை வரவழைக்கின்றார். நடந்தது தெரிந்த அக்ரூரரும், கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டு ச்யமந்தகத்தைக் கிருஷ்ணரிடம் ஒப்படைக்க, கிருஷ்ணரோ அது இருக்க வேண்டிய இடம் அக்ரூரரிடம் தான் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிடுகின்றார் அதை. த்வாரகையும் ச்யமந்தகத்தின் மறு வரவினால் செழிப்படைகின்றது. அடுத்து நாம், பிள்ளையார் குட்டுக் குட்டிக்கிறதுக்கும், இந்த மகாவிஷ்ணுவே காரணம். அது என்னன்னு பார்ப்போமா?
ஒரு சமயம் மகாவிஷ்ணு தன் சக்கரத்தைச் சுற்றி விநாயகருக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது சக்கரத்தின் ஒளியையும், சுற்றும் வேகத்தையும் கண்ட விநாயகக் குழந்தை அதைத் தன் துதிக்கையை நீட்டிப் பிடுங்கிக் கொண்டு தன் வாய்க்குள்ளே போட்டுக் கொண்டது. அதை விழுங்கவும் இல்லை. தன் வாயிலேயே அடக்கிக் கொண்டது விநாயகக் குழந்தை. மஹாவிஷ்ணு பல முறை வேண்டிக் கேட்டும் குழந்தை தர மாட்டேன் என்று அடம் பிடித்தது.
எப்படியாவது குழந்தையிடமிருந்து சக்கரத்தை வாங்க வேண்டுமே? விஷ்ணு யோசித்தார். பின்னர் குழந்தையைச் சிரிக்க வைத்தால் வாயிலிருந்து சக்கரம் விழுந்துவிடும் என்பதைப் புரிந்து கொண்டு, தன்னிரு கைகளாலும், காதைப் பிடித்துக் கொண்டும், தலையில் குட்டிக்கொண்டும், கீழே உட்கார்ந்து எழுந்தார். அதைக் கண்ட நம் விநாயகக் குழந்தைக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் சிரித்த சிரிப்பில், சக்கரம் வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தது. அப்பாடா, என நிம்மதி அடைந்த விஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டு த்ன்னுடைய பாற்கடலுக்கு ஓடியே போய்விட்டார்.
இதுவே சம்ஸ்கிருதத்தில் தோர்பி: கர்ணம் என்று சொல்லப் பட்டது. தோர்பி என்றால் கைகளால் என்று அர்த்தம். கர்ணம்=காது, என்று அர்த்தம். கையால் காதைப் பிடித்துக் கொள்ளுவதே தோர்பி(ஹ்)கர்ணம் என்றாகிவிட்டது. இதையே நாம் இப்போது தோப்புக்கரணாம் என்று சொல்லுகின்றோம்.
https://www.flickr.com/photos/flickrohit/2849502909