"

எந்த ஒரு வேலையையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் நாம் விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு விட்டே ஆரம்பிக்கின்றோம் அல்லவா? இது நமக்கு மட்டும் இல்லாமல் கடவுளரும் இவ்வாறு இருந்திருக்கின்றனர் என்பதையும் இப்போது அறிந்து கொள்வோம். ஜெகந்மாதாவான அம்பிகையானவள் ஸ்ரீலலிதையாக அவதாரம் எடுத்தாள் பண்டாசுரனை ஒழிக்க. அப்போது காமேஸ்வரனாகிய ஈசனை மணந்துவிட்டு அம்பாள் பண்டாசுரனை ஒழிக்கச் செல்லுகின்றாள். அவள் சேனைக்குத் தலைமை தாங்கி சப்தமாதாக்களும் உடன் செல்கின்றனர். அப்போது நடக்கும் போரில் பண்டாசுரன் விக்னயந்திரத்தைப் பிரயோகம் செய்ய, அம்பிகையின் சேனைகள் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன. இது என்ன இவ்வாறு நேர்ந்து விட்டதே என யோசித்த அம்பிகை, தான் போருக்குக் கிளம்பும் முன்னர் விக்னேஸ்வரனைப் பிரார்த்திக்காததின் காரணமே எனப் புரிந்து கொள்கின்றாள். பின் முறையாக விக்னேஸ்வரருக்கு வழிபாடுகள் செய்து அவரைப் பிரார்த்தித்து விக்ன யந்திரத்தின் பிரயோகத்தைப் பொடிப் பொடியாக்கி பண்டாசுரனை நிர்மூலம் செய்கின்றாள்.

தாய்க்கு மட்டுமா இவ்வாறு நேர்ந்தது? அகில உலகத்தையும் படைத்தவனும், தாய், தந்தை இல்லாதவனும் முன்னைப் பழம்பொருளுக்கும், பழம்பொருள் ஆனவனும் ஆன அந்த சர்வேசனுக்கே இவ்வாறு நேர்ந்தது. திரிபுரத்தை எரிக்கப் புறப்பட்டார் ஈசன். அப்போது அவர் கிளம்பிய தேரின் அச்சு முறிந்ததாய்ச் சொல்லுவார்கள். இதற்கு தேவர்கள் தங்களால் தான் ஈசன் போருக்குக் கிளம்பினார் என்ற கர்வம் கொண்டது தான் காரணம் எனச் சொல்லப் பட்டாலும், விநாயக வழிபாட்டை ஈசன் நிறைவேற்றாமல் கிளம்பியதும் ஒரு காரணம் எனச் சொல்லுகின்றனர். இந்தத் தேர் அச்சு முறிந்த இடம் இன்றும், “அச்சிறுபாக்கம்” என்ற பெயரில் வழங்கி வருகின்றது.

அடுத்து விநாயகர் உதவியது தன் அருமைத் தம்பிக்கு. ஆம், முருகப் பெருமானுக்கும் உதவினார் விநாயகர். விநாயகர் உதவி இன்றி வள்ளியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. திருமாலின் கண்மலரின் தோன்றிய இரு பெண்களில் ஒருத்தியான சுந்தரவல்லி முருகப் பெருமானைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி தவமிருக்க முருகன் அவளைப் பூமியில் பிறந்து தம்மை மணப்பாள் எனச் சொல்கின்றார். அவளும் நம்பிராஜனுக்கு மகளாய்த் தோன்றி வள்ளிமலையில் வளர்ந்து வருகின்றாள். வள்ளி என்ற பெயரில் வளர்ந்து வந்த அவளைத் திருமணப் பருவம் வந்ததும், மணம் செய்து கொள்ள முருகன் ஒரு வேடனாய், பின்னர் கிழவனாய் வர, வள்ளி மறுக்கின்றாள். முருகன் வள்ளிக்கு யானையின் மீது உள்ள பயத்தைப் புரிந்து கொண்டு, தன் அண்ணனான விநாயகரை வேண்ட, விநாயகரும் யானை உருவில் வந்து வள்ளியோடு முருகனுடன் சேர்ந்து விளையாடல்கள் புரிந்து பின்னர் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொள்ள உதவுகின்றார்.

விநாயகரின் வாகனம் சின்னஞ்சிறு பிராணியான மூஞ்சுறு ஆகும். ஒரு எலியைப் போய் விநாயகர் வாகனமாய்க் கொண்டிருக்கின்றாரா என எண்ணினால் அது நம் அறியாமையின் தவறே ஆகும். இறைவனை நம்மால் உணரத் தான் முடியும், புரிந்து கொள்ள முடியாது. இறைவன் இன்னார், இப்படிப் பட்டவர், இன்ன குணத்தினவர் என யாராலும் வரையறுக்கவும் முடியாது. உண்மையில் யானை போன்ற உருவமுடைய விநாயகர் ஒரு எலியின் மீது ஏறி உட்கார்ந்தால் அந்த எலி என்னத்துக்கு ஆகும்? இல்லையா? இதை ஆழ்ந்து யோசித்தாலே உண்மை புலப்படும். அணுவுக்கும் அணுவாக, நுண்ணுயிருக்குள்ளும், நுண்ணுயிராக, பெரிதிலும் பெரியதாக, ஒளியிலும் ஒளியாக, சூரியனை விடப் பிரகாசமாக, கோடி சூரியப் பிரகாசத்தை விட மேம்பட்டவனாக இறைவன் நம்மால் அறிய முடியாதவனாக இருக்கின்றான். அப்படிப் பட்ட இறைவன் நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அன்றோ. இந்த நம் கற்பனைகளைக் கடந்து எல்லையற்றவன் இறைவன் என்பதே இந்த எலி வாகனத்தின் கருத்து என ஆன்றோர் வாக்கின் மூலம் அறியலாம்.

அடுத்து நம் ஒளவைப் பிராட்டி விநாயகரை வழிபட்டே மூதாட்டி ஆனவள். நம் அனைவருக்கும் அது தெரியுமல்லவா? இந்த ஒளவைப் பிராட்டி ஒரு சமயம் விநாயகருக்கு வழிபாடுகள் செய்து கொண்டிருக்கும்போது சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தர மூர்த்தி நாயனாரும் கைலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் விநாயக வழிபாடுகள் நடத்தும் ஒளவையைப் பார்த்துவிட்டு, “ஒளவையே, நீர் வரவில்லையா, நாங்கள் கைலைக்குச் செல்கின்றோம்,” எனச் சொல்ல, “என் அப்பன் விநாயகன் வழிபாடு நடத்தாமல் நான் வரமுடியாது” என ஒளவை சொல்கின்றார். அவசரம், அவசரமாய் வழிபாட்டை நடத்தலாமோ என எண்ணி ஒளவை ஆரம்பிக்க, விநாயகரோ ஒளவையிடம், “மெதுவாய் உன் வழக்கம்போலவே வழிபாடுகள் நடத்து. உன்னைக் கைலையில் கொண்டு சேர்ப்பது எம் பொறுப்பு!” என உறுதி அளிக்க, ஒளவையும் நிதானமாகவே வழிபாடுகள் செய்கின்றாள். அப்போது பாடப் பட்டவையே விநாயகர் அகவல் என்றும் சொல்வார்கள். இந்த அகவல் எல்லாம் பாடி முடித்து ஒளவை தயார் ஆனதும், விநாயகர் தம் தும்பிக்கையால் ஒளவையை ஒரே தூக்காய்த் தூக்கிக் கைலையில் கொண்டு சேர்ப்பித்தார். ஒளவை சென்று பல நாட்களுக்குப்பிறகே சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் திருக்கைலை வந்து சேருகின்றனர்.

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால் க அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ண மோக்ஷத்தைக் குறிக்கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி.

ஈசன்: கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம்பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல்லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப் படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர்.

Ganesha

Share This Book