அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து வந்தவர்கள் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். ராமரும், சீதையும் பட்டாபிஷேகத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துக் கொன்டிருந்தனர். பட்டாபிஷேகத்திற்கு வந்த விபீஷணன் கிளம்பிக் கொண்டிருந்தான். ஸ்ரீராமர் அவனுக்குத் தங்கள் குல தெய்வமான பெருமாளின் பள்ளி கொண்ட கோலத்தைக் கொண்டிருக்கும் விக்ரஹத்தைப் பரிசாக அளித்தார். பெருமாள் அழகாகப் பள்ளி கொண்டிருந்தார். ஆண்டாண்டு காலமாக இக்ஷ்வாகு குலத்தவர் பூஜை செய்து வந்த பரம்பரை விக்ரஹம் அது. ப்ரணவாகாரமான விமானத்தின் கீழ் இருந்தார். விமானத்தோடு அப்படியே விபீஷணனுக்குப் பரிசளித்த ராமர் இதை எங்கேயும் கீழே வைக்கலாகாது. வைத்தால் வைத்த இடத்தில் பிரதிஷ்டை ஆகிவிடும். ஆகவே நீ இலங்கை போய்ச் சேரும் வரைக்கும் விக்ரஹம் கையிலேயே இருக்கட்டும். என்று சொல்லிக் கொடுத்தார். விபீஷணனும் விக்ரஹத்தை எங்கேயும் வைக்காமல் வெகு ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு வந்தான். மெல்ல மெல்லத் தென் பகுதிக்கு வந்து சேர்ந்த விபீஷணன், காவிரிக்கரையை அடைந்தான்.அங்கே மாலைக்கான அநுஷ்டானங்களைச் செய்ய நினைத்தான். ஆனால் விக்ரஹத்தைக் கீழே வைக்க முடியாதே. யோசித்த விபீஷணனுக்குச் சற்றுத் தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளை கண்களில் பட்டான். அவனை அழைத்து, “இந்த விக்ரஹத்தைக் கைகளில் வைத்துக்கொண்டிரு. நான் நதியில் இறங்கி அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வருகிறேன்” என்று கூறினான். அந்தச் சிறுவனும் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தான்.
அவன் கைகளுக்கு விக்ரஹம் கனமாகத் தெரிய வந்தால் தான் விக்ரஹத்தைக் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினான். அப்போது விபீஷணன் அப்படிக் கைகள் கனத்தால் தன்னை அழைக்குமாறு கூற சிறுவனும் தான் மூன்று முறை கூப்பிடுவதாகவும், மூன்று முறை அழைத்தும் விபீஷணன் வரவில்லை எனில் விக்ரஹத்தைக் கீழே வைத்துவிடுவேன் எனவும் கூற விபீஷணனும் சம்மதித்தான். அவ்வளவு நேரமெல்லாம் ஆகாது என்றும் தான் சீக்கிரம் வந்துவிடுவதாகவும் கூறி நதியில் இறங்கிக் குளித்துவிட்டு அநுஷ்டானங்களை ஆரம்பித்தான். மெல்ல மெல்ல நதியின் நடுவே போய்விட்டான். குறும்புக்காரப் பிள்ளை அதுவரை பேசாமல் இருந்தவன், அப்போது விபீஷணனைக் கூவி அழைத்தான். நதியின் நடுவே இருந்த விபீஷணனுக்குக் காதில் விழவில்லை. விழுந்ததும் திரும்பிப் பார்த்த அவன் கரைக்கு ஓடோடி வருவதற்குள்ளாக அந்தப் பிள்ளை விக்ரஹத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடிவிட்டது. கோபம் கொண்ட விபீஷணன் விக்ரஹத்தைக் கீழே இருந்து எடுக்க முயல, விக்ரஹம் எடுக்க வரவில்லை. அங்கேயே பிரதிஷ்டை ஆகி விட்டது. மேலும் கோபத்தோடு அந்தச் சிறுவனைத் தேடி ஓடினான். மறைவில் நின்று கொண்டிருந்த சிறுவனைத் தேடிக் கண்டு பிடித்து அவன் தலையில் ஓங்கிக் குட்ட நினைக்க, அந்தப் பிள்ளை ஓடோடிப் போய் மலைக்கோட்டை உச்சியில் மறைந்து கொள்ள, விபீஷணன் விடாமல் துரத்திக்கொண்டு போய்க் குட்டு ஒன்றை வைத்தார். அப்போது தன் சுய உருவில் காட்சி அளித்தார் விநாயகர். ஏமாற்றம் அடைந்த விபீஷணனைச் சமாதானம் செய்துவிட்டு, பெருமாளை இலங்கைக்குக் கொண்டு போக முடியாமைக்கு வருந்த வேண்டாம் எனவும், பெருமாள் இலங்கையைப் பார்த்தவாறே காட்சி அளிப்பார் எனவும் சமாதானம் கூற ஒருவாறு சமாதானம் அடைந்த விபீஷணன் இலங்கைக்குப் பயணமானான்.
விநாயகரால் அன்று காவிரிக்கரையில் தடுத்தாட்கொண்டு வைக்கப்பட்ட பெருமாள் தான் நம்பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். ரங்கராஜர் எனவும் சொல்வார்கள். உச்சிப் பிள்ளையார் கோயிலில் குடி கொண்டிருக்கும் விநாயகருக்குத் தலையில் விபீஷணன் குட்டிய அடையாளம் இன்றும் காணப்படுவதாகவும் கூறுவார்கள்.
சம்ஸ்கிருத அகராதியில் விகடர் என்றாலே ஹாஸ்யம் என்று அர்த்தம் இருக்காது. கோரமாய் பயங்கரமாய் இருப்பதைத் தான் அதிலே சொல்லி இருக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஹாஸ்யம் செய்து சிரிக்க வைப்பவர்களையே விகடன் அல்லது விகடகவி என்றெல்லாம் சொல்கிறோம். இந்த ஹாஸ்யம் சும்மாச் சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும் ஹாஸ்யம். விநாயகரின் புத்தி சாதுர்யத்திற்குக் கேட்கவே வேண்டாமே. சூரியனின் சீடர் ஆயிற்றே? தம் புத்தி சாதுர்யத்தால் நம்மைச் சிரிக்கப் பண்ணுகிறார் விகடரான விநாயகர்.
அம்மா உமையிடமும், அப்பா ஈசனிடமும் குறும்புகள் செய்து அவர்களைச் சிரிக்க வைப்பாராம். குழந்தைக்குறும்புடன் ரிஷிகளையும் வம்புக்கு இழுப்பாராம். இப்படி வம்புக்கு இழுத்த அகஸ்தியரின் கமண்டலத்து நீரே காவிரியாகப் பெருக்கெடுத்து ஓடியது என்பதை அறிவோம் அல்லவா? ராவணனை ஏமாற்றிக் கோகர்ணத்திலே ஆத்மலிங்கப் பிரதிஷ்டை பண்ணியதும் விநாயகரே. ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரை ஸ்ரீராமர் தன் பட்டாபிஷேஹப் பரிசாக விபீஷணனுக்கு அளிக்கிறார். அதை எடுத்துக்கொண்டு இலங்கை செல்லும் விபீஷணனிடம் இருந்து அதை நாட்டை விட்டுச் செல்லாதபடிக்குத் தடுத்தவர் விநாயகர். விபீஷணனை ஏமாற்றிக் காவேரி நதிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே ஸ்ரீரங்கத் தீவில் அவரைப் பிரதிஷ்டை செய்யக் காரணகர்த்த விகடரான இந்த விநாயகரே. இதைத் தவிரவும் இந்த விகட விநாயகர் பண்ணிய குறும்புகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.
பிரம்ம புத்திரியான மானசா பூவுலகத்து மக்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டாள். அதற்கு என்ன வழி என்று தன் தகப்பன் ஆன பிரம்மாவைக் கேட்க அவரும் அவள் பூலோகத்தின் மானுடப் பெண்ணாகப் பிறந்தே செய்ய முடியும் என்று கூறுகிறார். அந்தச் சமயம் குழந்தை வேண்டித் தவம் இருந்த கவேர மன்னனுக்கு மானசாவைப் பெண்ணாகப் பிறக்க வைக்கிறார். அவளும் கவேர மன்னனின் மகளாக லோபாமுத்திரை என்ற பெயருடன் பிறந்து வளர்ந்து வருகிறாள். அவளுக்குத் திருமணம் செய்யும் பருவம் வந்துவிடுகிறது. அழகும், அறிவும் நிறைந்த பெண்ணை எவருக்குத் திருமணம் செய்து வைப்பது என்று யோசித்துக் குழம்பிய கவேரமன்னனுக்கு அகத்தியருக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படியும், அவன் குமாரியின் மூலம் தென்னாட்டிற்கு மாபெரும் வளம் கிடைக்கப் போவதாயும் அசரீரி குரல் கொடுக்கிறது. அவ்விதமே அகத்தியருக்குத் தன் குமாரியைத் திருமணம் செய்து கொடுக்கிறான் கவேரமன்னன். லோபாமுத்திரையும் அகத்தியரும் அங்கிருந்து தென்னாட்டிற்கு வருகின்றனர். வரும் வழியெல்லாம் மலைகள், காடுகள், மேடு, பள்ளங்கள். அவற்றைக் கடந்து தன் மனைவியால் நடக்க இயலாது என்றுணர்ந்த அகத்தியர் அவளை நீர் வடிவாக்கித் தன் கமண்டலத்தில் அடைத்துக்கொண்டு நடக்கிறார்.
வழியில் ஒரு இடத்தில் தன் அன்றாட அநுஷ்டானங்களை முடிக்க எண்ணி அமர்ந்தார் அகத்தியர். கையில் உள்ள கமண்டலத்தை எங்கே வைப்பது? மிகுந்த யோசனையுடன் கமண்டலத்தை ஓர் ஓரமாக வைத்துவிட்டுத் தன் அநுஷ்டானங்களை மேற்கொண்டார். அப்போது அங்கே வந்த ஒரு சின்னஞ்சிறு அந்தணச் சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு அந்தக் கமண்டலத்தை எடுத்துக்கொண்டு ஓடவே, திரும்பிப் பார்த்த அகத்தியர் அந்த சிறுவனைத் துரத்திக்கொண்டு ஓட, அந்தச் சிறுவன் கமண்டலத்து நீரை அங்கேயே அப்படியே கவிழ்த்துவிட்டு ஓட, மீண்டும் அகத்தியர் துரத்த, அங்கே காட்சி அளிப்பது! யாருனு நினைச்சீங்க? நம்ம பிள்ளையார் தான்! தும்பிக்கை நாதனைக் கண்ட அகத்தியர் ஆஹா, இங்கே தான் லோபாமுத்திரையின் சேவை ஆரம்பிக்கணும் என்பது இறைவன் கட்டளை என்று புரிந்து கொண்டார். பிள்ளையார் கவிழ்த்த அந்தக் கமண்டலத்தில் இருந்தே காவிரி உற்பத்தி ஆனாள். கவேரமன்னனின் புதல்வி ஆனதால் காவிரி என்ற பெயர் பெற்றாள் லோபாமுத்திரை. அவள் நீர் வடிவம் நதியானதும், உடல் வடிவில் அகத்தியரைப் பின் தொடர்ந்து சென்றாள் என்று புராணங்கள் கூறும்.
இவ்விதம் வேடிக்கைகள் செய்தார் நம்ம விநாயகர். அதோடு மட்டுமா? ராவணனையும் ஏமாற்றினார். ராவணன் திருக்கைலையிலே சிவ வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பி இலங்கை நோக்கி வரும்போது ஈசன் கொடுத்த ஆத்மலிங்கத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்யும் எண்ணத்தோடு வந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஆத்மலிங்கத்தை எங்கேயும் கீழே வைக்காமல் தலையில் சுமந்து செல்லக் கட்டளை இடப்பட்டிருந்தது. வழியில் அவனுக்கு இயற்கை உபாதை அதிகமாகவே ஆத்ம லிங்கத்தைக் கீழே வைக்க முடியாமல் என்ன செய்வது என்று யோசித்தபோது, வந்துட்டார் நம்ம பிள்ளையார். அவரோட வழக்கப்படி ஒரு சின்னப் பையனாய்க் குறும்பு கொப்பளிக்கத் தோன்றினார். அந்தப் பையனைப் பார்த்த ராவணன் சற்று நேரம் இந்த விக்ரஹத்தை வைத்துக்கொள் என்று சொல்லிக் கொடுக்க, அந்தப் பிள்ளையோ, என்னாலே ரொம்ப நேரமெல்லாம் சுமக்க முடியாதாக்கும், கை வலிக்கும், கை வலிச்சா உன்னை மூணுதரம் கூப்பிடுவேன். நீ அதுக்குள்ளே வந்துடணும், இல்லைனா நான் கீழே வச்சுடுவேன் என்று பயமுறுத்த, ராவணனும் சரி என்று சம்மதிக்கிறான். அவன் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம், இந்தப் பக்கம் நம்ம பிள்ளையார் மூணு தரம் அவனைக் கூப்பிட்டுவிட்டு லிங்கத்தைக் கீழே வைத்தார்.
அப்போது தான் இதிலே ஏதோ சூது என்று புரிந்துகொண்ட ராவணன் ஓடி வந்து அந்தப் பிள்ளையின் தலையில் மூன்று முறைகள் ஓங்கிக் குட்ட, அவனுக்கு எதிரே காட்சி அளித்த விக்னேஸ்வரர் அவனை ஒரு பந்து போலத் தூக்கி எறிந்தார். தன் இருபது கைகளாலும் அந்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று முடியாமல் போகவே இதுவும் இறைவன் திருவிளையாடல் என்று புரிந்து கொண்ட ராவணன் விநாயகருக்கு எதிரே தன் தலையில் மூன்று முறைகள் குட்டிக்கொண்டு மன்னிப்புக் கோரினான்.
https://upload.wikimedia.org/wikipedia/commons/7/79/Khairatabad_Ganesh.jpg