"

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணபதி!

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால்

க= அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக்குறிக்கும்

ண= மோக்ஷத்தைக் குறிக்கும் சொல்

பதி=சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி.

ஈசன்:கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம்பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல்லுகின்றது. கணேசனே ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப் படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர்.

பிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும் அந்த மனைவியர் பெயர் சித்தி, புத்தி என்றும் சொல்லுவதுண்டு. கூர்ந்து கவனியுங்கள் மனைவியரின் பெயரை. சித்தி, புத்தி. நமக்கு என்ன தேவை, நல்ல புத்தியும், அதனால் விளையும் சித்தியும். ஆகப் பிள்ளையாரை வணங்கினால் இவைகிடைக்கும் என்பது கண்கூடு. அந்த மனைவியரின் பிள்ளைகள் சுபன், லாபன் என்ற பெயரிலும், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவன். லாபத்தைத் தரக் கூடியவன். அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண்கூடு.

மூஞ்சுறு வாகனத்தைக் கொண்டவர் பிள்ளையார். இத்தனை பெரிய பிள்ளையாருக்கு இவ்வளவு சிறிய வாகனமா என எண்ணக் கூடாது. நம் அறியாமையே மூஞ்சுறு. மூஞ்சுறுக்கு யோசிக்கும் திறன் இல்லை. மிகச் சிறிய ஒன்று. சோம்பலாகவும் இருக்கும். இந்தச் சோம்பலை அடக்கி, யோசிக்கும் திறனைக் கொடுத்து அறியாமையில் இருந்து நம்மை மீட்க வேண்டும் என்பதின் குறியீடே மூஞ்சுறு வாகனம். இதைத் தவிர, கிருதயுகத்தில் பிள்ளையாருக்கு சிங்கமும், திரேதாயுகத்தில் மயிலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறும், கலியுகத்தில் குதிரையும் வாகனம் எனச் சொல்லப் படுகின்றது. மயில்னதும் சுப்ரமணியர்தானே நினைவில் வரார்? இல்லை, பிள்ளையாருக்கும் மயில் உண்டு. அதைப் பத்திப் பின்னால் பார்க்கலாம்.

மூலாதாரம்: நம் உடலில் உள்ள சக்கரங்களுக்குள் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதி பிள்ளையார் தான். மூலாதாரம் பூமி வடிவு. மண் தத்துவம். பிள்ளையாரையும் நாம் களிமண்ணால் தானே பிடித்து வைக்கின்றோம். ஆகவே பூமியைக் குறிக்கும் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதியும் பிள்ளையாரே ஆவார். இந்தப் பிள்ளையாரின் பீஜ மந்திரத்தை உச்சரித்து மூலாதாரத்திலிருந்து சக்தியை எழுப்பி மெல்ல மெல்ல மேலே வருவதற்கு பிள்ளையார் உதவுகின்றார்.

வேதங்களுக்கெல்லாம் முதல்வன் விநாயகனே. நான்கு வேதங்களும் புகழும் கடவுள் விநாயகனே. வேழமுகனே வேதம் என்றும் கணபதி எனவும் விக்னராஜன் எனவும் அழைக்கப் படுகின்றான். ப்ரும்மணஸ்பதி எனவும் சொல்லப் படுகின்றது. உபநிஷத்துக்களில் கணபதி உபாசனா முறை இருக்கின்றன என்று ஆன்றோர் சொல்லுகின்றனர்.

மோதகம்: வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தன் கற்பின் வலிமையால் விநாயகர் தங்கள் ஆசிரமத்துக்கு வரப் போவதை அறிந்து கொள்கின்றாள். விநாயகருக்குத் தருவதற்காக அவள் மோதகம் செய்து தன் கணவரிடம் அளித்து விநாயகருக்கு அதை அளிக்கச் செய்கின்றாள். அவள் மறைமுகமாய் உணர்த்தியது, பிரும்மம் அண்டம் முழுதும் நிறைந்துள்ளது என உணர்த்த வெள்ளை மாவை அண்டமாகவும், உள்ளே நிறைந்துள்ள பூரணத்தை பரப்பிரும்மமாகவும் உருவகப் படுத்தினாள். அதனாலேயே இன்றளவும் விநாயகர் வழிபாட்டில் மோதகம் முக்கிய இடம் பெறுகின்றது.

தந்தம்: விநாயகரின் தந்தம் ஒன்று உடைஞ்சிருப்பதைப் பார்த்திருப்பீங்களே? வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விநாயகரின் உதவியைக் கோரினார். விநாயகரை வந்து எழுதித் தரச் சொன்னார். விநாயகரும் சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை வச்சுப் பிள்ளையார் எழுதுவார்? யானை ஆச்சே? அதிலும் ஆண் ஆனை, தந்தம் இருக்குமே. இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைச்சது அந்த ஆனைமுகன். உடைச்ச தந்தத்தாலேயே எழுத ஆரம்பிச்சார். இதே தந்தத்தாலேயே ஒரு சமயம் அசுரன் ஒருவனையும் ஒழித்தார். ஆக பாரதம் எழுதியதின் மூலம் ஆக்கலும், அசுரரை ஒழித்ததின் மூலம் அழித்தலும், தேவரைக் காத்ததின் மூலம் காத்தலும் ஆகிய முத்தொழிலையும் தந்தத்தின் உதவி கொண்டே செய்தார் விநாயகர்.

ஆனந்த புவனம்: கைலையின் ஒருபகுதியின் ஆனந்த புவனம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ளதாம். கணேசனின் உறைவிடமான இது, சிந்தாமணி த்வீபம் எனவும் அழைக்கப் படுகின்றது.

எட்டு விதமான அவதாரங்களைப் பிள்ளையார் எடுத்திருக்கின்றார் என முத்கல புராணத்தில் ஆங்கிரஸ முனிவர் சொல்லுகின்றார். அவை யாவன: வக்ரதுண்டர், ஏகதந்தர்= தேக பிரும்மம், மகோதரர்= ஞான பிரும்மம், கஜானனர்=சாங்கிய பிரும்மம், லம்போதரர்=சக்தி பிரும்மம், விகடர்=ஆதி சக்தி, விக்னராஜர்=விஷ்ணு சக்தி, தூம்ரவர்ணர்=சிவ சக்தி ஆக எட்டு அவதாரங்கள் எனச் சொல்லப் படுகின்றது. நவகிரஹங்களும் பிள்ளையாரிடம் அடக்கம் என்றும் சொல்லுவார்கள். சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனீஸ்வரரை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் வைத்துள்ளதாய்ச் சொல்லப்படுவதுண்டு.

File:Ganpati at Pune.JPG

https://en.wikipedia.org/wiki/File:Ganpati_at_Pune.JPG

Share This Book