"

இப்போ இயன்றவரை எளிய தமிழில் விநாயகரைத் துதித்துக் காசிபர் எழுதினதாய்ச் சொல்லப் படும் காரியசித்தி மாலை பத்திச் சொல்லப் போறேன். முதல்லே ஒரு முன்னுரை. இந்தக் காரிய சித்தி மாலையை நான் பல வருஷமாப் படிக்கிறேன். முதல்லே ஆரம்பிச்சது என்னமோ காரியம் ஒண்ணு நடக்கணும்னு தான். காரியம் சித்தி ஆனாலும் நம்ம பிள்ளையாரோடதாச்சேனு தினம் முடியாட்டியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பேன். நிச்சயமாய் மனசுக்கு ஆறுதலும் ஏற்படுது, கவலைகள், பிரச்னைகள் இருந்தால் மனம் லேசாக ஆகும். கவனிக்கவும், பிரச்னைகள் தீரும்னு சொல்லலை. நமக்கு வந்ததை நாம தான் தீர்த்துக்கணும். பிரச்னைகளைத் தாங்கும் அளவுக்கு மனவலிமை ஏற்பட்டு விடும். அதற்கு உத்திரவாதம் உண்டு.

“பந்தம் அகற்றும் அநந்தகுணப்

பரப்பும் எவன்பால் உதிக்குமோ

எந்த உலகும் எவனிடத்தில்

ஈண்டி இருந்து கரக்குமோ

சந்த மறைஆ கமலங்கலைகள்

அனைத்தும் எவன்பால் தகவருமோ

அந்த இறையாம் கணபதியை

அன்பு கூரத் தொழுகின்றோம்.”

நாம் அனைவருமே பந்த பாசங்களால் கட்டுண்டவர்களே. இது நம்முடையது என்ற எண்ணம் இல்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அந்தப் பந்த, பாசங்களை அகற்றும் குணமுள்ளவன் வேழமுகத்தான் ஒருவனே! மேலும் இந்த உலகை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவன் அவனே. அவனின் பெருத்த வயிற்றில் இருந்தே அனைத்து உலகும் தோன்றுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா? விநாயகனே ஓங்கார வடிவானவன். அத்தகைய ஓங்கார சொரூபியான விநாயகனிடமிருந்தே அனைத்துக் கலைகளும், வேதங்களும், ஆகமங்களும் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. இத்தனை பெருமை வாய்ந்த இறைவனாகிய கணபதியை நாம் உள்ளத்தில் அன்பு மீதூற வணங்கித் துதிப்போம்.

“உலகம் முழுதும் நீக்கமற

ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்

உலகிற் பிறக்கும் விகாரங்கள்

உறாத மேலாம் ஒளி யாவன்?

உலகம் புரியும் வினைப்பயனை

ஊட்டுங் களைகண் எவன் அந்த

உலகமுதலைக் கணபதியை

உவந்து சரணம் அடைகின்றோம்.”

இந்த உலகில் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் மூலாதாரமாகிய கணபதியே! இறைவன் படைத்த இவ்வுலகில் நிறைந்திருக்கும் காம, குரோத, மத, மாற்சரியங்கள் எவையும் அவனிடம் ஒட்டுவதில்லை. அவன் எந்தவிதமான விருப்போ, வெறுப்போ இல்லாதவனாக இருக்கின்றான். பரிபூரணப் பேரொளியாய் நிறைந்துள்ளான். இந்த உலகில் உள்ள நாம் செய்யும் செயல்களின் வினப்பயனை நமக்குத் தருபவன் அவனே. தீவினைகளைக் களைகின்ற திறன் படைத்தவனும் அவனே. அத்தகைய உலகுக்கே ஆதிகாரணம் ஆன முழு முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழச் சரணம் எனத் துதிப்போம்.

“இடர்கள் முழுதும் எவனருளால்

எரிவீழும்பஞ்செனமாயும்

தொடரும் உயிர்கள் எவனருளால்

சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்

கடவுள் முதலோர்க்கூறின்றிக்

கருமம் எவனால் முடிவுறும் அத்

தடவு மருப்புக் கணபதிபொன்

சரணம் சரணம் அடைகின்றோம்.”

நெருப்பில் இட்ட பஞ்சு எப்படி உடனே இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அவ்வாறே கணபதியைத் துதித்தால் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போகின்றன. கணபதியைத் துதித்து அவனைத் தொடர்ந்து நாம் சென்றோமானால் அந்த உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் வாழும் பதிக்கு எடுத்துச் சென்று நமக்கு நற்கதியை ஊட்டுவார். நாம் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேற்ற மற்ற எந்தக் கடவுளரையும் விட விக்னராஜன் ஆகிய கணபதியே துணை புரிவான். அவனாலேயே நம் காரியங்கள் அனைத்தும் முடித்து வைக்கப் படும். இனிதாகவும், எளிதாகவும், சிரமம் இன்றியும் நம் காரியங்களை முடித்து வைக்கும் ஏகதந்தன் ஆகிய கணபதியின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம்.

“மூர்த்தியாகித் தலமாகி

முந்நீர்க்கங்கை முதலான

தீர்த்தமாகி அறிந்தறியாத்

திறத்தினானும் உயிர்க்கு நலம்

ஆர்த்தி நாளும் அறியாமை

அகற்றி அறிவிப்பான் எவன் அப்

போர்த்த கருணைக் கணபதியைப்

புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு. அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த் திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

“செய்யும் வினையின் முதல்யாவன்

செய்யப் படும் அப்பொருள் யாவன்

ஐயம் இன்றி உளதாகும்

அந்தக் கருமப் பயன் யாவன்

உய்யும் வினையின் பயன் விளைவில்

ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்

பொய்யில் இறைக் கணபதியைப்

புரிந்து சரணம் அடைகின்றோம்.”

நாம் செய்யும் அனைத்து வினைகளுக்கும், இங்கே வினை என்பது காரியத்தைக் குறிக்கும் சொல்னு நினைக்கிறேன். காரியங்களுக்கு எல்லாம் முதல் முழுப் பொருளாகவும், செய்யப் படும் அந்தப் பொருளே அவனேயாகவும், அந்தக் காரியத்தின் விளைவினால் உண்டாகும் பயனை நமக்குப் பெறச் செய்பவனும் மூலப் பொருளான கணபதியே ஆகும். அத்தகைய முழுமுதல் பொருளான அனைத்துக்கும் காரணம் ஆன மெய்ப்பொருள் ஆன இறைவன் ஆகிய கணபதியைச் சரண் என அடைக்கலம் அடைகின்றோம்.

“வேதம் அளந்தும் அறிவரிய

விகிர்தன் யாவன் விழுத்தகைய

வேதமுடிவில் நடம் நவிலும்

விமலன் யாவன் விளங்குபர

நாதமுடிவில் வீற்றிருக்கும்

நாதன் எவன் எண்குணன் எவன் அப்

போதமுதலைக் கணபதியைப்

புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

வேதங்களால் அறிய முடியாதவன் விநாயகன். வேதத்தின் முடிவான விமலனும் அவனே. உலகெங்கும் பரந்து விளங்கும் பரமாநந்த சொரூபமாய் விளங்கும் நாதமும் அவனே. எண்குணங்களை உடைய அத்தகைய கணபதியைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

https://commons.wikimedia.org/wiki/File:Ganesha_Painting_at_a_Temple_in_Bhadrachalam.jpg

Share This Book