"

கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்! 3

கெளண்டின்ய ரிஷியின் ஆசிரமம்.தன் மனைவியான ஆசிரியையுடன் அங்கே இல்லறத்தை நல்லறமாக ஆக்கிக் கொண்டிருந்தார் முனிவர். தூய தவ வாழ்க்கையை இல்லறத்துடன் கூடி அனுசரிப்பது எவ்வாறு என்பதற்கு ஒரு உதாரணமாய்த் திகழ்ந்தார் கெளண்டின்யர். ஆதி முதல்வனும், வேழமுகத்தோனும் ஆன விநாயகன் மேல் மிகுந்த பக்தி கொண்டவராய் கெளண்டின்யர் தினமும் அறுகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தார். ரிஷிபத்தினியான ஆசிரியைக்குத் தான் ரிஷிபத்தினியாக இருந்தாலும் இவ்வுலகின் சுக,போக செளக்கியங்களையும் அனுபவிக்க முடியாமல் கணவர் தடை செய்கின்றார் என்ற ஒரு எண்ணமும் இருந்து வந்தது. முனிவரும் இதை நன்கு அறிவார்.

ஒருநாள் ஆசிரியை விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த மலர்கள் எத்தனையோ இருக்க அறுகம்புல்லை மட்டும் வைத்து அர்ச்சிப்பது ஏன் எனத் தன் கணவனை வினவினாள். கெளண்டியரும் பொறுமையாக அவளுக்கு அனலாசுரனை விழுங்கிய விநாயகர் பற்றியும், விநாயகர் வயிற்றில் அனலாசுரனைப் போட்டுக் கொண்டதால் வெப்பம் தாங்க முடியாமல் அக்னி உட்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பதறித் துடித்ததையும், அப்போது விநாயகரே, பிரம்மாவின் மூலம் தனக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை, அபிஷேகம் செய்யச் சொன்னதையும், மூவுலகிலும் இருந்து வந்த ரிஷி, முனிவர்கள் அனைவரும் 21 அறுகம்புல்லால் விநாயகரை அர்ச்சித்ததையும் கூறுகின்றார். விநாயகரும் அதில் மகிழ்ந்து எனக்குப் பிடித்தமானது அறுகும், வன்னியுமே என்று சொல்லி மறைந்தாராம். இதைக் கூறினார் மனைவியிடம் கெளண்டியர். மனைவியோ, “எல்லாம் சரி, இந்த அறுகம்புல்லை வைத்துக் கொண்டு என்ன செய்வது??எந்தப் பொருள் வாங்குவதானாலும் பணம் வேண்டுமே? அறுகம்புல்லால் ஆவது என்ன?” என்று ஏளனமாய்க் கேட்கின்றாள். அவளைக் கண்டு நகைத்த கெளண்டியர், “பெண்ணே, இந்தா, இந்த ஒரு அறுகம்புல் போதும். என் தவவலிமையால் உன்னை இந்திரலோகத்துக்கு அனுப்புகின்றேன். தேவேந்திரனிடம் சென்று இந்த அறுகம்புல்லின் எடைக்கு எடை செல்வம் பெற்று வருவாய்!” என்று சொல்லுகின்றார்.

அவளும் ஒத்துக் கொள்ள அறுகம்புல்லை அவளிடம் அளித்து, தன் தவ வலிமையால் அவளை இந்திரலோகம் அனுப்புகின்றார் கெளண்டின்யர். இந்திரனிடம் அந்த அறுகம்புல்லைக் காட்டி அதற்கு ஈடான செல்வத்தைக் கொடுக்குமாறு ஆசிரியை கேட்டாள். இந்திரனும் அந்த அறுகை தராசின் ஒரு தட்டிலே வைத்து, மறு தட்டிலே பொன்னை வைக்கின்றான். தன்னிடம் உள்ள அனைத்தையும் வைக்கின்றான். ஆனாலும் தட்டு உயரவில்லை. திகைத்த தேவேந்திரன் தன்னையே வைக்கின்றான். ஆசிரியை கூட கெளண்டியரின் ஆசிரமத்திற்கு வருகின்றான் அவளுக்கு அடிமையாக. ஆசிரியையும் புரிந்து கொள்ளுகின்றாள். பக்தியோடும், பூரண ஈடுபாட்டோடும் கொடுக்கும் ஒரு அறுகம்புல் எத்தகைய பெருஞ்செல்வத்துக்கும் ஈடாகாது என.

மனம் சலனம் அடையாமல் ஒரே நிலையில் இருந்து ஒருமைப்பாடு உண்டாக விநாயக வழிபாடே சிறந்தது. அதனாலேயே அந்தக் காலங்களில் மந்த புத்தியுள்ள மாணாக்கர்களைத் தலையில் குட்டிக் கொண்டு தோர்பி கரணம் போடச் செய்வார்கள். இதன் மூலம் மூளை சுறுசுறுப்பு அடையும். மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்ப ஒரே வழி தோர்பி கரணம் தான். நெற்றியில் குட்டிக் கொள்ளுவதால் பிந்துவின் உள்ளே மறைந்திருக்கும் அமிர்த கலசம் எழும்பி உடல் முழுதும் பரவும். மன அமைதி ஏற்பட்டு மனம் ஒருமைப் படும். இதை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன் என்றால் இன்று விஞ்ஞான பூர்வமாயும் இது நிரூபிக்கப் பட்டுள்ளது என்பதற்குஇ.கொ.வின் இந்தப் பதிவே சான்று.

விநாயகர் தோற்றத்தின் தத்துவமே தீமையைத் தடுப்பது ஆகும். விக்கின விநாயகன் என்பதன் அர்த்தமே அதுதான். நன்மை செய்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமலும், தீமை செய்பவர்களைத் தடுப்பதுமே விநாயகரின் தோற்றத்தின் தத்துவம். மனதில் உள்ள மாபெரும் அசுரன் ஆன தீயகுணம் நீங்கி, நல்ல குணம் பெருக விநாயக வழிபாடு உதவி செய்யும். இதைத் தான் அசுரர்களை வெல்வதற்காக விநாயகரை வழிபட்டுச் சென்றனர் தேவர்கள் என்று சொல்லுகின்றார்கள். நாம் நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தாலும் பல சமயம் தீய எண்ணமே மேலோங்குகின்றது அல்லவா? அந்த அசுர குணம் மேலோங்காமல் இருக்கவே விநாயக வழிபாடு அவசியம் ஆகின்றது. விநாயகர் திருக்கைலையின் சித்திரமண்டபத்தில் உள்ள ஏழுகோடி மந்திரங்களுக்கு நடுவில் உள்ள, “சமஷ்டிப் பிரணவம்” வ்யஷ்டிப் ப்ரணவம்” ஆகிய இரு ப்ரணவங்களின் சேர்க்கை என்று புராணங்கள் சில கூறுகின்றதாய்த் தெரியவருகின்றது.

விநாயகருக்கு ஒற்றைக் கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், உள்ளன. விநாயகரை வழிபடுவோர் ஏழு பிறவிகளும் நீங்கி, எட்டுத் திசைகலும் புகழ ஒன்பது மணிகளும் பெற்று சம்”பத்து”டன் வாழ்வார்கள். “தத்துவ மசி” என்ற வாக்கியத்தின் வடிவே விநாயக சொரூபம். பிரணவ சொரூபம் ஆன விநாயகரின் காது, அகன்ற தலை, வளைந்த துதிக்கை ஆகியவை “ஓம்” என்ற சொல்லின் வடிவத்தைக் காட்டுகின்றது. திருவடிகள் ஞானசக்தியும், இச்சாசக்தியும். பேழை போன்ற பெரிய வயிற்றில் அனைத்து உலகும் அடங்கும். கரங்கள் ஐந்தொழில்களைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், மோதகக் கரம் காத்தலையும், அங்குசக் கரம் அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கரம் மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருள்வதையும் சுட்டுகின்றது. மூன்று கண்களாய் சூரியன், சந்திரன், அக்னியை உருவகம் செய்கின்றனர். விநாயகரின் நாடி பிரம்ம ரூபம், முகம் விஷ்ணு ரூபம், கண் சூரிய ரூபம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பாகம் சிவ ரூபம் ஆகும்.

விநாயகரை வணங்க மறந்த பிரம்மன் படைத்த சிருஷ்டிகள் அனைத்தும் சரியான உருவம் பெறாமல், இஷ்டத்துக்கு பேய், பிசாசுகள் போல் அலைய ஆரம்பிக்க தன் தவறை உணர்ந்த பிரம்மா விநாயரை வணங்கிப் பின்னர் சிருஷ்டி சக்தியைப் பிரயோகம் செய்ய ஆரம்பிக்கின்றார். அப்போது தேவர்கள் அமிர்தத்தால் ஆன மோதகம் ஒன்றை ஈசனிடம் கொடுக்க, விநாயரையும், முருகனையும் பார்த்து ஈசன் யார் முதலில் உலகைச் சுற்றிப் புண்ணியம் சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கே இந்த மோதகம் என்று சொல்ல முருகன் மயிலேறி புண்ணிய நதிகளில் நீராடி, மலை, காடுகளில் உள்ள ஈசனின் சான்னித்தியத்தை அறிந்து வரப் புறப்படுகின்றார். விநாயகரோ தாய், தந்தையரை வணங்குவதே புண்ணியம், அதைவிடப் புண்ணியம் ஏதுமில்லை என்று சொல்லி அவர்களை வழிபட, ஈசன் மோதகத்தை விநாயகருக்கு அளிக்க அதுவே இன்று வரையிலும் விநாயகர் கையில் காட்சி அளிக்கின்றது. பிள்ளையாரப்பா, அம்பிக்கு இந்த மோதகத்தைக் கொடுத்துடாதே! பத்திரம்! இந்தக் கதை சற்றே மாறி மாம்பழக் கதையாகத் திரைப்படங்கள் மூலம் அறிகின்றோம். உண்மையில் இந்தக் கதையின் தாத்பரியம் மறைக்கப் பட்டு ஒரு மாம்பழத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்ட கடவுள்களாய்ச் சித்திரிக்கப் பட்டதிலே அது தான் உண்மை என்று நம்பும் அளவுக்கு இருக்கின்றோம். யாராக இருந்தாலும் முதலில் தாய், தந்தையருக்கே மரியாதை செய்யவேண்டும், தாய், தந்தையரைப் போற்ற வேண்டும், அவர்களைக் கடவுளுக்கு நிகராய் வணங்க வேண்டும் என்பதே இதன் உண்மையான தத்துவம். ஆனால் இன்று இது திரைப்படங்களின் தாக்கத்தால் பக்தர்களிடையே பிரிவை உண்டாக்கிப் பெரும் சண்டைக்கும் வழி வகுத்திருக்கின்றது. இது ஒரு துர்ப்பாக்கியமே.

தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்து, அந்த சாட்சாத் மகாவிஷ்ணுவையே அரைச்செங்கல்லைத் தூக்கிப் போட்டு இதன் மேல் நில் என்று சொன்ன புண்டரீகன் கதை எல்லாருக்கும் தெரியும் தானே? நம் தர்ம சாஸ்திரமும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தானே சொல்லுகின்றது. இந்தக் கதையின் உள் அர்த்தமே இது தான். மறக்காதீங்க. யாரும், யாரோடயும், எப்போவும், எதுக்காகவும் சண்டை போட்டுக்கலை, நாமளும் போட்டுக்க வேண்டாம்!

விநாயகர் வலம் வருவார்!

ஸ்வாமி ஓம்கார் said…

என் அன்பு சகோதரி

உங்கள் பதிவு மிக அருமை.

கணபதியின் அனைத்து புராண கதைகளையும் தொட்டு படர்கிறது.

நல்ல ரசிக்கும்படியாக இருந்தது.

உங்கள் எழுத்தில் கூறிய அருகம்புல்லை பற்றி சில கருத்துக்கள் கூற விரும்புகிறேன்.

நமது கலாச்சாரத்தில் சிவன், விஷ்ணு, சக்தி மற்றும் விநாயகருக்கு தான் இலை அர்ப்பணிக்கிறோம்.

சிவனுக்கு வில்வம் , விஷ்ணுவுக்கு துளசி, அம்மனுக்கு வேம்பு என படைத்தலும் கணபதிக்கு அருகம்புல் படைப்பதில் ஒரு சூட்சமம் உண்டு.

மேல் சொன்ன இலைகளை மனிதன் பயிர் செய்தால் பெறலாம். ஆனால் அருகம்புல் தானே வளர வேண்டும். மனிதனால் பயிர் செய்ய முடியாது.

பிரணவ பொருளான விக்நேஷ்வரனும் நித்யமானவன்…யாராலும் உருவாக்கப்பட்டவன் அல்ல என்பதை உணரவே அருகம்புல். ( பார்வதி தேவி உருவாகியதாக சொல்லுவது செவி வழி கதையே புராணத்தில் இல்லை.)

அருகம்புல்லுக்கு விதை, கனி , கிளை கிடையாது. பந்த பாசம் , மறு ஜென்மம் அனைத்தையும் நீக்கி முக்திக்கு வழிகாட்டவே அருகம்புல்லை அவருக்கு அர்ப்பணிக்கிறோம்.

பிரணவ மந்திரம் மூன்று பகுதிகளை கொண்டது. “அ ஊ ம்” என்பதின் இணைவே என மாண்டுக்கிய உபநிஷத் கூறுகிறது. அதன் அடிப்படையில் அதன் சப்த கால இடைவெளியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான். சிறிய தலை (அ) , பெரிய வயிறு (ஊ), சிறிய கால்கள் (ம்) .

நீங்கள் கூறியது போல கணநாதன் பிரணவ வடிவில் இருக்கிறான்…

உங்களை பாராட்ட வந்து விட்டு அதிக கருத்துக்கள் சொன்னதற்கு மன்னிக்கவும்…

ஸ்வாமி ஒம்கார்

http://gurugeethai.blogspot.com/

கருத்துக்கு நன்றி ஸ்வாமி ஓம்கார்.

Ganesha

Share This Book