கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- 7
அம்பி சுக்லபட்ச சதுர்த்திக்கும், சங்கட சதுர்த்தி விரதம் இருக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்திக்கும் உள்ள முக்கியத்துவம் பற்றிக் கேட்டிருந்தார். பொதுவாய் சுக்கில பட்சத்தில் சந்திரன் வளர ஆரம்பிப்பான். அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் அந்த சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்தால், சந்திரன் வளருவது போல் துன்பமும் வளரும் என்பதாலேயே அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படி சொல்லப் படுகின்றது. அதே பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் விரதம் இருப்பவர்கள் அன்றைய சந்திரனைப் பார்த்துவிட்டே அன்று விரதம் பூர்த்தி செய்யவேண்டும் என்பதும் எழுதப் படாத விதி. ஏனெனில் சந்திரன் தேய ஆரம்பிப்பான். துன்பமும் அது போல் தேய்ந்து போகும் என்ற நம்பிக்கையும், விரதம் இருக்க வேண்டிய விதியும் அப்படி இருப்பதே காரணம். சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சங்கட ஹர சதுர்த்தியிலே தான் ஆரம்பிப்பார்கள். சந்திரன் எப்படித் தேய்ந்து போவானோ அதே போல் துன்பமும் தேயவேண்டும் என்பதாலேயே இந்த விரதத்துக்கே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவதுண்டு. ஆவணிமாதச் சதுர்த்தி விநாயகரின் பிறந்த தினமாய்க் கொண்டாடப் படுகின்றது.
இதன் பின்னர் வரும் சங்கட சதுர்த்தியில் இருந்தோ, அல்லது இந்த ஆவணிமாத விநாயக சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, மறு வருஷம் ஆடி மாதம் வரும் மகா சங்கடசதுர்த்தியில் இருந்து, பதினைந்தாம் நாள் வரும் ஆவணிமாத சுக்லபட்ச சதுர்த்தியில் (விநாயக சதுர்த்தி அன்று) விரதம் பூர்த்தி ஆகும். இது மாதிரியும் இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று இரவு மிக மிக தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டே உணவு உட்கொள்ள வேண்டும். இது கஷ்டம் என்று நினைப்பவர்கள் மகாசங்கட சதுர்த்தியில் விரதம் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் கழித்து வரும் விநாயக சதுர்த்தியிலும் முடித்துக் கொள்ளலாம். விரதம் இருப்பது என்பது மனத்தூய்மைக்காகவே. உடல்நலக் கேடு உள்ளவர்களால் தொடர்ந்து விரதம் இருக்க முடியாது என்பதால் இப்படி வைத்துக் கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்களையும் விநாயகரோ அல்லது வேறு கடவுளர்களோ ஒன்றும் சொல்லப் போவதில்லை. உடல்பலமும், மனபலமும் உள்ளவர்கள் மேற்கண்ட முறைகளில் விரதம் இருக்கலாம்.
https://commons.wikimedia.org/wiki/File:Nepalese_-_Dancing_Ganesha_-_Walters_543011.jpg