"

இப்போ இந்த விநாயக சதுர்த்தி ஒரு சமூகப் பண்டிகையாக மாறியது எப்போ என்றால் 1893 லோகமான்ய திலகரால் ஆரம்பிக்கப் பட்டது. அன்று வரையிலும் வீடுகளில் மட்டுமே வணங்கப் பட்டு வீட்டின் கிணற்று நீரிலோ, அக்கம்பக்கம் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கப் பட்ட விநாயகரை, சமுதாய ஒற்றுமைக்காகவும், அனைத்து விழாக்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து ஜாதி, இன வேறுபாடு இல்லாமல் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்டது. மேலும் திலகரின் காலத்தில், ஆங்கிலேயரால் கையாளப் பட்ட பிரித்தாளும் கலை மெல்ல, மெல்ல வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தது. இது அனைத்தையும் முறியடிக்கவும், பக்தி மார்க்கத்தின் மூலம் மக்களை எழுச்சி பெறச் செய்து சுதந்திர வேள்வியில் பங்கு பெறச் செய்யவுமே இது அவரால் ஏற்படுத்தப் பட்டது. மிக மிகப் பெரிய விநாயகரின் சிலைகளை நிறுவி, மகாராஷ்டிரத்தின் புனே நகரில் முதன் முதல் ஆரம்பிக்கப் பட்ட இந்த சதுர்த்தித் திருவிழா, மெல்ல, மகாராஷ்டிரத்தின் மற்ற நகரங்களுக்கும் பரவி, மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோயில்களிலும் பிரசித்தி பெற்று, இன்று மகாராஷ்டிரத் தலை நகர் ஆன மும்பையின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. எனினும், நம் தமிழ்நாட்டில் ஒரு சில சமூகத்தினரே வீதியில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்திவிட்டு, அந்த விநாயகரை அன்றே நீர்நிலைகளில் கரைத்து வந்தனர்.

ஊடகங்களின் விளைவுகளாலும், மக்கள் அங்குமிங்கும் இடம் பெயர்ந்த காரணத்தாலும் இன்று விநாயக சதுர்த்தி நம் தமிழ்நாட்டிலும் பெருமளவில் சமூக விழாவாய்க் கொண்டாடப் படுகின்றது. மகாராஷ்டிரத்தில் 10 தினங்கள் நடைபெறும் இந்த விழா இங்கே 5,7, 9 நாட்களில் ஒவ்வொரு குழுவினர் ஒவ்வொரு நாள் என்று அரசு அறிவிப்புக்கு ஏற்ப விழாவை முடிக்கின்றனர். இந்த விநாயகர் பரவலாய் நம் நாடுமுழுதுமே வணங்கப்படும் ஒரு தெய்வமாய் இருந்து வருகின்றார். எவ்வளவு சிறிய கிராமமாய் இருந்தாலும் கிராமத்தின் நுழைவாயிலிலோ, அல்லது கிராமத்தின் குளக்கரை அல்லது ஆற்றங்கரையிலோ ஏதேனும் ஒரு மரத்தடியில் விநாயகர் உட்கார்ந்திருப்பார். இந்தியாவைத் தவிர, வெளிநாடுகளில் விநாயகருக்கெனத் தனிக் கோயில்கள் உள்ளன. அவற்றில் நேபாளத்திலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், யு.எஸ்ஸிலும் குறிப்பிடத் தக்க வகையில் அமைந்துள்ளன. இத்துடன் விநாயகர் விஸர்ஜனம் பெறுகின்றார். விநாயகர் பற்றி எழுத நிறைய இருக்கின்றது.

கணபதி பப்பா மோரியா

மங்கல மூரத்தி மோரியா

https://commons.wikimedia.org/wiki/File:கணபதி_சிலை.jpg

Share This Book