விநாயக புராணத்தில் இன்னும் சில முக்கியமான நிகழ்ச்சிகளைச் சொல்ல நினைக்கிறேன்.
ஒரு சமயம் கெளண்டின்ய முனிவர் தன் மனைவியான ஆசிரியையுடன் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்த காலத்தில், அவர் அவ்வளவு செல்வம் பெற்றவராய் இருக்கவில்லை. கெளண்டின்யரோ விநாயகர் மேல் அளவற்ற பக்தியுடன் அவரைப் பூஜித்து வந்தார். தினமும் விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனைகளும் செய்து வந்தார்.
ஆசிரியைக்குக் கணவன் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும் நாடி பெரும் பொருள் ஈட்டி வரவில்லையே எனத் தாபம் இருந்து வந்தது. என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு உற்ற பணிவிடைகளைச் செய்து வந்தாள். என்றாலும் செல்வம் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே இருந்தது அவளுக்கு. மனைவியின் முகவாட்டத்தைக் கவனித்த கெளண்டின்ய முனிவர் காரணத்தை அறிந்திருந்தாலும், மனைவியின் வாயாலும் அதைக் கேட்டு அறிந்தார்.
மனைவியின் மாயையை அகற்றவும், அவளுக்கு அருகின் மகிமையையும், இறைவனின் மேன்மையையும் உணர்த்த வேண்டி, கெளண்டின்யர் அவளிடம், அருகு ஒன்றை விநாயகருக்குச் சமர்ப்பித்து விட்டு எடுத்துத் தந்தார். “இந்த அருகைத் தேவேந்திரனிடம் கொடுத்து இதன் எடைக்கு ஈடாகப் பொன் பெற்றுக் கொள்வாயாக!” என ஆசியும் வழங்கினார்.
ஆசிரியை திகைத்தாள். “என்ன? ஒரு சிறிய அருகம்புல்லின் எடைக்கு ஒரு குந்துமணிப் பொன் கூட வராதே?” என நினைத்தாள். அலட்சியமாகவும், நிதானமாகவும் தேவேந்திரனை அடைந்தாள் கணவனின் உதவியுடன். அவனிடம் நடந்ததைச் சொல்லி இந்த அருகின் எடைக்குப் பொன் வேண்டுமாம் எனவும் கேட்கவே, தேவேந்திரன் திகைத்து அருகின் எடைக்குப் பொன்னா? என்னால் இயலாத ஒன்றே எனத் தவித்துத் தன் செல்வம் பூராவையும் தராசில் ஒரு பக்கமும், அருகை மறுபக்கமும் வைத்தான்.
அப்போது அருகின் எடைக்கு அந்தச் செல்வம் வரவில்லை. தேவேந்திரன் தானே ஏறி உட்காரவே சமனாயிற்று, தராசு. இப்போது திகைத்தாள் ஆசிரியை. இருவரும் கெளண்டிய முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர். கெளண்டின்ய முனிவரிடம் நடந்ததைச் சொன்ன ஆசிரியை வெட்கித் தலை குனிந்தாள். தேவேந்திரனைப் போகச் சொன்ன கெளண்டின்யர், ஆசிரியையிடம் இந்த அருகின் மதிப்பு உனக்குத் தெரியவில்லை என்று அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
தேவலோகத்தில் தேவகன்னிகள் நாட்டியமாடிய வேளையில் அங்கே வந்த யமதர்ம ராஜன் தன் மனைவியைப் பார்க்க எண்ணித் தன் தர்ம லோகத்துக்குச் செல்லும் வேளையில் அவனின் உடலில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் ஒரு அசுரனாக மாறியது. அக்னியைவிடவும் அதிகமான வெப்பத்துடன் இருந்த அந்த அசுரன் “அனலாசுரன்” எனவே அழைக்கப் பட்டான். அக்னி தேவனுக்கே அவனை நெருங்க முடியாத அளவுக்குத் தகித்துக் கொண்டிருந்தான். யமதர்ம ராஜனைத் தவிர மற்றவர் அனலாசுரனின் கொடுமையால் தவித்தனர். அப்போது ஒரு அந்தணர் வடிவில் தோன்றிய விநாயகர், அவர்களைத் தேற்றி அனலாசுரனைத் தேடிப் போனார். தம் சுய உருவோடு விஸ்வரூபம் எடுத்த அவர், தன் துதிக்கையால் அந்த அனலாசுரனை அப்படியே எடுத்து விழுங்கினார்.
பேழை வயிற்றுக்குள் மூன்று உலகையும் அடக்கிய விநாயகரின் வயிற்றுக்குள் அனலாசுரன் போகவும் அனைவரும் வெப்பம் தாங்க முடியாமல் தவித்தனர். பிரம்மா விநாயகனின் மேனி குளிர்ந்தால் தான் இந்த வெப்பம் தணியும் என அனைவரையும் விநாயகரின் மேனி வெப்பத்தைக் குறைக்கச் சொல்லவே, அனைவரும் ஒவ்வொரு வழியில் விநாயகரின் வெப்பத்தைத் தணிவித்தார்கள். ஒருவர் பாலாக அபிஷேஹம் செய்ய, இன்னொருவர், சந்தனம், பன்னீர், தேன், தயிர் என அபிஷேஹம் செய்கின்றனர். அப்போது அங்கே வந்த ரிஷி, முனிவர்கள் விஷயம் தெரிந்து கொண்டு 21 அருகம்புற்களால் விநாயகரை அர்ச்சிக்கவே விநாயகர் மேனி குளிர்ந்தது.
இந்த மூவுலகின் வெப்பமும் குறைந்தது. அன்று முதல் விநாயக வழிபாட்டில் அருகு முக்கிய இடத்தைப் பிடித்தது. வேறு பூக்களோ, மலர்களோ, இலைகளோ இல்லாவிட்டாலும் ஒரு சிறிய அருகே விநாயகரை மனம் மகிழ்விக்க வைக்கும்.
https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c2/Thajavur_Ganesha.jpg