விநாயகர் உருவ ரஹஸ்யம்
சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்”பத்து”க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். “தத்துவ மசி” என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.
பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும். ஐந்து கரங்களும் ஐந்து தொழிலகளைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும். மூன்று கண்களோ என்றால் முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது “பார்கவ புராணம்” என்னும் விநாயக புராணம். இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள். அடுத்து அவரை வழிபடும் முறை பற்றிப் பார்ப்போமா?
https://commons.wikimedia.org/wiki/File:A_depiction_of_Pillaiyar_statue.JPG