2 – பிள்ளையார் தோற்றம்
பிள்ளையார் எப்படித் தோன்றினார்ன்னு இப்போப் பார்ப்போமா? ரொம்ப நாளைக்கு முன்னே, அதாவது ரிஷிகள், முனிவர்கள்னு எல்லாருமா நிறைய இருந்தப்போ மரகத முனிவர்னு ஒரு முனிவர் இருந்தாராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப் பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட, முனிவர் மறுத்தும், பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன் பேர் கஜமுகாசுரன். இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான்.
(பொதுவாகவே நமக்குள்ளேயே ஒரு மனசு நல்லது நினைக்கும். ஒரு மனசு பொல்லாத விஷயத்தை யோசிக்கும். இப்போப் பக்கத்துப் பையனோ, பொண்ணோ தப்பு செய்தால் உடனே நாம டீச்சர் கிட்டே சொன்னா அது நல்ல மனசு. அப்படி இல்லாமல் நாமளே அவனை அடிச்சோ, கடிச்சோ தண்டிச்சோம்னா அது கெட்ட மனசு, இல்லையா? டீச்சர்னு ஒருத்தங்க பெரியவங்களா இருக்கும்போது, எதுவா இருந்தாலும் அவங்க கிட்டேத் தான் சொல்லணும், சொல்லுவோம். இந்த அசுரங்க அப்படி இல்லை, எதுவா இருந்தாலும் அவங்களே முடிவு எடுப்பாங்க. கடவுள்களையும் வேண்டிக்கிட மாட்டாங்க, அவங்க குருவும் சரியானபடி வழிகாட்ட மாட்டார். அப்படி அமைந்து போச்சு. இதுகூட ஏன் ஏற்பட்டதுன்னு கேட்டா, எல்லாருக்குமே வாழ்வோ, தாழ்வோ எல்லாமே ஏற்படும். கஷ்டமோ, சுகமோ எது வேணாலும் கிடைக்கும். எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்னு நமக்கு எல்லாம் மறைமுகமாத் தெரிவிக்கிறதுக்காக நடக்குது.)
அப்படித்தான் இந்த கஜமுகாசுரனும் இருந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது. அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது, மிருகமாயும் இருக்கக் கூடாது, ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக் கூடாது, ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்ம பாடு ஜாலிதான்னு அவன் நினைச்சான். சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா வச்சிருக்கோமான்னு அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான். அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான். தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசிச்சாங்க. தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும், தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம் ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத் தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப் பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள். பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத் தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க. விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும்னு தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன் செவி சாய்த்தார்.
திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். “பள பள” வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தன. அவை இரண்டும் “சமஷ்டிப் பிரணவம்”, “வியஷ்டிப் பிரணவம்” என்ற பெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும் பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்து, அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றினார். பிள்ளையாரின் உருவம் பற்றிய விளக்கம் அடுத்தாப் போல் பார்ப்போமா?
https://commons.wikimedia.org/wiki/File:Kusapet_vinayagar.jpg