7

புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது.

இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல், கணவன், மனைவி என்ற உறவில் எந்த விரிசல்களும் ஏற்பட்டு விடாமல், விடுதலைப் பாதையை நோக்கி வெற்றிநடை போட வேண்டிய ஒரு கட்டாயம் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயத்தை பெரும்பாலான பெண்கள் தாமாகவேதான் விரும்பி தமக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், ஆண்களைப் பொறுத்த மட்டில் பெண்களின் இந்த விழிப்புணர்ச்சி, அல்லது மாற்றம் அவர்களிடம் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அச்சப் பட்டவர்களை அப்படியே விட்டுவிட்டு, தம்பாட்டில் போய் விடாது, தம்மோடு அவர்களையும் இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்குள்ளும் ஆண்களைப் போலவே ஆசை, பாசம், கோபம், நேசம்.. போன்ற எல்லா உணர்வுகளும் இருக்கின்றதென்பதை ஆண்களுக்குப் புரிய வைத்து, பெண்கள் அடிமைத் தனத்தையோ, அடக்கு முறையையோ விரும்பவில்லை, தாம் தாமாகவே வாழ விரும்புகிறார்கள் என்பதை உணர வைத்து, குடும்பத்தைக் குலைய விடாது காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் விடுதலைப் பாதையை நோக்கி நடக்கின்ற இன்றைய பெண்களுக்கு உள்ளது. பெண்விடுதலையின் சரியான பரிமாணத்தை உணர்ந்த பெண்கள், இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு முன்னேற்பாடுடனேயே விடுதலையை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இந்த விடுதலைப் பாதையின் முதற் படியில் இருப்பது, பெண்கள் தாம் தமது காலில் நிற்பதற்கு ஏதுவான சுய சம்பாத்தியம். அதாவது பெண்கள் தாம் தமக்கெனச் சம்பாதிக்க வேண்டும். இன்றைய பெண்களில் அனேகமானோர் இந்த சூட்சுமத்தைப் புரிந்து வேலைக்குப் போகத் தொடங்கி வட்டார்கள். ஆனாலும் அத்தோடு அவர்களது கஷ்டங்களும், பிரச்சனைகளும் தீர்ந்து விடவில்லை.

வேலைக்குப் போகும் பெண்கள் நிறையவே கஸ்டப் படுகிறார்கள். காரணம் ஆண்கள் சமூகம் இன்னும் பெண்களின் விடுதலைப் பாதையை நோக்கிய இந்த பயணத்தைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆண்கள் எந்த நேரம் வேலைக்குப் போய் எந்த நேரம் வீடு திரும்பினாலும், அவர்கள் களைத்து வந்திருக்கிறார்கள் என்ற அனுசரணையோடு பெண்களால் கவனிக்கப் படுவார்கள். இதுவே பெண் வேலைக்குப் போகும் போது அவள் எந்த நேரத்தில் வேலைக்குப் போய் எந்த நேரத்தில் வீடு திரும்ப வேண்டும் என்பது ஆண்களால்தான் தீர்மானிக்கப் படுகிறது. தப்பித்தவறி ஒரு பெண் வீடு திரும்பும் நேரம் சற்றுத் தாமதமானாலும் போதும்… ஏன் தாமதம் என்பதற்கான காரணம் ஆணால் அது கணவனாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, சகோதரனாக இருந்தாலும் சரி சந்தேகக் கண்களுடனேயே பார்க்கப் படுகிறது. ‘யாரோடை போட்டு வாறாய்? எங்கை இவ்வளவு நேரமும் போனனி? என்பது மாதிரியான மனசை விளாசும் கேள்விகளாலேயே அவள் வீட்டுக்குள் வரவேற்கப் படுகிறாள். அவள் கூடிய வேலையால் களைத்துப் போயிருப்பாளே என்ற அனுசரணை காட்டப் படா விட்டாலும் பரவாயில்லை. வேலை செய்து விட்டுத்தான் வருகிறாள் என்ற நம்பிக்கை கூட அனேகமான பொழுதுகளில் அவர்களிடம் இருப்பதில்லை.

பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கியதால் ஆண்களின் வாழ்க்கை சற்றுச் சுலபமாகியுள்ளது. அவர்கள் தனியாகச் சுமந்த குடும்பத்தின் பணத்தேவையை, இப்போது வேலைக்குப் போகும் பெண்களும் பங்கு போட்டுச் சுமக்கிறார்கள். அதே நேரம் வீட்டிலுள்ள மற்றைய வேலைகளையும் பெண்களே தனியாகச் சுமக்கிறார்கள். பெரும்பான்மையான ஆண்கள் அதைப் பங்கு போடத் தவறி விடுகிறார்கள்.

ஆணும், பெண்ணும் வேலைக்குப் போய் வருகையில், ஆண் வந்து கதிரைக்குள் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதுவும், பெண் வந்து கால் வலிக்க, கை வலிக்க வீட்டு வேலைகளைத் தொடர்வதுவும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போன ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருந்து குளிர் காய்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பெரியளவாகப் பேச மாட்டார்கள். மெளனமாக இருந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்வதாக ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள்.

சில ஆண்கள் வீட்டு வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்வார்கள். அதாவது ஒரு ஆணால் சமைக்க முடியும். இன்னொருவரால் அயர்ண் பண்ண முடியும். இன்னொருவரால் வீட்டைத் துப்பரவாக்க முடியும். ஆனால் பெரும்பாலான ஆண்களால் வீட்டின் முழுவேலைகளையும் ஒரு பெண்ணைப் போல பொறுப்பேற்றுச் செய்யத் தெரிவதில்லை. அல்லது முடிவதில்லை. இதனால் வேலைக்குப் போகும் பெண் நிறையவே கஸ்டப் படுகிறாள். சில சமயங்களில் நேரமின்மை காரணமாக பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் கூடத் திண்டாடுகிறாள். கவலைப் படுகிறாள்.

இந்த நிலையிலும் கூட பிள்ளை ஒரு தவறு செய்யும் போது, “நீ பிள்ளையைச் சரியாகக் கவனிக்கிறேல்லை.” என்று கணவனிடம் திட்டும் வாங்குகிறாள். ஒரு கணவனும் தந்தையாக நின்று, பிள்ளையைக் கவனிக்கலாம்தானே. அப்படி நடப்பது மிகமிகக் குறைவு. ஏனெனில் இதெல்லாம் பெண்களின் வேலையாகவே கருதப் படுகின்றன. அது இன்று பெண் வெளியில் வேலைக்குப் போகும் போதும் மாறி விடவில்லை.

வேலைக்குப் போகும் பெண்களின் நிலை இப்படியாக இரட்டைச் சுமையைத் தலையில் தூக்கி வைத்ததற்குச் சமனாயிருக்கும் போது, வேலைக்குப் போகாத பெண்களின் நிலை வேறு விதமான பரிதாபத்தை உணர்த்துகிறது. அவர்களின் வீட்டு வேலைகள் ஒரு வேலையாகக் கணிக்கப் படுவதே இல்லை.

அனேகமான சமயங்களில் “உன்ரை மனைவி என்ன செய்கிறாள்..?” என்று கணவனை யாராவது கேட்டால்.. “அவ சும்மாதான் இருக்கிறா” என்பதே வேலைக்குப் போகாத பெண்களின் கணவன்மார்களின் பதிலாக இருக்கிறது.

இந்த அளவில்தான் பெண்களின் வீட்டு வேலைகள் கணிக்கப் படுகின்றன. அவர்கள் சிறிதளவு பணத்தேவைக்கும் கணவனை எதிர் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சந்தர்ப்பங்களில் “உனக்கென்ன தெரியும். நீ சும்மாதானே வீட்டிலை இருக்கிறாய். நான் எவ்வளவு கஸ்டப்பட்டு முறிஞ்சு வேலை செய்திட்டு வாறன்” என்று சொல்லிக் கணவன்மாரால் உதாசீனப் படுத்தப் படுகிறார்கள். வீட்டிலுள்ள சகல வேலைகளையும் செய்வது மட்டுமல்லாது “எதுவுமே செய்வதில்லை” என்ற குற்றச் சாட்டையும் கணவனிடமிருந்து அடிக்கடி பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் வேலைக்குச் செல்லாத பெரும்பான்மையான புலம்பெயர் பெண்கள் பாரிய உளவியல் தாக்கத்துக்கும் உள்ளாகிறார்கள்.

அவர்களது வாழ்க்கை சமையல், வீட்டுவேலை, கணவனுக்குப் பணிவிடை.. என்றே போய் விடுகிறது. அனேகமான குடும்பங்களில் கணவன்மார்கள் “நான் உழைக்கிறேன். எனது பணம்.” என்ற ஒரு திமிருடன்தான் இருக்கிறார்கள். தமது மனைவியரைச் சற்றுத் தாழ்ந்தவர்களாகவே கருதி, மனைவியரின் மனங்களிலும் “நீ தாழ்ந்தவள். எனது பணத்தில்தானே நீ வாழ்கிறாய். நான் எவ்வளவு வேலை செய்து விட்டு வருகிறேன். நீ சும்மா வீட்டில் இருந்து எனது பணத்தில்தானே சாப்பிடுகிறாய்” என்பது போன்றதான கருத்துக்களை விதைக்கிறார்கள்.

மிகச் சிறுபான்மையான ஆண்கள் மட்டுமே மனைவியரை மனைவியராக, உணர்வுள்ள ஜென்மங்களாக மதித்து, வீட்டு வேலைகளை வேலையாகக் கணித்து உதவுகிறார்கள்.

மொத்தத்தில் வேலைக்குப் போகும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி ஏதோ ஒரு வகையில் கஸ்டங்களையே சுமக்கிறார்கள். ஆனாலும் வெளிவேலை, வீட்டுவேலை இரண்டினாலுமான அதீத சுமைகளின் மத்தியிலும் வேலைக்குப் போகும் பெண்கள் வெளி உலகத்துடனான தொடர்பு, நானும் உழைக்கிறேன் என்ற மனநிறைவு.. போன்றதான விடயங்களால் நான், எனது பணம் என்று கர்வம் கொள்ளும் கணவர்களிடமிருந்து விடுதலை பெற்ற உணர்வைப் பெற்று, ஒரு வித தன்னம்பிக்கையுடனேயே வாழ்கிறார்கள். வேலைக்குப் போகாத பெண்களோ தாழ்வு மனப்பான்மை நிறைந்த உளவியல் தாக்கத்தினால் தன்னம்பிக்கை இழந்து ஒரு வித தனிமைச் சிறையில் வாழ்கிறார்கள்.

– 6.11.2004

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

நாளைய பெண்கள் சுயமாக வாழ... Copyright © March 2016 by chandra1200; சந்திரவதனா; and Chandravathanaa (Chandra Selvakumaran) is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book