1

சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது.

35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர் டிக்ரஸ் இன் கண்டு பிடிப்புகளின் படி குரங்கும் சீதனம் கொடுக்கிறதாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

கற்காலத்திலிருந்து மனிதன் கணினி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் அவன் ஏனோ சீதனத்தை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும், சிறுமைப் படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை. இப் பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.

எவ்வளவோ தூரம் வளர்ச்சியடைந்து விட்ட மனிதர்கள் ஏன் இன்னும் பெண்கள் விடயத்தில் பின்தங்கி உள்ளார்கள்? குறிப்பாக ஆசிய நாட்டு ஆண்களும், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண்களும் எப்போதும் பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப் போக வேண்டியவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களது அந்த நினைவுகளை அந்தக் காலந்தொட்டு பெண்கள் மனதிலும் விதைத்து அல்லது திணித்து வந்திருக்கிறார்கள். காலங்காலமாக நடை பெற்று வரும் இத் திணிப்பினால் பெண்களும், நாம் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து விட்டார்கள்.

இரண்டு வரிக் குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரிலிருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள் வரை பெண்கள் விடயத்தில் ஓர வஞ்சகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக…
புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே…

என்ற பாடலில், புருஷன் வீட்டுக்குப் போகப் போகும் பெண்ணுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, பெற்று வளர்த்த பெற்றோர், கூடப் பிறந்த சகோதரர்கள், இன்னும் எத்தனையோ அவள் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, நாய்க்குட்டி, மரம் செடிகள்… என்று எல்லாவற்றையும் விட்டு, புருஷன் என்றொருவனை நம்பி அவன் வீட்டுக்குப் போகிறாள். “அவளின் வேதனைகளைப் புரிந்து அவளை அநுசரித்து வாழ்” என்று ஏன் கணவன்மார்களுக்கு ஒரு பாட்டு எழுதப்படவில்லை? ஏன் இந்த வஞ்சனை?

இதே போல் பழகத் தெரியவேண்டும் பெண்ணே…
என்ற பாடலும் கூட ஒரு பெண்ணுக்குத்தான். ஏன் ஒரு ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ?

இன்னும் இப்படி எத்தனையோ பாடல்கள், பெண்கள் இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கின்றன. அப்படியென்றால் ஆண்கள் எப்படியும் வாழலாமோ?

மானே, தேனே, கனியே, கற்கண்டே என்று பெண்களை வர்ணிக்கும் அதே கவியுள்ளங்கள்தான் பெண்களை அடங்கிப் போகும் படியும் கவி புனைந்துள்ளன. இந்த வஞ்சகங்கள் எதுவும் புரியாமலே பெண்கள் வாழ்ந்து விட்டதுதான் மிகமிக வருத்தமான விடயம்.

ஆணென்ன! பெண்ணென்ன!
எல்லோரும் மனிதப் பிறவிகள்தான்.
ஏன் இதில் ஏற்றத் தாழ்வுகள்?

முதலாம் உலகப்போர் வரை ஐரோப்பியப் பெண்கள் கூட வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்களாம். போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள, வர்த்தக நிறுவனங்கள், போன்றவற்றில் வேலைக்கு அமர்த்தப் பட்ட போதுதான் தமது வலிமையை உணர்ந்து விழித்தெழுந்து கோசமிட்டார்களாம். ஏன் இன்று ஆசியப் பெண்களான நமது தமிழீழப் பெண்கள் கூட

நாற்குணம் என்றும்
நற்பண்பு என்றும்
வேலிகள் போட்டுப் பெண்ணை
வீட்டுக்குள் அடைத்தோர் நாண
போர்க் கொடி ஏந்தி – அங்கே
நாட்டினைக் காக்கின்றார்கள்.
இருந்தும்…
சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை!
ஆணாதிக்கமும் அடக்கு முறையும்
முற்றாக ஒழியவுமில்லை!

புகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிரந்தரமாம். பிறந்த வீட்டை மறந்திட வேண்டுமாம். இது என்ன நியாயம்? ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரர்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தகத்தில் உள்ளது? ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம். பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, வெந்து மாயும் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே! இந்த நிலையில் இன்றும், இன்னும் எத்தனை பெண்கள்!

ஆண்கள் பெண்களை தமக்கு அடிமையாக்கி வைத்திருக்க கலாச்சாரம், பண்பாடு, மரபு… என்று சில ஆயுதங்களைப் பெண்களின் முதுகுத்தண்டில் பிடித்துக் கொண்டு வாழ்வதைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் பெண்கள் வாழ்கிறார்களே! தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா? ஆண்களுக்கென்று எதுவுமே இல்லையா? ஏன் இன்னும் பல பெண்கள் இதை உணராமல் வாழ்கிறார்கள்?

பட்டிமன்றங்களும் ஒட்டு வெட்டுக்களும் கலாச்சாரம், பண்பாடு என்று வந்தால் தாலி, பொட்டு, சேலை இவைகளைத்தான் விவாதத்துக்குரிய பாரிய விடயங்களாக எடுத்துக் கொள்கின்றன. மீறினால் பெண்களின் மறுமணம். ஆண்களின் மறுமணம் பேசப்படக் கூடிய அதிசயமான விடயமே இல்லை. ஆனால் பெண்களின் மறுமணமோ நடக்கவே கூடாத மரபு மீறிய, கலாச்சாரம் கெட்ட, பண்பில்லாத செயல் என்பதே அவர்களின் கருத்தில் தொனிக்கிறது.

இந்தக் கலாச்சாரங்களை, பண்பாடுகளை இது எமக்கு மேல் திணிக்கப் பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே எமது பெண்கள் இன்னும் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களே! இனியாவது பெண்கள் சிந்திக்க வேண்டும். தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று ஒவ்வொரு நிலையிலும் குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண் அடங்கிப் போக வேண்டிய தேவை என்ன?

அடங்குதல், ஒடுங்குதல், ஆக்கிப் போடுதல், அடித்தாலும் உதைத்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று தொழுதல், புகுந்த வீட்டில் பணிந்து நடந்து பிறந்த வீட்டுப் பெருமை காத்தல்… இவை எல்லாமே ஆண்கள் தமது சுயநலத்துக்காகத் தயாரித்து வைத்த பெண் அடிமை அட்டவணைகள்.

ஆண்களின் வக்கிரமான கருத்துத் திணிப்புகளில் உதாரணத்துக்கு ஒன்று
வேதநாயகம் பிள்ளையின்,
அடித்தாலும் வைதாலும்
அவரே துணையல்லால்
ஆர் துணையடி மானே
மடித்தாலும் அவருடன்
வாய் மிதமிஞ்சலாமோ?
வனத்தின் கீழிருந்து
மழையிடிக்கஞ்சலாமோ?

இப்படியே நாம் இவைகளைக் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்தோம் என்றால் ஆண்கள் எம்மை விடவே மாட்டார்கள். தொடருவார்கள்.

பெண்களே! நீங்கள் நினைக்கலாம், இப்போது நாங்கள் விடுதலை பெற்று விட்டோம் என்று. ஆனால் இன்னும் முழுதாக இல்லை.

ஆண் பெண் இருபாலாரும் சமநிலைக்கு வர, இன்றைய இளம் பெண்கள்தான் சரியாகச் செயற்பட வேண்டும். நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் காலில் நீங்கள் நிற்பதற்கு, சொந்தமாகத் தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து, எது தேவை என்பதை உணர்ந்து வாழவேண்டும். முக்கியமாக, உங்கள் குழந்தைகளை ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பேதம் காட்டாது சமனாக வளர்க்க வேண்டும்.

“நீ பெண் குழந்தை! நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று உங்கள் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்குமான தகராறின் போது, நீங்கள் சொல்வீர்களானால், அங்கு நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்லும் போது பாதிக்கப் படுவது உங்கள் பெண் குழந்தையின் மனம் மட்டுமல்ல, உங்கள் ஆண் குழந்தையின் மனமும்தான்.

ஆண் குழந்தையின் மூளையில் அது அப்போதே, ´பெண்கள் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டியவர்கள்தான்´ என்று பதிந்து விடுகிறது. அதுவே நாளடைவில் அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் தனக்கு விட்டுக் கொடுத்து வாழவேண்டியவர்கள் என அவனை எண்ண வைத்து விடுகிறது.

இப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும், பெண்பிள்ளைகளுக்கு “நீ பெண்ணல்லவோ!” எனப் போதிக்கப் படும் விடயங்கள், கூடவே வளரும் ஆண்பிள்ளையின் மூளையில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமெனப் பதியப்பட்டு விடுகிறது.

ஆகவே பெண்களே, உங்கள் பிள்ளைகளை ஆண், பெண் என்ற பேதம் காட்டாது, விட்டுக் கொடுத்தலிலிருந்து சமையல், வீட்டுவேலை, கல்வி, தொழிற்கல்வி, தொழில் மற்றும் இதர பிற வேலைகளிலும் செயற்பாடுகளிலும் சமத்துவத்தைப் பேணி வளருங்கள்.

எந்தக் கட்டத்திலும் உங்கள் பெண் பிள்ளையை “நீ பெண்!” என்று கூறி சமையற் கட்டுக்கும், ஆண் பிள்ளையை வெளி வேலைக்கும் அனுப்பாதீர்கள்.

இன்றைய பிள்ளைகளாவது நாளை, ´இந்த வேலை ஆணுக்கு, இந்த வேலை பெண்ணுக்கு´ என்று நினைக்காமல் இருக்க ஆண் பிள்ளைகளையும் சமையற் கட்டுக்கு அனுப்புங்கள். பெண் பிள்ளைகளையும் வெளி வேலைக்கு அனுப்புங்கள்.

பெண்களுக்கு நடனமும், பாடலும்தான் என முத்திரை குத்தி வைக்காமல் விளையாட்டு, தற்காப்புப் பயிற்சிகள் (கராத்தே போன்றவை) போன்றவற்றையும் அவர்களது ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் பழக அனுமதி கொடுங்கள்.

உங்கள் வளர்ப்பில், ´பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன்´ என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.

இதை ஏன் நான் பெண்களுக்கு மட்டும் கூற வேண்டும் என நீங்கள் எண்ணலாம். நாங்கள் குனிந்து நின்று கொண்டு ஆண்களைப் பிழை கூற முடியாது. நாங்கள் தான் நிமிர வேண்டும்.

நாளைய பெண்கள் சுயமாக வாழ
நாங்கள்தான் பாதையமைக்க வேண்டும்.

– 2000

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

நாளைய பெண்கள் சுயமாக வாழ... Copyright © March 2016 by chandra1200; சந்திரவதனா; and Chandravathanaa (Chandra Selvakumaran) is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book