4

Rape is the only crime in which the victim becomes the accused.”

  • Freda Adler, US criminologist and educator

கற்பழிப்பு என்பது ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர் (பொதுவாய் ஆண்கள்) இன்னொருவரின் (பொதுவாய்ப் பெண்) சம்மதமின்றி வன்முறையாய்க் கட்டாயக் கலவியில் ஈடுபடுத‌ல் ஆகும். கற்பழிப்பு என்பது பிற்போக்கான / ஆணாதிக்கச் சொல்லாடல் என்பதால் பாலியல் வல்லுறவு என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.

கிமு 1780ல் பாபிலோனியாவின் ஹம்முராபி சட்டங்களில் கன்னிப் பெண்ணைக் கற்பழிப்பது அவளின் தந்தைக்கு நேரும் சொத்துச் சேதமாகச் சொல்லப்படுகிறது. திருமணமான பெண் கற்பழிக்கப்பட்டால் அவள் நடத்தை கெட்டவள் என சொல்லி ஆற்றில் வீசி எறிந்திருக்கிறார்கள். பின் மோஸைக் சட்டத்தில் ஒரு கன்னிப்பெண் கற்பழிக்கப்பட்டால் அவளது தந்தை அல்லது சகோதரர்களில் எவரேனும் தவறு செய்தவனின் குடும்பப்பெண்களில் ஒருவரை கற்பழித்துக் கொள்ளலாம் என்கிறது.

ஹீப்ரூ சட்டம் ஒரு கன்னிப்பெண் நகரத்துக்குள் கற்பழிக்கப்பட்டால் அவளையும், செய்தவனையும் கல்லால் அடித்துக் கொல்லச் சொல்கிறது. நகர எல்லைக்குள் அவள் கத்தி ஊரைக்கூட்டி அதிலிருந்து தப்பியிருக்கமுடியும் என்பதால் அந்நிகழ்வு அவள் சம்மதத்தின் பேரில் நடைபெற்றிருக்கும் என்ற அடிப்படையில் அவளுக்கும் சேர்த்து தண்டனை தரப்பட்டது. அதுவே நகரத்திற்கு வெளியே கற்பழிக்கப்பட்டால், அவள் கத்தி இருப்பாள், ஆனால் உதவிக்கு ஆள் வரவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டாள். கல்யாணமாகாதவள் எனில் கற்பழித்தவன் அவள் தந்தைக்கு அபராதத்தொகை கொடுத்து திருமணமும் செய்ய வேண்டும்.

பைபிளின் பழையஏற்பாடு உபாகமம் 22ல் “நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.” (28-29) என்று வருகிறது.

கிரேக்கப் புராணத்தில் கடவுள் ஜீயஸ் யூரோப்பா என்ற பெண்ணையும் கேனிமெட் என்ற ஆணையும் கற்பழித்ததாய்க்கதை உண்டு. லாயஸ் என்பவன் க்ரைஸிப்பஸ் என்பவனைக் கற்பழித்ததற்கு அவன் மட்டுமல்லாது அவன் மனைவி, மகன், பேரக் குழந்தைகள் என அனைவரும் அழிக்கப்பட்ட கதையும் உண்டு (இதன் நீட்சியாய்த் தான் ஆண் கற்பழிப்புகளை பொதுவாய் லாயஸ் குற்றம் எனக் குறிப்பிட்டார்கள்).

கிமு 50களில் ரோமானியக் கவிஞர் லுக்ரேஷியஸ் கற்பழிப்பு நாகரிகத்திலிருந்து பின்தங்கிய செயல் என வர்ணிக்கிறார். ரோமானிய சட்டங்களில் raptus என்பது கடத்தலையும், விருப்பத்திற்கெதிராக நடத்து கொள்தலையும் குறித்தது. பாலியல் வன்முறை அதில் பிரதானமில்லை. பின் ரோமானியக் குடியரசு உருவான போது Raptus ad stuprum என்று விருப்பத்திற்கெதிராக பாலியல் வல்லுறவில் ஈடுபடுதல் தனியாய்ப் பிரிக்கப்பட்டது (ரோமானிய முடியாட்சி தூக்கிஎறியப்பட்டு குடியாட்சி வந்ததற்குக் காரணமே அரசனின் மகன் லுக்ரேஷியா என்பவ‌ளைக் கற்பழித்து அவள் தற்கொலை செய்து கொண்டதுதான் காரணம்). பின் 3ம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீஸரின் காலத்தில் Lex Julia de vi publica என்ற சட்டம் கற்பழிப்பைப் பையன்கள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றமாகத் தெளிவாகப் பிரித்தது.

3ம் நூற்றாண்டில் ரோமானிய அரசர் டியோக்ளேஷியன் காலத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர்; திருமணத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். ஆனால் கற்பழிக்கப்பட்டவர்களுக்கு எந்ததண்டனையும் இல்லை; திருமணமும் செய்யலாம். ஆனால் கற்பழிப்புச் சட்டங்கள் வர்க்கரீதியில் இருந்தன. அடிமை கற்பழிக்கப்பட்டால் அது எஜமானரின் சொத்து இழப்பென்றனர்.

ரோமானிய ராஜ்யத்தில் கற்பழிப்பு மரண தண்டனைக்குரிய குற்றம். பெற்றோரைக் கொல்வதற்கு, கோயிலைக் கொள்ளையடிப்பதற்கு இணையான பாவம் என்றனர்.

ஹோமர், லெரோடாட்டஸ், லிவி ஆகியோர் படைப்புகள்வழி கிரேக்க ரோமானியப் படைகள் போர்க்காலங்களில் கற்பழிப்புகளில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. தோற்ற நாட்டின் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஹோமோசெக்ஸுக்குப் பயன்படுத்தினர்.

ரோமானிய ராஜ்யத்தில் கிறித்தவம் நுழைந்த பின் கற்பழிப்பு பற்றிய பார்வை மாறியது. புனித அகஸ்டின் லுக்ரேஷியா தற்கொலை செய்து கொண்டது கூட அவள் கற்பழிப்புக்கு உடன்பட்ட குற்ற உணர்ச்சியில் தான் என்றார். முதல் கிறித்தவ ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைன் கற்பழிப்பை தனி மனிதக் குற்றமாக அல்லாமல் பொதுப் பிரச்சனையாக அறிவித்தார். பெண்ணின் சம்மதத்துடன் கற்பழிப்பு நடந்திருந்தால் இருவரையும் உயிருடன் எரித்தனர். அவள் சம்மதம் இல்லாமல் நடந்திருந்திருந்தாலும் அவள் கத்தி உதவி பெற்று தப்பியிருக்க முடியும் என்று சொல்லி தண்டனை தரப்பட்டது. கற்பழித்தவனை அவளுக்குத் திருமணம் செய்விப்பது செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டது.

சில கலாசாரங்களில் கன்னிப்பெண்ணைக் கற்பழிப்பது மட்டுமே குற்றம். மனைவி, விதவை, விபச்சாரி போன்றவர்கள் ஏற்கனவே கன்னித்தன்மை இழந்து விட்டதால் அவர்களுடனான‌ கட்டாய உறவு கொள்வது கற்பழிப்பு எனக் கொள்ளப்படவில்லை.

8ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படையெடுத்த ஸ்காண்டிநேவியர்கள் பிரிட்டன், அயர்லாந்து பெண்களை உடமையாக்கிக் கொண்டனர். இஸ்லாமியச் சட்டப்படி கற்பழிப்பில் பெண்களுக்கு தண்டனை இல்லை; செய்தவனுக்கு மரண தண்டனை.

1290ல் Fleta என்ற பிரிட்டிஷ் சட்ட நூல் பெண்ணின் சம்மதமின்றி அவள் கருவுற முடியாது என்கிறது. 13ம் நூற்றாண்டில் சாக்ஸன் சட்டப்படி கற்பழிக்கப்பட்டபெண் கன்னியா, மனைவியா, விதவையா, விவச்சாரியா என்பதைப்பொறுத்து தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்ட் மன்னர் கற்பழிப்பில் கன்னி, கன்னியல்லாதோர் என்ற பாகுபாட்டை உடைத்தார். 12 வயதுக்குக் கீழ் பெண் சம்மதத்துடன் நடந்தாலும் அது கற்பழிப்புதான் என்றார்.

14ம் நூற்றாண்டில் இரண்டாம் ரிச்சர்ட் மற்றும் ஐந்தாம் ஹென்றி காலங்களில் போரின் போதான கற்பழிப்பு குற்றமாக அறிவிக்கப்பட்டது. நூற்றாண்டுப்போரில் கற்பழித்த‌வர்களைத் தண்டிக்க இச்சட்டமே உதவியது. நெப்போலியன் எகிப்திய படையெடுப்பில் கற்பழிக்கும் வீரர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் என அறிவித்தார்.

மத்திய கால அரபு அடிமை வியாபாரத்திலும், செங்கிஸ்கான் படையெடுப்புகளின் போதும், அபர்தீனின் உள்நாட்டு யுத்தத்தின் போதும் கற்பழிப்புகள் மிகுந்திருந்தன.

1670ல் கணவன் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது கற்பழிப்பு ஆகாது என சர் மேத்யூ ஹேல் என்ற ஆங்கிலேயே நீதிபதி குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார். கறுப்பினப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் வெள்ளை நீதிப் புத்தகங்களின் படி கற்பழிப்பு கிடையாது.

17ம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் பெற்றோர் சம்மதமின்றித் திருமணம் செய்வதே கற்பழிப்பு என சொன்னார்கள். 18, 19ம் நூற்றாண்டுகளில் கற்பழிப்புப் புகார் கூறும் பெண் எப்படி அந்நிகழ்வை நிரூபிப்பது என்பதில் குழப்பம்நிலவியது. கன்னித்திரை கிழித்திருப்பதையும், விந்துக்கறைபடிந்திருப்பதையும் ருசுப்பிக்க வேண்டிஇருந்தது.

1814ல் ஆங்கில மருத்துவர் சாம்யுவல் ஃபார் எழுதிய Elements of Medical Jurisprudence நூல் பெண் காமக்களிப்பில் உச்சத்தை அடையாமல் கருவுற முடியாது என்றது. முழுமையான கற்பழிப்பில் பெண் கர்ப்பமடைய வாய்ப்பில்லை எனக்குறிப்பிட்டார்.

1857ல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக‌ இந்தியாவில் நடந்த முதல் சுதந்திரப் போரில் இந்தியர்களால் பிரிட்டிஷ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக ஆவணங்களைத் தயாரித்தனர். தம் அட்டூழியங்களை நியாயப்படுத்த இதைப் பயன்படுத்தினர்.

19ம் நூற்றாண்டில் டாக்டர் லாசன் டெய்ட் என்பவர் பெண்ணின் சம்மதமின்றி ஆண் அவளைக் கற்பழித்து விட முடியாது என்றார். பெண் தன்னை அசைத்து உதறிக் கொண்டிருந்தால் கற்பழிப்பு சாத்தியமில்லை என்பதைச் சொல்ல ஊசலாடும் ஊசியில் நூல் கோர்க்க இயலாது என்று உவமை சொன்னார்!

1890களில் பெண்ணியவாதிகள் கற்பழிப்பு வழக்குகளில் பெண்ணின் சம்மத வயதை 18 ஆக உயர்த்தக் கோரினர். அதற்குப் போட்டியாக சில சட்ட வல்லுனர்கள் சம்மத வயதை 81 ஆக உயர்த்த வேண்டும் என்று கேலியான கோரிக்கையை விடுத்தனர்.

சீனாவில் பாக்சர் புரட்சியின்போது மேற்கத்திய நாட்டுப்படைகள் சீனப்பெண்களைக் கற்பழித்தனர். பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஜப்பானிய வீரர்கள் மட்டும் உடன் விபச்சாரிகளை அழைத்து வந்ததால் கற்பழிப்பில் ஈடுபடவில்லை.

முதலாம் உலகப்போரில் ஜெர்மானிய வீரர்கள் பெல்ஜியம் நாட்டில் கற்பழிப்பை தினசரிக் கடமையாக வைத்திருந்தனர். இரண்டாம் உலகப்போரில் சுமார் 2 லட்சம் கொரிய, சீன, தைவான், ஃபிலிப்பைன் பெண்கள் ஜப்பான் ராணுவ முகாம்களில் வைத்து கற்பழிக்க‌க்கட்டனர். இவர்களை Comfort Women என்று அழைத்தனர்.

உலகின் மாபெரும் கற்பழிப்பு என வர்ணிக்கப்படுவது 1944 – 1945 காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போரின் முடிவில் சோவியட் செம்படை ஜெர்மன் பெண்களின் மீது கட்டவிழ்த்து விட்ட பாலியல் வல்லுறவுகள் தாம். 8 வயதிலிருந்து 80 வயது வரையிலான சுமார் 20 லட்சம் பெண்கள் தொடர்ந்து 60 – 70 முறை பல பேரால் கற்பழிக்கப்பட்டனர். இரண்டரை லட்சம் பெண்கள் இதில் இறந்தனர். பெர்லினில் மட்டும் ஒரு லட்சம் பெண்கள் இதனால் கருக்கலைப்பு செய்து கொண்டனர்.

1972ல் தேசிய பெண்கள் நிறுவனம் (NOW) பெண் விடுதலை அமைப்பு D.C. Rape Crisis Center என்ற மீட்பு மையத்தைத் தொடங்கியது. கற்பழிப்பு ஒரு பெண்ணுக்கு எத்தகைய விழைவுகளைத் தரும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றது.

1975ல் கணவன் மனைவியை சம்மதமின்றிப் புணர்ந்தாலும் அது கற்பழிப்பு தான் என அமெரிக்காவின் சௌத் டகோட்டா மாகாணத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

1971ல் பங்களாதேஷ் சுதந்திரப் போர், 1975ல் லைபீரிய உள்நாட்டுப் போர், 1990ல் குவைத்தின் மீதான ஈரான் ஆக்ரமிப்பு, 1980களில் இலங்கையில் இந்திய அமைதிப் படை நடவடிக்கைகள், 1992ல் போஸ்னிய யுத்தம், 1994ல் ருவாண்டா இன அழிப்பு, 1996ல் கொசாவா யுத்தம் – அத்தனையிலும் கற்பழிப்பின்கறை படித்தே இருந்தது.

1980களில் போதை மருந்து கொடுத்து கற்பழிப்பது முதல்முறை பிரச்சனைக்குரிய விஷயமாக முன்னிலைப்படுத்தப்பட்டது. தேசிய அளவில் பாலியல் புகார்களை கவனிக்கும் அமைப்பான RAINN தொடங்கப்பட்டது. கற்பழிப்பு ஆராய்ச்சி, சர்வே செய்வதும் கற்பழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சி செய்த‌து.

2000ல் ராண்டி தார்ன்ஹில், க்ரெய்க் பால்மர் என்ற இருவர் A Natural History of Rape புத்தகத்தை எழுதினர். சூஸன் ப்ரௌன் மில்லரின் Against Our Will முன்வைக்கும் புகழ்பெற்ற சித்தாந்தமான கற்பழிப்பு பாலியல் நோக்கில் செய்யப்படுவதில்லை என்பதை தர்க்கரீதியாக விமர்சித்தது இது. பாலியல் வேட்கை மற்றும் வன்முறை மனப்பான்மையின் காரணமாகவே கற்பழிப்புகள் நிகழ்கின்றன என வாதிட்டது.

கிழக்கு காங்கோ போர், டார்ஃபர் யுத்தம், இராக் யுத்தம், இலங்கை இறுதிப்போர் ஆகியவை யுத்தத்துடன் கற்பழிப்பு கைகோர்த்த சமீபத்திய கோர உதாரணங்கள்,

2011ல் லிபிய உள்நாட்டு யுத்தத்தைக் கலைக்க சர்வாதிகாரி கடாஃபியின் படைகள் கற்பழிப்பை ஆயுதமாகப் பயன்படுத்தின. அதே ஆண்டு ஹைதியில் ஐநா அமைதிப் படை சிறுவர்களைக் கற்பழித்ததாகப் புகார் எழுந்தது. இருவாரம்முன் டெல்லியில் நண்பனுடன் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவி சிலரால் பேருந்தில் வைத்துக் கற்பழிக்கப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பருத்தி வீரன், புதிய பாதை, ஹே ராம், ஆயிரத்தில் ஒருவன் படங்களில்பாலியல், பணம்,கலவரம், யுத்தம் எனப்பல பின்புலங்களில் கற்பழிப்பு நிகழ்வதைக்காட்டினர்.

கற்பழிப்பு பெண்ணுக்கான சுதந்திரத்தை மறுக்கும் மனிதத்தன்மையற்ற செயல்.

*

Stats சவீதா

  • 6ல் ஒரு பெண் 33ல் ஓர் ஆண் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்
  • அமெரிக்காவில் கற்பழிக்கப்படுபவர்களில் 44% 18 வயதுக்குட்பட்டவர்கள்.
  • 2 நிமிடங்களுக்கு ஒரு பெண் அமெரிக்காவில் கற்பழிக்கப்படுகிறாள்.
  • அமெரிக்காவில் 54% கற்பழிப்புகள் போலீஸில் சொல்லப்படுவதில்லை.
  • 3ல் 2 கற்பழிப்புகள் தெரிந்த நண்பர், உறவினர்களால் செய்யப்படுகிறது.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ச்சீய்… Copyright © 2015 by சி.சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book