(வெட்கம் விட்டுப் பேசலாம் நூலுக்கு எழுதிய முன்னுரையின் முழு வடிவம்)

 

The only thing that is obscene is censorship.” –Craig Bruce, Australian TV Comedian

சில்லாயிரமாண்டுகள் நெடிய பாரம்பரியம் கொண்ட நம் தேசத்தின் கலாசாரத்தில் சில விஷயங்களை மட்டும் தான் பொதுவில் பேசலாம். உணவில் மட்டுமல்ல உரையாடலிலும் சைவம், அசைவம் என்று வகை பிரித்து வைத்திருக்கிறோம்.

ஆண்கள் நண்பர்களுக்குள்ளும், பெண்கள் தங்கள் தாய், சகோதரிகள் மற்றும் தங்கள் சிநேகதிகளுக்குள்ளும் தான் உடல், காமம் உள்ளிட்ட so-called ஆபாச சங்கதிகள் குறித்த ரகசிய சம்பாஷணைகளை நிகழ்த்திக் கொள்ள முடிகிறது.

காலத்திற்கேற்ப இப்படி ஆபாசம் என்ற லேபிள் ஒட்டப்படும் விஷயங்கள் மற்றும் அவற்றின் வரையறை மாறிக் கொண்டே வருகிறது என்பதும் முக்கியமானது.

80களின் இறுதியில் ஜூனியர் விகடல் சுஜாதா ஏன்? எதற்கு? எப்படி? என்ற விஞ்ஞான கேள்வி பதில் தொடர் எழுதுகையில் சுயஇன்பம் பற்றிய ஒரு கேள்விக்கு மிகுந்த பீடிகையுடனே பதில் அளித்திருக்கிறார். பிரபல்யத்தின் உச்சத்தில் உட்கார்ந்திருந்த அவருக்கே அது தான் நிலைமை அப்போது.

ஆனால் இன்று டாக்டர் நாரயண ரெட்டி, டாக்டர் காமராஜ், டாக்டர் ஷாலினி உள்ளிட்ட பாலியல் மருத்துவர்கள் இயல்பாய் சஞ்சிகைகளில் சுயஇன்பம் தொடர்பான கேள்விகளுக்கு விரிவாய்ப் பதில் சொல்லும் சூழல் உள்ளது.

காமசூத்ராவும் கொக்கோகமும் விதவிதமாக பல பதிப்பகங்களில் நூல்களா அச்சிடப்படுகிறது. இந்த இடத்தில் நான் கவிதை, சிறுகதை, நாடகம் உள்ளிகட்ட படைப்பிலக்கியங்கள் பற்றிப் பேசவில்லை. அவற்றில் சங்க காலம் தொட்டே பாலியல் உள்ளிட்ட விஷயங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

நான் பேசுவது புனைவு, கற்பனை போன்ற போர்வைகள் தாண்டி நேரடியாய் இவை குறித்தெல்லாம் பொதுவில் பேசவும் எழுதவும் கூடிய சாத்தியம் பற்றி.

சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்குப் பிறகு நள்ளிரவில் சன் டிவியில் மனவியல் நிபுணர் டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். இன்று பல தொலைக்காட்சிகளிலும் பரவி விட்டாலும் இன்றும் அதே நள்ளிரவு தான் (சேலம் சிவராஜ் சித்த வைத்தியரை காலையிலேயே அருள்வாக்கு சொல்வார் எனினும் அவரை நான் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியவில்லை),

அதாவது சில விஷயங்களைப் பேச இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாய் நம் சமூகம் சில துல்லியமான விழுமியங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவும் எழுதவும் சாத்தியப்படுகிறது.

இணையத்தின் வளர்ச்சி இதை லேசாய் அசைத்துப் பார்த்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாய் வலைப்பதிவுகள் மற்றும் சமூக வலைதளங்களின் வருகை நிறைய தனி மனிதர்களுக்கு (பெண்கள் உட்பட) அந்தரங்க விஷயங்களை பற்றிப் பேசும் / கேட்கும் உந்துதலையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது.

குங்குமம் இதழில் நான் எழுதிய ச்சீய் பக்கங்கள் தொடரும் இதன் நீட்சி தான்!

*

ச்சீய் பக்கங்கள் உண்மையில் ஒரு வரலாற்றுத் தொடர் தான். ஆனால் நாம் ச்சீய் என்று வெட்கப்படும் விஷயங்களின் வரலாறு. ப்ரேஸியர், பேண்டீஸ், காண்டம், சானிடரி நாப்கின் போன்ற விஷயங்கள் எங்கே எப்படித் தோன்றி இப்போதிருக்கும் வடிவை அடைந்திருக்கின்றன என்பதைத் தேடி அறிவது சுவாரஸ்யம் இல்லையா!

தவிர, ச்சீய் என்ற பதத்தில் “வேண்டாம்” என்பதை விட வெட்கப்பட்டுக் கொண்டே “வேண்டும்” என்று சொல்லும் தொனியே தெரிகிறது. மிருதுளா என்பவரின் ட்வீட் நினைவுக்கு வருகிறது – பெண் ச்சீய்என்றவுடன் நிறுத்திவிடுபவன் முட்டாள்.

அதனால் முட்டாளாக இல்லாமல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள விரும்பி தொடர்ந்து விட்டேன். அதாவது தொடர் எழுதி விட்டேன். யாரேனும் இத்தொடரை ச்சீய் என்று சொல்லி படிக்காமல் தவிர்த்துக் கடந்தார்களா எனத் தெரியவில்லை!

ஆங்கிலத்தில் கூட இப்படி தொகுப்பு முயற்சி இருக்கிறதா எனத் தெரியவில்லை. தமிழில் சுமார் பதினைந்து வருடங்கள் முன்பு கார்டூனிஸ்ட் மதன் இதைப் போல் ஒரு தொடர் எழுதிய ஞாபகம். ஹிட்லர் வாயுத்தொல்லையால் அவதிப்பட்டது, ஆண்மை விருத்திக்காக குதிரைகளின் விரைகளைப் பொடி செய்து உண்டது என்றெல்லாம் வரும். ஆனால் அது மிகக் குறுகிய காலமே வெளியானது. அதுவும் வாரம் ஒரு விஷயம் என்று எடுத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. பொதுவாய் வரலாற்றிலிருந்து பேச சங்கடப்படும் விஷயங்களை எழுதியதாய் நினைவு.

ச்சீய் பக்கங்கள் தொடருக்கு முன்னோடி என்று சொன்னால் அது ஒன்று தான்.

வடிவத்தை எடுத்துக் கொண்டால் ச்சீய் பக்கங்கள் தொடருக்கு அருகில் வருபவை என்று ஆனந்த விகடனில் வேல்ஸ் எழுதிய வாவ் 2000, குங்குமத்தில் லதானந்த் எழுதிய எனப்படுவது ஆகிய வாரத் தொடர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

*

தமிழ் ட்விட்டர் உலகின் முதல்வனான ‘ஆல்தோட்ட பூபதி’ @thoatta ஜெகன் தான் இத்தொடருக்கான தொடக்கப்புள்ளி. அப்போது அவர் குங்குமம் இதழில் நயம்படப் பேசு என்று சமகால நிகழ்வுகளை அங்கதம் செய்யும் தொடரை எழுதி வந்தார். அந்தத் தொடர்பின் அடிப்படையில் என்னிடம் குங்குமம் இதழில் ஏதாவது தொடர் எழுத முயற்சிக்கலாம் எனக் கேட்டார். அப்போது அவரை நிறைய பழக்கமில்லை. ஆனால் என் எழுத்து மீதான நம்பிக்கையில் அல்லது என் மீதான ப்ரியத்தில் என்னைக் கேட்டார். அப்போது கிட்டத்தட்ட பத்து தொடர்களுக்கான ஐடியாவை அவரிடம் சொன்னேன். அதில் அவரே பொறுக்கித் தேர்ந்தெடுத்து குங்குமம் ஆசிரியருக்கு அனுப்பி வைத்த இரண்டு ஐடியாக்களுள் ஒன்று தான் ச்சீய்.

நியாயமாய்ப் பார்த்தால் ஜெகன் இதை எனக்கு செய்திருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. எழுதும் வகைமை வேறு வேறு என்றாலும் சமகாலத்தில் எழுதுகிறோம் என்பதால் ஒருவகையில் அவரும் நானும் போட்டியாளர்கள். ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எனக்கு வாய்ப்பு பெற்றுத் தர முயன்றார். அது எனக்கு நிஜமாய் பேராச்சிரியம். நான் அவரிடத்திலும் அவர் என் இடத்திலும் இருந்திருந்தால் அவருக்கு நான் இப்படி உதவி இருப்பேனே என்பது சந்தேகமே. அவருக்கு என் அன்பினை உரித்தாக்குகிறேன், அந்த நன்றியுணர்வின் நீட்சியாகவே இந்தப் புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

குங்குமம் முதன்மை ஆசிரியர் தி.முருகன் நான் அனுப்பி வைத்த ச்சீய் சாம்ப்பிள் அத்தியாயங்களை வாசித்து அங்கீகரித்து, பொறுமையாய் காத்திருந்து குழுமத்தின் ஒப்புதல் வாங்கினார். நான் அறிந்த வரை அவர் மிகுந்த தேடல் கொண்டவர். நான் எந்த விஷயத்தையும் புதிதாக அவரிடம் சொல்லி விட முடியவில்லை. எல்லாமே அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அதனால் எதைக் குறித்தும் நான் விளக்க வேண்டி இருக்கவில்லை. வாரா வாரம் தலைப்பு சொல்லி அதை எழுதலாமா என்று அவரது முடிவு கேட்க வேண்டியது மட்டுமே ஒரே வேலையாக இருந்தது.

இடையில் ச்சீய் என்று தலைப்பிட்டு தொடர் தொடங்க முடிவான வேளையில் குமுதம் இதழில் ஏ ஜோக் பகுதி ஒன்றினை அதே பெயரில் தொடங்கினார்கள். அதனால் என் தொடருக்கு ச்சீய் பக்கங்கள் என்று பெயர் மாற்றினார் தி.முருகன்.

தொடரை மங்களகரமாய் ப்ரேஸியரில் தொடங்கினேன். மொத்தம் 25 வாரங்கள் எந்தத் தடையும் இல்லாமல் தொடர் வெளிவந்தது. வாரா வாரம் குங்குமம் வாசகர் கடிதங்கள் பகுதியில் ச்சீய் பக்கங்கள் தொடர் குறித்து ஒரு நேர்மறை கருத்தாவது வெளியாகிக் கொண்டிருந்தது. தி.முருகனிடம் பேசிய போதும் சிக்கலான விஷயங்கள் குறித்து ஆபாசம் கலக்காமல் நாசூக்காக எழுதிப் போவதாகவே பெரும்பாலான விமர்சனங்கள் வருவதாகத் தெரிவித்தார்,

வெகுஜன இதழ்களுக்கு எழுதி அனுபவமில்லா ஓர் இளம் எழுத்தாளனின் முதல் தொடருக்கு விற்பனையில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் ஒரு பிரபலமான வார இதழ் ஆறு பக்கங்களை ஒதுக்கித் தருமா? தி.முருகன் அதைச் செய்தார். இத்தருணத்தில் அவருக்கு என் நன்றியினைப் பதிகிறேன்.

அம்ருதா இலக்கிய இதழில் 2011 நொபேல் பரிசுகள் பற்றிய ஒரு தொடரை ஏற்கனவே எழுதி இருக்கிறேன் என்றாலும் ஒரு வெகுஜன இதழில் தொடர் எழுதுவது அது தான் முதல் முறை. தவிர அது வாரா வாரம் எழுத வேண்டி இருந்தது. அதற்காக நிறைய தகவல் திரட்ட வேண்டி இருந்தது. இன்றைய இணைய வசதி மிகுந்த சூழலில் இது எனக்கு ஓரளவுக்கு எளிமைப்பட்டது என்றாலும் அது மிகுந்த அழுத்தம் தரும் அனுபவமாகவே அமைந்தது.

இந்த வசதி எல்லாம் இல்லாத காலத்தில் இது போல் எழுதிய சுஜாதாவும் மதனும் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

தொடருக்கு லேஅவுட் செய்தவர்களுக்கு என் பிரத்யேக நன்றிகள். ஒவ்வொரு வாரமும் மிக அழகான டிஸைனும் மிகப் பொருத்தமான புகைப்படங்களும் இடம் பெற்றன. குங்குமம் இதழை வாங்கிப் புரட்டுபவர்கள் இந்த அளவு கவர்ச்சியான லேஅவுட்டைக் கண்ட பின் தாண்டிச் செல்ல முடியாது. படிக்க வைத்து விடும்.

என் இதுவரையிலான அத்தனை எழுத்துக்களிலும் அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட படைப்பு ச்சீய் பக்கங்கள் தொடராகவே இருக்கும். குங்குமம் இதழின் பரந்துபட்ட வாசகக் கூட்டமே காரணம். என் எழுத்துப் பிரயாணத்தின் ஒரு மைல்கல் இது.

ச்சீய் பக்கங்கள் தொடர் குங்குமம் இதழில் 2012 பிற்பகுதியில் தொடங்கி 2013ன் முற்பாதி வரை வெளியானது! இந்தத் தொடர் வெளிவந்து கொண்டிருக்கும் போதே நிறைய நண்பர்கள் இது எப்போது தொகுப்பாக வெளிவரும் என்பதை விசாரித்தபடி இருந்தார்கள். சில இடங்களில் சில காரணங்களால் பதிப்பிக்கத் தயங்கி இப்போது இறுதியாக ஆர்.முத்துக்குமாரின் உதவியுடன் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் மூலம் இந்தத் தொடர் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகிறது.

வாரா வாரம் குங்குமம் இதழுக்கு அனுப்பும் முன்பே இந்தத் தொடரின் முதல் வாசகியாக இருந்தவள் என் மனைவி. இப்படி ஒரு தொடரை அவள் கணவன் எழுதுவது தொடர்பாய் அவள் ஒருபோதும் அசூயைப்படவில்லை. மாறாக முடிந்த அளவு இந்தத் தொடரை தெரிந்தவர்களிடத்தில் அறிமுகப்படுத்தினாள். எங்கள் அப்பார்ட்மெண்ட்டிலேயே இதற்கு தீவிர தொடர் வாசகிகள் உருவானார்கள்.

இதைத் தொடர்ந்து வாசித்து விமர்சிக்கவும் ஊக்குவிக்கவும் செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர் தன் வடிவத்தைக்கண்டெடுக்க அவர்கள் உதவினர்.

என் அம்மா தான் இதை எழுதுவதை எதிர்த்தார். ஆனாலும் தொடர்ந்து வாசித்தார்!

*

இந்தப் புத்தகத்திற்கான தலைப்பாக தொடருக்கு ஆரம்பத்தில் உத்தேசித்திருந்த தலைப்பான ச்சீய் என்பதையே வைத்து விட்டேன். Short, Sweet and Sexy!

ச்சீய் பக்கங்கள் இரண்டாம் பாகம் எழுதும் அளவு தலைப்புகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. நல்ல தோதான தளமும் சூழலும் வாய்க்கும் போது எழுதுவேன்.

*

பெங்களூரு சி.சரவணகார்த்திகேயன்

25-ஃபிப்ரவரி-2014 c.saravanakarthikeyan@gmail.com

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ச்சீய்… Copyright © 2015 by சி.சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book