3

I don’t like posing in a bikini as there is nothing to hold on to.”

  • Maria Sharapova, Russian Tennis Player

பிகினி என்பது பெண்கள் அணியும் டூபீஸ் நீச்சலுடை. இதில் ஒரு பீஸ் ப்ரேஸியர் போல் மேலே மார்பிலும் மற்ற பீஸ் பேண்டீஸ் போல் கீழே இடுப்பிலும் அணிவர். பிகினி அணியும் பெண்கள் அந்தரங்கங்கள் மற்றும் அவை சார்ந்த பிர‌தேசங்களின் ரோமங்களை மழித்த‌கற்றி விடுகின்றனர். இதற்கு பிகினி வேக்ஸிங் என்று பெயர்.

கிமு 1600ல் கிரேக்க‌ மினோயன் நாகரிகத்தின் சுவற்றோவியங்களில், தாழிகளில் பெண்கள் டூபீஸ் உடையில் காட்சியளிக்கின்றனர். கிபி 100ம் ஆண்டைச் சேர்ந்த சிலையில் கிரேக்க பெண் கட‌வுள் வீனஸ் பிகினியில் காட்சியளிக்கிறார். கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த Villa Romana Del Casaleன் ரோமானிய மொசைக்களில் எட்டு பெண் அத்லெட்கள் பிகினிய‌ணிந்து விளையாடும் ஓவியம் இடம் பெற்றிருக்கிறது.

இதற்கு பிறகு பிகினி 19ம் நூற்றாண்டின் மத்தியில்தான் மறுபடி எட்டிப்பார்க்கிறது. 1890களில் விக்டோரியன் காலத்துப் பெண்டிர் பொதுவில் பிகினி அணிய கூச்சம் கொண்டு பல தந்திரோபாயங்களைக் கையாண்டிருக்கின்றனர். குளியல் இயந்திரம் என்ற உடைமாற்றும் அறைகொண்ட மரவண்டி அதில் முக்கியமானது (இன்றைய நடிகைகளின் கேராவன்களுக்கு ஒப்பானது). குளிக்கும் பெண் சாதாரண உடையில் வண்டியில் ஏறுவாள். குதிரை (சமயங்களில் மனிதர்கள்‌) வண்டியை கடலுக்குள் இழுத்துச் செல்லும். அவள் அந்த வண்டிக்குள்ளேயே பிகினிக்கு மாறி கடலுக்குள் இறங்குவாள். இவ்வாறு ஆண்களின் பார்வையிலிருந்து சுலபமாய்த் தப்பித்தார்கள்.

1907ல் ஆஸ்திரேலிய மௌனப்பட நடிகை மற்றும் நீச்சல் வீராங்கனையான அன்னெட் கெல்லர்மேன் போஸ்டனின் ரெவரே பீச்சில் இறுக்கமான ஸ்லீவ்லெஸ் நீச்சலுடை அணிந்துவந்த காரணத்துக்காக கைதுசெய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பெண்கள் நீச்சலுடை அணிந்து வருகிறார்களா என போலீஸ்காரர்கள் அளந்து சோதிப்பது அப்போது அமெரிக்க‌ பீச்களில் சகஜமான காட்சியாக இருந்தது.

1913 ஒலிம்பிக்கில் கார்ல் ஜேண்ட்சென் விளையாடும் போது வசதியாக இருக்கும் பொருட்டு இறுக்கமான ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட் என‌ டூபீஸ் உடையில் கலந்து கொண்டார். 1915ல் மல்லியாட் என்ற ஒன்பீஸ் உடை (தற்போது ஜிம்னாஸ்டிக்ஸ் பெண்கள் அணிவ‌து போன்றது) அமெரிக்க பெண்கள் மத்தியில் பிரபலமானது.

1930களில் ஐரோப்பிய பெண்கள் முதன்முதலாக டூபீஸ் நீச்சலுடை அணிந்தனர். ஹால்டர் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் கொண்ட அதில் இரு பீஸ்களுக்குமிடையே இடுப்புன் சிறுபகுதி மட்டுமே கீற்று போல் தீற்றலாய்க் காட்சியளிக்கும். தொப்புள் தெரியாது. மேக் சென்னெட்டின் Bathing Beauties, டோரதி லாமோர் நடிந்த Hurricane, My Favorite Brunette ஆகிய படங்களிலும், 1948ல் வெளியான Life இதழின் அட்டைப் படத்திலும் இந்த சைவ பிகினி இடம் பெற்றது. அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் உடைகளின் ரேஷன் முறை புழக்கத்தில் இருந்த சமயம் தான் இந்த வகை பிகினி உள்ளே நுழைந்தது. 1940களின் ஆரம்பத்தில் அவா கார்ட்னர், ரீடா ஹேவொர்த், நானா டர்னர் போன்ற ஹாலிவுட் நடிகைகள் அமெரிக்க பீச்களில் இந்த நீச்சலுடையில் வலம் வருவது சகஜமாக இருந்தது.

ஐரோப்பாவிலோ போர் காரணமாக கடற்கரைகள் செறிச்சோடிக் காட்சியளித்தன. இதனால் நீச்சலுடைகளில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. போர் முடிந்த 1946ன் கோடைக்காலத்தில் தான் அங்கே மீண்டுமொரு சுதந்திர உணர்ச்சி மெல்ல ஊடுருவியது. Nuts என்ற ஆண்கள் பத்திரிக்கை ஆசிரியர் டொமினிக் ஸ்மித் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் “போருக்கு பின் பூமியில் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பக் கொண்டு வரும் ஒரு சங்கதி மனிதகுலத்துக்குத் தேவைப்ப‌ட்டது. அது தான் பிகினி” என்கிறார். போருக்குப் பின்னர் பிகினி ஆராய்ச்சி களை கட்டியது.

ஜேக்ஸ் ஹெய்ம் என்ற ஃப்ரெஞ்சு டிசைனர் சிறிய நீச்சலுடை ஒன்றை உருவாக்கி அதற்கு atome என்று பெயர் இட்டார் (அணு என்பதற்கான பிரெஞ்சுச் சொல் அது). தன் தயாரிப்பை “உலகின் மிகச்சிறிய குளியல் உடை” என விளம்பரம் செய்தார்.

இதற்கு மூன்று வாரங்களுக்குப்பின் ஜூலை 5, 1946ல் ஃபிரெஞ்சு டிசைனர் லூயி ரியர்ட் என்பவர் மற்றொரு சிறிய நீச்சலுடையை “உலகின் மிகச்சிறிய குளியல் உடையை விட சிறியது” என்ற போட்டி விளம்பரத்துடன் அறிமுகப்படுத்தினார்.

நிறையப் பேர் மறுத்த பின் மிகுந்த சிரமத்துக்கிடையே மிச்சலின் பெர்னார்டினி என்ற பெண்ணை மாடலாகப் பிடித்து, இதை அணியச்செய்து பிஸ்கின் மொலிடர் என்ற பாரிஸின் புகழ்பெற்ற நீச்சல்குளத்தில் புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் வெளியிட்டார். அது மிகப்பெரிய ஹிட். 50,000 வாசகர் கடிதங்கள் வந்தன அதற்கு!

அமெரிக்கா அப்போது தான் பசிஃபிக் பெருங்கடலிலிருக்கும் மார்ஷல் தீவுகளில் பிகினி அடோல் என்ற இடத்தில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தி, பரபரப்பாக மீடியாக்களில் அடிபட்டுக் கொண்டிருந்த சமயம். அதையொட்டியே ரியர்ட் தன் சிறிய‌ நீச்சலுடைக்கு பிகினி என்று பெயரிட்டார். நவீன நீச்சலுடை பிறந்தது.

ரியர்டின் வியாபாரம் பெருகியது. பிகினி தயாரிப்பு நிறுவனங்கள் புற்றீசலாய்ப் பெருகின. “ஒரு நல்ல பிகினி என்பது ஒரு திருமண மோதிரத்தினுள் சுலபமாய் நுழைத்து வெளியே எடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்” என்றார் ரியர்ட்.

ஃப்ரெல் கோல் என்ற அமெரிக்க டிசைனர் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் “ஃப்ரெஞ்சுப்பெண்களுக்கு குட்டையான கால்கள், அதனால் அவர்கள் கால்களை நீளமாய்க் காட்டும் நோக்கிலேயே பிகினிக்கள் உருவாக்கப்பட்டன” என்றார்.

பிரான்ஸில் பிகினி பரவினாலும் பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிகினி தடைசெய்யப்பட்டது. வாடிகனில் பிகினிய‌ணிவது பாவம் என்று அறிவிக்கப்பட்டது. 1951ல் லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டிக்குப்பின் உலகெங்கிலும் பிகினி தடை செய்யப்பட்டது. 1950களின் இறுதி வரை அமெரிக்க பீச்களில் பிகினி காணுவது அரிதாகவே இருந்தது. 1960களின் மத்தியில் ஹிப்பிகள் கலாசாரம் வரும் வரை பிகினி அமெரிக்காவில் எதிர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.

எஸ்தர் வில்லியம்ஸ் என்ற நடிகை பல‌ படங்களில் நீச்சலுடையில் தோன்றினார். மார்கிட் ஃபெல்லெகி என்ற ஆடை வடிவமைப்பாளர் பிகினி டிசைன்களில் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். Catalina என்ற பிகினி தயாரிப்பு நிறுவனம் ஜிஞ்சர் ரோஜர்ஸ் மற்றும் மர்லின் மன்றோ ஆகியோரை விளம்பர மாடல்களாகப் பயன்படுத்தியது.

1957 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்த‌ நடிகை ப்ரிகிட்டி பார்காட் ஃபிரான்ஸ் கடற்கரைகளில் பிகினியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. 1960ல் பாப் பாடகர் ப்ரயன் ஹைலேண்ட் “Itsy Bitsy Teenie Weenie Yellow Polka Dot Bikini.” என்ற பாடலின் மூலம் பிகினியை பிரபலம் ஆக்கினார். 1962. Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பெல்ட்டுடன் கூடிய‌ வெண் பிகினி அணிந்து நடிகை உர்சுலா ஆன்ட்ரஸ் தோன்றிய காட்சி மிகப் பிரபலம். (2001ல் இந்த பிகினி 61,500 டாலர்களுக்கு ஏலம் போனது. நாற்பதாண்டுகளுக்குப் பின் இதை நினைவூட்டும் வண்ணம் Die Another Day படத்தில் ஹேல் பெர்ரி இதே மாடல் நீச்சலுடையை அணிந்து நடித்தார்).

1962ல் Playboy பத்திரிக்கை அட்டைப்படத்தில் பிகினி மாடலை அச்சிட்டது. 1963ல் அன்னெட்டி ஃபுனிசெல்லொ பிகினி அணிந்து Beach Party, How To Stuff a Wild Bikini ஆகிய படங்களில் தோன்றினார். அதே ஆண்டில் Beach Boys குழு California Girls, Surfin’ Safari போன்ற பிகினியை விதந்தோதும் பாடல்களைப் பாடி வெளியிட்டது.

Sports Illustrated இதழ் தான் முதன் முதலில் பிகினியை அட்டைப்படத்தில் போட்ட வெகுஜனப் பத்திரிக்கை. 1964ன் குளிர்காலத்தில் எந்த முக்கிய விளையாட்டுகளும் இல்லாது போக, அதன் ஆசிரியரான‌ ஆன்ட்ரே லாகுவரே ஃபேஷன் நிருபர் ஜூல் கேம்ப்பெல் என்பவரை பக்கங்கள் நிரப்ப ஏதாவது விஷயம் செய்து தரச்சொல்லிக் கேட்க, அவர் பேபட் மார்ச் என்ற பிகினி மாடலை அட்டைப்படத்தில் போட்டார்.

1966ல் வெளியான One Million Years B.C. படத்தில் கற்கால குகை வாசிப் பெண்ணாக‌நடிகை ராக்குவல் வெல்ச் மிருகத்தோலால் ஆன பிகினி அணிந்து தோன்றினார்.

பிகினியானது மெல்ல மெல்ல அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ப் பரவியது.

1964ல் ரூடி கெர்ன்ரீச் என்பவர் மோனோகினியை அறிமுகப்படுத்தினார். மார்புகள் மறைக்காமல் ஸ்ட்ராப்கள் கீழாடையுடன் இணைக்கப்பட்ட ஒன்பீஸ் உடை இவை.

1967ல் இந்தியாவில் முதன்முதலாக ஷர்மிளா தாகூர் An Evening in Paris படத்தில் பிகினியில் நடித்தார், Filmfare இதழின் அட்டைக்கு பிகினியில் போஸ் கொடுத்தார்.

1960களின் இறுதியில் பிரான்ஸின் கடற்கறையான ஃப்ரெஞ்ச் ரிவியெரா ஸ்ட்ரிங் பிகினி என்ற மிகச்சிறிய நீச்சலுடை பரவலாக‌ முக்கியக் காரணமாக இருந்தது. 1970களில் அமேஸான் காடுகளின் பழங்குடியினத்தவர் அணியும் ஆடையை ஒட்டி பிரேஸிலில் ரியோ, செயிண்ட் ட்ரோபெஸ் ஆகியோரால் தாங் பிகினி அறிமுகம் செய்யப்பட்டது. பிருஷ்டத்தை மறைக்காது முழுக்கக் காட்டும் வகையில் இவை

கயிறால் அமைந்தவை. 1980களில் தாங் பிகினிக்கள் அமெரிக்காவில் நுழைந்தது.

1976ல் ஃபாரா ஃபாவ்செட் அணிந்த ஒன்பீஸ் பிகினி பிரபலம். 1983ல் பீச்களிலிருந்து வெளியே வந்து விண்வெளியில் பிகினி நுழந்தது. Star Wars: Episode VI – Return of the Jedi படத்தில் இளவரசி லெயாவாக‌ நடிகை கேரி ஃபிஷர் பிகினிய‌ணிந்து நடித்தார். 1989 முதல் 1999 வரை மிகப்பிரபலமான‌ Bay Watch டிவி சீரியல் ஒளிபரப்பானது. பமீலா ஆண்டர்சென் இதன் மூலம் புகழ்பெற்றார். 1997ல் கேப்ரியல் ரீஸ் பிகினி அணிந்து பீச் வாலிபால் விளையாட்டை பிரபலமாக்க விளம்பரங்களில் நடித்தார்.

2006ல் சச்சா பேரான் கோஹென் என்பவர் ஆண்களுக்கான பிகினியான மேன்கினி என்பதை அறிமுகப்படுத்தினார். சுமாராய் விற்றது. 2009ல் கேட்டி பெர்ரி புகழ்பெற்ற பச்சை பிகினியில் தோன்றினார். 2010ல் சேவோபௌலோ பேஷன் நிகழ்வில் ஈவா ஹெர்ஸொகோவா லெதர்பிகினியை முதன்முறையாக வெளியுடையாக அணிந்து வந்தார். 2011ல் நடிகை கைனெத் பால்ட்ரோ தன் இரு குழந்தைகளுடன் சிக்கென்ற உடலுடன் பிகினியில் இருந்த படங்கள் வெளியாகி மத்திம‌ பெண்கள் மத்தியில் பொறாமையைக் கிளப்பியது. 2012ல் கேட் அப்டன் Sports Illustrated அட்டைப்படத்தில் மிக மிக மிகச் சிறிய‌ பிகினியில் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

2006ல் சூஸன் ரோசென் தயாரித்த 150 கேரட் வைரங்கள் பதிக்கப்பட்ட பிகினி உலகின் மிக விலை அதிகமானதாகும் – விலை 20 மில்லியன் பவுண்ட்கள்.

நுமோகினி, ஸீகினி, டேங்கினி, கேமிகினி, தாங்கினி, ஹிகினி, மினிமினி,மைக்ரோ டியர்ட்ராப், ஸ்லிங்ஷாட் எனப் பலவகை பிகினி இன்று புழக்கத்தில் இருக்கின்றன.‌

மற்ற உடைகளின் கவர்ச்சியானது அவை வெளிக்காட்டும் பகுதிகளில் இருக்கிறது. ஆனால் பிகினியின் கவர்ச்சியோ அது மறைத்திருக்கும் இடங்களில் இருக்கிறது!

*

Stats சவீதா

  • அமெரிக்கா ஓராண்டில் பிகினிக்கு செலவிடும் தொகை 8 பில்லியன் டாலர்.
  • அமெரிக்காவில் பெண்கள் பிகினி ஒன்றின் சராசரி விலை 24.26 டாலர்கள்.
  • ஓர் அமெரிக்கப் பெண் வைத்திருக்கும் சராசரி பிகினிகள் எண்ணிக்கை 4.
  • 25% பேர் த‌ம் பிகினி பற்றி நேர்மையாக விமர்சிப்பதில்லை என்கின்றனர்.
  • 80% பெண்கள் பிகினி உடல்வாகுள்ள‌வருடன் பீச் செல்ல விரும்புகின்றனர்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ச்சீய்… Copyright © 2015 by சி.சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book