5

Sex is a part of nature. I go along with nature.

  • Marilyn Monroe, American Actress

கலவி என்பது ஆணும் பெண்ணும் உடலின்பத்தின் பொருட்டு (இயற்கை விதிப் படி மறைமுகமாக இனப் பெருக்கத்தின் பொருட்டு) இணைந்து உறவு கொள்தல். இதைப் புணர்ச்சி, உடலுறவு என்றும் சொல்வர். ஆங்கிலத்தில் Sexual Intercourse. சுருக்கமாக செக்ஸ். நம்மூரில் ‘மேட்டர்’ என்ற மிதமான சொல்லும் உண்டு.

முன்விளையாட்டு, ஆசன புணர்ச்சி, வாய்ப் புணர்ச்சி போன்ற பல விஷயங்கள் இதில் இருந்தாலும் ஆண் குறி பெண் குறியில் நுழைந்து கலக்கும் புணர்ச்சியே பொதுவாய் கலவியில் பிரதானம். போலவே ஒரே பாலினத்தவர்கள் கலப்பதும், சிறுவர்களோடு உறவு கொள்வதும் விலங்குகளுடன் புணர்வதும் கூட கலவி தான் என்றாலும் நாம் பேசவிருப்பது பொதுவான ஆண் பெண் புணர்ச்சி பற்றி மட்டுமே!

கலவியின் வரலாற்றை எழுதுவதென்பது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மானுட குல வரலாற்றை எழுதுவதற்கு ஒப்பானது. அதனால் பதிவு செய்யப்பட்ட கலவியின் கதையை மட்டும் பார்க்கலாம். சீனாவில் 16.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய, இரு பூச்சிகள் கலவி கொண்ட நிலையில் புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது. அது தான் கலவி தொடர்பாய் நம்மிடம் இருக்கும் மிகப் பழமையான சான்று.

ஜெர்மனியில் 7,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஆண் பெண் உடலுறவு பற்றிய கல் வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. கலவி பற்றிய பழமையான மனிதப் படைப்பு இது.

இந்தியாவில் ஆதி காலந்தொட்டே கலவி குறித்த விஷயங்கள் பல நூல்களில் பேசப்பட்டு வந்திருக்கிறது. வேதங்களில் திருமணம், கலவி, குழந்தைப்பேறு, சம்மந்தப்பட்ட வழிபாட்டுப் பாடல்கள் காணப்படுகின்றன. இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் ஒரு தம்பதியின் மிக முக்கியமாக கடமை என கலவியில் பரஸ்பரம் சமமாகத் திருப்தி செய்வதையே குறிப்பிடுகிறது.

கிமு 5500ஐச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் கலவி தொடர்பான எந்த சமூகப் பார்வையும் இருந்தற்கான சான்று இல்லை. ஆனால் அவர்கள் குழந்தைப்பேறு சம்மந்தப்பட்ட சில சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

வாத்ஸாயனரின் காமசூத்ரா ஆண் பெண் கலவியின் வெவ்வேறு முறைகளை நுட்பங்களை இன்பங்களை விளக்கமாய்ச் சித்தரிக்கிரது. இது இந்தியாவிலிருந்து புத்த மத கல்வெட்டுகளின் வழியாக சீனாவுக்குச் சென்றது. சீனாவிலும் இதை ஒட்டி கலவி தொடர்பான நூல்கள் இயற்றப்பட்டன. தொடர்ந்து ரதிரகஸ்யா, பஞ்சசஹ்யா, ரதிமஞ்சரி, அணுகருங்கா, கொக்கோகம், காமசாஸ்திரா என பல காமம் மற்றும் கலவி தொடர்பான நூல்கள் இந்தியாவில் இயற்றப்பட்டன. கஜுராஹோ கோயில்களில் கலவி நிலைகளின் சிற்பங்கள் இடம் பெற்றன.

இந்திய தாந்த்ரீக மரபில் கலவி என்பது ஒரு மனிதனின் புனிதக் கடமையாக சொல்லப்படுகிறது. யோனி தாந்த்ரீகம் முரட்டுத்தனமான கலவியைப் பற்றிப் பேசுகிறது. புத்த மத தாந்த்ரீகம் விந்து வெளியேற்றுவதை ஒரு குற்றமாகச் சொல்கிறது. அதாவது கலவி என்பது உன்னதமான ஞானத்தை அடைவதற்கான மார்க்கம் மட்டுமே ஒழியே, அற்பமான உடல் இன்பத்துக்காக அல்ல என்கிறது.

பின் இந்தியாவில் நுழைந்த இஸ்லாமிய ஆட்சியும், ப்ரிட்டிஷ் ஆட்சியும் நம் நாட்டில் நிலவிய கலவி குறித்த முற்போக்கான பார்வைகளைப் பின்னிழுத்தன. இன்றைய தேதி வரை அதன் பாதிப்பை நாம் கண்டு வருகிறோம். தற்போது இந்த நிலைமை மெல்ல மாறி வருகிறது என்றாலும் இன்னமும் கிராமங்களில், அதுவும் படிப்பறிவில்லா மக்களிடையே கலவி குறித்த திறந்த பார்வை இல்லை. இந்த உலகத்திகே காமம் உரைத்தவர்கள் இன்று கட்டுப்பெட்டிகளாய் இருக்கிறோம்.

பண்டைய சீனாவில் I Ching என்ற புத்தகத்தில் இந்த உலகத்தை விளக்கவே கலவியைத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதாவது சொர்க்கம் பூமியுடன் கலவி செய்வதாக அந்நூல் குறிப்பிடுகிறது. இது போக Zhuang Zi, Yingying Zhuan, Fu Sheng Liu Ji , Jin Ping Mei, Hong Lou Meng எனப் பல புத்தகங்களிலும் கலவி பற்றிய குறிப்புகள் உண்டு. Rou Bu Tuan என்ற நாவல் சிறப்பான கலவிக்கு இன்ன பிற மிருகங்களின் உறுப்புகளை மாற்றி அறுவை செய்வதைப் பற்றிப் பேசுகிறது. தாவோயிஸமும் கலவி பற்றிய விஷயங்களை முன்வைக்கிறது. அவர்களின் உடலுறவு வித்தைகளுக்கு மூன்று நோக்கம்: ஆரோக்கியம், ஆயுள், ஆன்மீகம்.

உலகின் முதல் நாவலான Genji Monogatari ஜப்பானில் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அது கெஞ்சி என்ற இளவரசனின் காம வாழ்வை சித்தரிக்கிறது. இசை போல், இன்ன பிற கலைகள் போல் கலவியும் ஒரு கலாச்சாரப்பூவமான வாழ்க்கை முறைக்கு மிக அத்தியாவசியமானது என அந்நூல் சொல்கிறது. மெய்ஜி மறுசீரமைப்புக் காலகட்டம் வரை கலவி என்பதைத் தவறான ஒரு விஷயமாக ஜப்பானிய கலாசாரர்த்தில் பாத்ததற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை.

பண்டைய கிரேக்கத்தில் பெண்கள் வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவியாகவே பார்க்கப்பட்டனர். Eromenoi, Hetaeras மற்றும் அடிமைப் பெண்கள் என தம் சொந்த வீட்டுக்குள்ளேயே அவர்கள் விபச்சாரிகளுடன் போட்டி போட வேண்டி இருந்தது. பெண்கள் ஆண்களின் குறிகளைக் கண்டு பொறாமை கொள்வர் என நம்பினர்.

பண்டைய ரோமானிய சாம்ராஜ்யத்தில் உடல் இச்சையை அடக்கி கட்டுப்பாடாய் இருப்பதையே ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒழுக்கம் என வகுத்திருந்தனர். ஆனால் பல வெளிப்படையான கலவிக் கலைகளும் இலக்கியங்களும் கூட உருவானது அங்கே தான். பொம்பெய், ஹெர்குலேனியம் ஆகிய இடங்களில் பல கலவி முறைகளையும் சம்பவங்களையும் செதுக்கி வைத்திருந்தார்கள். ஓவிட் என்ற கவிஞரின் The Art of Love என்ற நூல் ஆணும் பெண்ணும் எப்படி காதல் கொண்டு இன்புறுவது என விளக்குகிறது. லூக்ரெடியஸ், செனெகா ஆகியோர் கிரேக்க மரபை ஒட்டி கலவி குறித்த விரிவான சித்தாந்தங்களை உருவாக்கினர்.

சிசேரோ என்ற ரோமானிய அறிஞர் கலவிக்கான இச்சையே குடியரசுக்கான விதை என்றார். அதாவது கலவி ஆசையே திருமணம் செய்யத் தூண்டும், குடும்பத்தை உருவாக்கும், சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தும், குடியரசுக்கு அடித்தளமாகும்.

ஃப்ரெஞ்ச் பாலினேஷியா தீவுகளில் கலவி விஷயத்தில் பொதுவாய் மேற்கத்திய கலாசாரத்தில் தவறாகப் பார்க்கப்பட்ட பல விஷயங்கள் இயல்பாகப் புழங்கின. உதாரணமாய் தாய் தந்தையுடன் ஒரே அறையில் இருக்க நேர்ந்த குழந்தைகள் அவர்களின் கலவியைக் கண்ணுற்றன. அப்படிப் பார்த்த சிறுவர்களை பாலியல் தூண்டுதல்களுக்குப் பயன்படுத்தினார்கள். வயது வந்தவுடன் நிஜக் கலவிக்கும்.

அந்தத் தீவு பற்றி சார்லஸ் பியரி மற்றும் எட்டினி மர்ச்சண்ட் என்ற மாலுமிகள் எழுதிய நூல் ஒன்றில் 8 வயதுச் சிறுமி தகாத கலவி நடவடிக்கைகளில் அதுவும் பொது இடத்தில் தயக்கமின்றி ஈடுபட்டிருந்ததைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆதம் ஜோஹன் என்பவர் தன் நூலில் ஒரு தந்தை தன் 10 வயது மகளை பல கப்பல் மாலுமிகளுடன் கலவி செய்ய வைத்ததைக் கண்டதைக் குறிப்பிடுகிறார்.

யூத மதம் திருமண பந்ததுக்குள் நடக்கும் கலவியை மட்டும் பாவமில்லை என சலுகை வழங்கியது. ஆனால் விந்து உள்ளிட்ட காமக் கழிவுகள் உடலுக்கு வெளியே சிந்துவதை அபச்சாரமாகக் கருதி சுத்தப்படுத்துவதை வலியுறுத்தியது.

பண்டைய கிறிஸ்துவம் கலவியை பிள்ளைப்பேறுக்கான வழிமுறை என்பதாக மட்டுமே பார்த்தது. பெண் மாதவிலக்காக இருக்கும் போது அவளுடன் கலவி செய்தல் கூடாது என்கிறது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் லேவியராகமத்தில் 18ம் அதிகாரத்தில் 19ம் வசனத்தில் “ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்தில் இருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.” என வருகிறது.

புனித அகஸ்டின் ஆதாம் தடைசெய்யப்பட்ட கனியை உண்ணும் முன் கலவி என்பதில் காமம் கலந்திருக்கவில்லை, அது இனப்பெருக்கத்துக்கான வழியாக மட்டுமே இருந்தது என்கிறார். பிற்காலக் கிறிஸ்துவமும் இந்தக் கருத்தை வழிமொழிகிறது. உடலுறவில் காமம் கலந்திருப்பதைப் பாவச்செயல் என்கிறது.

இது பிற்பாடு திருமணத்துக்கு வெளியே கொள்ளும் காமத்தை மட்டும் பாவம் என்பதாய் மாறியது. கிறிஸ்துவம் திருமணம் என்பதற்கான நோக்கம் என மூன்று விஷயங்களை வரையறுக்கிறது. பரஸ்பர ஊக்கம், ஆதரவு, சந்தோஷம், குழந்தை பெறுதல், வேறு ஆளுடன் தவறான உறவு எனும் பாவத்தைத் தடுத்தல் என்கிறது.

இஸ்லாமும் திருமணத்துக்கு வெளியே கலவியை பாவம் என வரையறுக்கிறது. புனித குர்ஆன் இதை ஸினா என்று அழைக்கிறது. இதற்கு தண்டனையும் உண்டு.

மத்திய காலத்தில் சர்ச்கள் குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே கலவி செய்யலாம் என்றன. ஆல்பர்டஸ் மேக்னஸ் ஐந்து நிலைகளே ஏற்றுக்கொள்ளப்பட்டவை என வரிசைப்படுத்துகிறார். 1. ஆண் மேலே, பெண் கீழே 2. பக்கவாட்டில் படுத்தல் 3. நின்று கொள்தல் 4. அமர்ந்து செய்தல் 5. பின்புறத்திலிருந்து செய்தல். மற்ற நிலைகளில் உறவு கொள்வது பாவம். ஆனால் உடல் பருமன் போன்ற பிரச்சனை கொண்டவர்களுக்கு வசதியான பிற கலவி நிலைகளும் அனுமதிக்கப்பட்டன.

இதே காலகட்டத்தில் காமத்தை ஒட்டிய சில ஃபேஷன் சமாச்சாரங்கள் உயர்குடி ஆண்கள் மத்தியில் பரவலாய்க் காணப்பட்டன. காட்பீஸ் என்பது பஞ்சு அல்லது மரத்தூளால் நிரப்பட்ட ஒரு பொருள். அதைப் பேண்ட்டில் ஆண் குறிக்கருகே பொருத்திக் கொள்வர். அது உறுப்பைப் பெரிதாக்கிக் காட்டும். இது ஆண்மையின் அடையாளமாகக் கருதப்பட்டது. அதே போல் பௌலைன் என்ற கூரான முனை கொண்ட நீளமான ஷூக்களையும் அணிந்தனர். அதுவும் குறியின் நீளத்தையும் வீரியத்தையும் குறித்தது. இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றியின் ஓவியம் ஒன்றில் அவர் இது இரண்டையுமே அணிந்துள்ளார். வழக்கம் போல் அக்கால சர்ச்கள் இது போன்ற ஃபேஷன் விஷயங்களையும் பாவம் என்றே சொல்லின.

1800களில் தொழிற்புரட்சி ஐரோப்பாவில் நடந்த போது வேலையிடங்களில் ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழக நேர்ந்தது. இந்தக் காலத்தில் தான் திருமணத்திற்கு வெளியே உறவுகள் பெருகின. இது கலவியை அதிகரித்தது. இந்த விஷயத்தில் சுதந்திரமயமாக்கல் நுழைந்ததால் முதல் கலவிப் புரட்சி எனலாம்.

இதன் தொடர்ச்சியாக 19ம் நூற்றாண்டில் பெண்கள் பிற ஆடவருடன் கலக்காமல் கற்புடனிருக்க வைப்பதற்காக இரும்பால் ஆன பெல்ட்களை இடுப்பில் பேண்டீஸ் போல் அணிவித்தனர். இந்தக் கருவியை கற்பு பெல்ட்கள் என அழைத்தனர்.

1960களிலும் 1970களிலும் கலவியில் இரண்டாவதாய் ஒரு புரட்சி ஏற்பட்டது. நவீனக் கருத்தடை மாத்திரைகளும், பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகளும் புழக்கத்துக்கு வந்த காலகட்டம் அது. இரண்டு விஷயங்களும் சட்டப்பூர்வமாக பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டன. அதனால் ஆண்களும் பெண்களும் கர்ப்பமுறுதல் குறித்த கவலை இன்றி சுதந்திரமாக கலவியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

மடோன்னா 1992ல் Sex என்ற காஃபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார். கலவி பல்வேறு புகைப்படங்களும் கொண்ட ஆல்பம் அது பலத்த சர்ச்சைக்குள்ளானது.

இன்று உலகம் முழுக்க காமமும் கலவியும் சந்தைப்பொருள் ஆகி விட்டது. உலகமயமாக்கலின் முக்கிய விளைவுகளில் ஒன்று இது. நாம் விரும்பா விட்டாலும் அது நம்மை நேரடியாகவோ மறைமுகமாகவோ வந்தடையும்.

கலவி என்பது மனித இனத்தின் பேரின்பம். அதை திருமணம் எனும் பந்தத்துக்குள் விதவிதமாய் அனுபவித்துக் கொள்வதே ஒழுக்கமானது. பாதுகாப்பானதும் கூட.

*

Stats சவீதா

  • 56 % பேர் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்கின்றனர்.
  • 5ல் 3 பேர் கலவியை மேம்படுத்த இணைய உதவியை நாடுகின்றனர்.
  • 62% இந்தியர்கள் தம் கன்னித்தன்மையை காதலரிடம் இழந்துள்ளனர்.
  • 26% இந்தியர்கள் செக்ஸ் ஒரே மாதிரியாக போர் அடிக்கிறது என்கிறனர்.
  • 64% பெண்களே சமீபத்திய கலவியில் உச்சம் கண்டதாகச் சொல்கின்றனர்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ச்சீய்… Copyright © 2015 by சி.சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book