33

ள்வெறி, சாராய வெறியைவிடப் பதவி வெறி மிகப் பெரியது’ என்று பகடியாகச் சொல்வதுண்டு. எனவே பதவி வெறியும் அதனால் பெறும் மயக்கமும் மனிதனை எளிதில் அடிமையாக்கி விடுகிறது.

பதவி மயக்கம் என்பது இன்று மனிதனைப் பிடித்திருக்கும் நீங்கா நோயாகவே தெரிகிறது. நேற்று வரை மக்களோடு மக்களாக இருந்த ஒருவன், ஒரு சிறிய அரசு பதவி கிடைத்ததும் தன்னை மாற்றிக் கொள்கிறான். அதிலும் அரசியல் செல்வாக்கால் பெறுகிற பதவி என்றால் சொல்லவே வேண்டாம். அத்துணை அளவிற்குப் பிற மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறான். இஃது இன்றைய மக்கள் மத்தியில் நிலவுகின்ற பொதுவான செய்தியாகும். பிறர் உயர்வாக எண்ணி மதிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு ஆடம்பரமாக நடந்து காட்டுகிறான். தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்பதும் பலர் ஒப்புக்கொள்கிற செய்திதான். ஆனால், இந்தப் பொதுவான செய்திகளைக் கக்கனின் வாழ்க்கை வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தான், பத்தரைமாற்று அரசியல் தங்கமாக மிளிர்ந்த கக்கனுக்கும், அரசியல் என்ற பெயரால் ஆடம்பரம் என்ற சகதியைச் சுமக்கும் மனித வடிவான உயிர்களுக்கும் இருக்கும் வேறுபாடு தெரியும்.

ஒருமுறை எவ்வித முன்னறிவிப்புமின்றிக் கக்கன் மதுரை மாநகருக்கு வந்தார். அன்று அவர் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர். எப்போதும் சென்று தங்குவது போல் அரசு பயணியர் மாளிகைக்குப் போகச் சொன்னார். அப்போது இரவு பத்து மணி. அந்தப் பயணியர் மாளிகையில் வேறு யாரோ தங்கி இருக்கிறார்கள் என்று காவலர் சொன்னதும் அதிகாரிகள் அதிர்ந்து போயினர். என்றாலும், அதிகாரிகள் ‘தனியார் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம். அங்கு போகலாம்’ என்று கூறிச் சமாளித்தனர். விடுதிக் கண்காணிப்பாளரோ, ‘இங்குத் தங்கி இருப்பவரைக் காலி செய்துவிடச் சொல்லுகிறேன்’ என்று விரைந்தார். காரணம் அது ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய அறை. உடனே அந்தக் காவலரை அழைத்த கக்கன் ‘அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம், அரசு வழங்கும் அதிகார நடைமுறைப் (Protocol) படி அமைச்சருக்குத் தான் முதன்மை எனினும் அவரும் நம்மைப் போல் மனிதர்தானே?’ என்று கூறிவிட்டுக் காரில் ஏறினார். ‘தனியார் விடுதிக்குப் போகலாமா?’ என்று அதிகாரி கேட்டதும் ‘வேண்டா, எனது தம்பி முன்னோடி வீடு தொடர் வண்டிக் குடியிருப்பில் (இரயில்வே காலனி) இருக்கிறது. அங்கே போகலாம்’ என்று கூறிய அவர்தம்பி வீட்டில் சென்று தங்கினார். ஒரே அறையையுடைய அந்த வீட்டில் மகிழ்வுடன் தங்கி இருந்தார்.

இதுவொரு பெரிய செய்தியில்லை என்றாலும், ஒன்றை இங்குச் சிந்திக்க வேண்டும். அரசு பயணியர் மாளிகையில் அமைச்சருக்குத்தான் முன்னுரிமை. அங்கு தங்கும் வாய்ப்பு இல்லையென்றால் தனியார் விடுதியில் தங்கலாம். இதை எவரும் குறை கூறப்போவதில்லை. இருந்தாலும், தனியார் விடுதியில் தங்குவது ஆடம்பரமான ஒன்று என எண்ணினார். தமக்குச் சொந்தத் தம்பியின் இல்லம் இருக்கிறபோது ஏன் விடுதியில் தங்க வேண்டும்? பதவியில் இருக்கும் போது ஆடம்பரமாக வாழ்வதும் பதவி இழந்ததும் சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கு வந்து விடுவதும் அவர் விரும்பாத ஒன்று என்றும் ஒரே நிலையில் வாழ்வதே வாழ்க்கை, பதவிக்காக வாழ்வது வாழ்க்கை இல்லை என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தார். பதவி மயக்கத்தில் தகுதிக்கும் வருவாய்க்கும் மீறிய எதையும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் தமக்கென்று வடிவமைத்துக் கொண்டு நிதானமான பாதையில் நடந்தார்.

இங்கு இன்னொரு செய்தியையும் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது தம் மனைவி சொர்ணம்பார்வதி அவர்களைத் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்ற அனுமதித்தார்.

அரசியல் ஆடம்பரங்களால் தமக்குத் தனியொரு வண்ணத்தைப் பூசிக் கொள்ளும் சமுதாயத்திற்கு முன் இவர், தம் மனைவியை வேலைக்கு அனுப்பி இருந்தார்.

அரசியலால் வாழ்வு பெற்றவர்கள் இன்று எதையெல்லாம் மிக உயர்ந்த மரியாதையாகக் கருதுகிறார்களோ அதையெல்லாம் மிகச் சாதாரணமாக இவர் கருதினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book