45

ந்திய அரசியலில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதாகத் தெரிகிறது. பதவிக்கு வருமுன் அடக்கமாக இருப்பதும், பதவியைப் பெற்றதும் தம்மை எதிர்த்த அல்லது இன்னலுக்கு உட்படுத்தியவரைப் பழிக்குப்பழி வாங்க நினைப்பதும் அவர்கள் வாடிக்கையாகும். ஆனால், அவ்வாறான சூழலில் கக்கன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.

கிட்டத்தட்ட அவருக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வாழ்நாள் முழுவதும் அரசியல் நடத்தியிருக்கிறார். இதுவரை எதிர்த்தவர்களும் இன்னல் விளைவித்தவர்களும் இருந்திருக்கவே வேண்டும். அப்படியானால் அவர்களைக் கக்கன் எவ்வாறு எதிர்கொண்டிருப்பார்? என்று எண்ணுவது சரியான ஆய்வாக அமையும். அந்த நோக்கில் ஒன்றை இங்குக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

1942ஆம் ஆண்டு வெள்ளையர்களால் சிறை செய்யப்பட்டு, மதுரை மேலூர்க் காவல் நிலையத்தில் கக்கன் கசையடி வாங்கினார் என்பதை முன்பே பார்த்தோம். அந்தக் கசையடி நிகழ்ச்சியில் நேரடிப் பங்கு கொண்ட காவல்துறைக் காவலராகப் பணியாற்றியவர் திரு.நித்தியானந்தம். 1957ஆம் ஆண்டு கக்கன் அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன் அந்தக் காவலர், பதவி உயர்வு பெற்று உதவி ஆய்வாளர் பதவியில் இருந்தார்.

அமைச்சரான கக்கனைக் கண்டு வாழ்த்துச் சொல்ல வந்த பொதுமக்களுள் திரு.நித்தியானந்தமும் ஒருவர். எல்லோரும் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு தனியே அமைச்சர் கக்கனைச் சந்தித்தார். ‘என்னை மன்னித்து விடுங்க’ என்று கண்ணீர் மல்க காலில் விழ முயன்றார். அவரைத் தடுத்த நிறுத்தி ‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இது என்ன நாகரீகம்?’ என்று கேட்டார். ‘உங்களுக்குக் கசையடி கொடுத்த காவலருள் நானும் ஒருவன், என்னைத் தண்டித்து விடாதீர்கள்’ என்று கெஞ்சினார்.

நீங்கள் உங்கள் கடமையைச் செய்தீர்கள், அதில் தவறு ஒன்றுமில்லை, உங்களைப் போல் கடமை உணர்வுமிக்கவர்கள் தாம் இந்த நாட்டிற்குத் தேவை’ என்று தட்டிக் கொடுத்துச் சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார்.

பிற்காலத்தில் நித்யானந்தத்தின் மகனுக்குக் காவல்துறையில் பணி கிடைக்கக் கக்கனே ஏற்பாடு செய்ததாக நித்தியானந்தமே பலரிடம் கூறியிருக்கிறார்.

இங்கு, இதுபோன்ற இன்னொரு அரசியல் தலைவரின் செயலை ஒப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். விலைவாசிப் போராட்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவை அழைத்துச் செல்லும் காவலர் ஒருவர் ‘கைதிக்குத் தோளிலென்ன துண்டு எடுடா’ என்றெல்லாம் பேசிய அதே காவலர், ஒரு சில மாதங்களுக்குள் அண்ணா முதலமைச்சரான போது அணிவகுப்பு மரியாதையில் தன்னைக் கண்டு நடுங்கியதைப் பார்த்து விட்டு அவரைத் தனியே அழைத்த அண்ணா, ‘உங்கள் கடமையைச் செய்ததைப் பாராட்டுகிறேன்’ என்றாராம். இப்போது பாருங்கள், பண்பாளர்கள் எங்கும், எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்.

பண்புள்ளம் கொண்ட கக்கன், தமக்கு இன்னா செய்தாரை மன்னித்து நன்னயம் செய்து விடுவதே மிகப் பெரிய பண்பாடு என்ற வள்ளுவரின் வாக்கினை மனத்தில் ஏந்தி நடந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book