48

1964ஆம் ஆண்டு நடந்த தம் மகள் திருமண அழைப்பிதழில் ‘பரிசுகளைத் தவிர்க்கவும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதையும் மீறிப் பலர் அமைச்சர் கக்கனுக்குத் தெரியாமல் பரிசளித்தார்கள் என்பது உண்மை. அவ்வாறு பரிசளித்தவர்களில் அன்றைய காங்கிரஸ் கட்சிச் சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர். திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பின் தமது தொகுதி மேம்பாட்டுத் திட்ட விழாவிற்கு அழைக்க வந்த அந்தச் சட்ட மன்ற உறுப்பினர் ‘என்னால் அதிகமாகச் செய்ய முடியவில்லை, என்னால் முடிந்த தங்கவளையல்கள் மட்டுமே செய்தேன்’ என்று பேச்சோடு பேச்சாக அமைச்சர் கக்கனிடம் கூறினார். ‘அப்படியா பரவாயில்லை’ என்று கூறி விழாவிற்கு வருவதாகத் தேதியும் கொடுத்து அனுப்பினார்.

அன்று இரவு வீடு திரும்பியதும் தம் மகனை அழைத்து நண்பர் பரிசளித்த வளையல்களைத் தம் மகளிடமிருந்து வாங்கி வரச் செய்து, தன்னிடம் வைத்துக் கொண்டார். விழாவிற்குச் சென்ற கக்கன் விழா முடிந்ததும் அவர் வீட்டிற்குச் சென்று, அவர் பரிசளித்த வளையல்களைத் திருப்பிக் கொடுத்தார். அந்தச் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றும் சொல்ல முடியாமல் திகைத்துப் போனார்.

திருமணப் பரிசாகக் கொடுத்ததைத் திரும்பக் கொடுப்பது முறையன்று’ என்று கூறினார். ஆனால், கக்கன் அவ்வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, ‘உங்கள் அமைச்சரின் மகளை நெஞ்சார வாழ்த்துங்கள், பரிசு ஏதும் வேண்டா’ என்று பிடிவாதமாக அவ்வளையல்களைத் திருப்பிக் கொடுத்தார்.

எனவே கக்கன் தமக்கென வகுத்துக் கொண்ட வாழ்க்கைப் பாதையில் தடம் புரளாதவர். இவ்வாறு தம்மையே பிறருக்குப் பாடமாகக் காட்டிய சான்றாண்மை இவரிடம் இருந்தது.

தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்தல், அமிழ்தம் கிடைத்தாலும் தனித்திருந்து உண்ணாமை, எவரையும் வெறுக்காது பிறர் அஞ்சுவதைக் கண்டு அஞ்சி அதனை நீக்க முயலுதல், புகழ் பொருட்டுத் தம் உயிரையும் கொடுக்கும் தன்மை, பழியால் உலகம் முழுவதும் ஆளக்கூடிய உயர்வு வந்தாலும் ஏற்றுக் கொள்ளாத மனம் ஆகிய சான்றாண்மைக் கொண்டொழுகிய பெரியோர்கள் உள்ளதால் தான் இவ்வுலகம் உள்ளது. இல்லையேல் உலகம் மண்ணோடு மண்ணாகி விடும் என்பதை உணர்த்தும்,

உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்

அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்

தமிய ருண்டலு மிலரே முனிவிலர்

தஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்

புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்”

என்னும் புறநானூற்று வரிகளைக் கக்கனின் வாழ்க்கை நடைமுறைகளோடும் அவர் கடைப்பிடித்த சான்றாண்மை மிக்க செயல்களோடும் ஒப்பு நோக்கலாம்.

சான்றாண்மை என்ற சொல்லுக்குப் பொருள்கூற வந்த மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் ‘பல நற்குணங்களாலும் நிறைந்து அவற்றையாளுந் தன்மையை சாலுதல், நிறைதல்’ என்பார், ஆம்! சான்றாண்மை என்ற சொல்லுக்கு ஓர் இமயக்கொடுமுடியாக இலங்கும் கக்கன், நேர்மை என்ற சொல்லுக்குள் பொருளாகப், பொருள் விரிவாகத் துலங்கினார் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே, நல்ல சான்றாண்மை மிக்க வாழ்க்கை நடைமுறைகளைக் கொண்டு வாழ்ந்து காட்டியதால்தான் இன்றும் மக்களில் மாண்புடைய நடையில் நின்றுயர் நாயகன் என்ற கம்பனின் வரிகளுக்கு இலக்கணமாகக் கக்கன் திகழ்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book