84

பெரும்பாலும் மனிதனிடம் பொருளிருந்தால் அறிவு இருப்பதில்லை. அறிவு இருந்தால் பொருள் இருப்பதில்லை. இதையே இருவேறு உலகத்துக்கு இயற்கை என்கிறார் வள்ளுவர். அந்த வகையில் நல்ல சமுதாய வளர்ச்சியை எதிர்நோக்கும் பொதுத் தொண்டன் தனது சொந்த வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்பட மாட்டானோ? அல்லது தன்னலமுடையவனிடம் பொதுநலன் இருக்காதோ? பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்ற முதுமொழியை இவரது வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

பெரியவர் கக்கன் தமது உலக வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்ளப் பொருளாதாரம் மிகவும் அடிப்படையான ஒன்று என்ற சிந்தனையே இல்லாமல் இருந்து விட்டார். அவசர நிலையில் தம்மைக் காத்துக் கொள்வதற்குப் பொருளில்லாததால் சரியான மருத்துவம் செய்து கொள்ள முடியவில்லை. அரசு வழங்கும் இலவச மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை. தனியார் மருத்துவமனை என்பது அவரது வாழ்நாளில் எட்டாத ஒன்றாகவே இருந்துவிட்டது. இதுதான் ஊழின் வலிமையோ?

படிப்படியாக உடல் நலக்குறைவு அதிகரித்து 1981 அக்டோபர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓரிரு நாள்களில் கக்ககன் சுயநினைவிழந்தார். அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் பார்வை கக்கனின் மீது இருந்தமையாலும் அவரால் வழங்கப்பட்ட உயர்வகுப்பு மருத்துவ வசதிக்கான அரசாணை நடைமுறையில் இருந்தமையாலும் மிகவும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், முதுமையின் காரணமாகச் சிகிச்சை பலனளிக்கவில்லை. இவருக்கென்று நவீன வசதி வாய்நத படுக்கை ஒன்றினைப் புதிதாக வாங்கி உடல்நலம் காக்க எம்.ஜி.ஆர். ஆணையிட்டார். அவ்வாறே பல லட்சம் பெறுமானமுள்ள படுக்கை ஒன்றினைக் கக்கனுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கத் தமிழக அரசு உதவியது. சுய நினைவு திரும்பவே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நினைவு திரும்பாத நிலையில் இருந்தார். 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் நாள் கக்கன் என்ற நேர்மை விளக்கு அணைந்தது.

ஓர் ஈ, எறும்புக்குக் கூட தீங்கை மனத்தாலும் நினைக்காத அந்தப் பயன் மரம் பழமரம் சாவு என்னும் அரக்கனால் வெட்டி வீழ்த்தப்பட்டது.

அவர் மக்கள் மனங்களில் பதித்த தன்மானம் மிக்க அரசியல் ஒழுக்கம் என்ற காலத்தடத்தை எந்த இயற்கை அரக்கனாலும் வீழ்த்திவிட முடியாது அல்லவா!.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book