93


1. மூலிகையின் பெயர் :- அத்தி.

2. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE.

3. தாவரக்குடும்பம் :- MORACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.

5. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு மரவகை. அத்தி கல்க மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது அதனால் இதை காணாமல் பூப் பூக்கும் கண்டு காய்காய்க்கும். என்ற விடுகதையிலும் சொல்வர். அடிமரத்திலும் மற்றும் கிழைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். துவர்ப்பும் இனிப்பும் உடைய இதன் பழம் குருதி விருத்திக்கு உறுதுணையாகும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள், பட்டையில், செரில்பெஸ்ரஹென்னேட், லுப்பியால், எ-அமிரின் மற்றும் 3 இதர கூட்டுப் பொருடகள், ஸ்டீரால் மற்றும் க்ளானால் பழத்திலும், பீட்டா சிஸ்ஸடீரால் இலைகளிலும் உண்டு. விதை மற்றும் பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.

அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.

அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.

—————————————————(தொடரும்)

கார்திகேயன் முகநூலில் சொல்லியது –
தினம் ஒரு உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

செரிமானத்தை அதிகரிக்கும் :-
உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.
எடை குறைவு :-
உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.
உயர் இரத்த அழுத்தம் :-
உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது :-
உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.
இதய நோயைத் தடுக்கும் :-
ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.
புற்றுநோயைத் தடுக்கும் :-
ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.
எலும்புகளை வலிமையாக்கும் :-
ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.
நீரிழிவிற்கு நல்லது :-
உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.
இரத்த சோகையை தடுக்கும் :-
உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.
இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் :-
அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம்.  (29-6-2015)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book