1) வேறு பெயர்கள்: ஆடாதொடை
2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் – Acanthaceae
3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.
4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.
5) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.
இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.
ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.
ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.
ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.
ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.