100

1. மூலிகையின் பெயர் :- கட்டுக்கொடி

2. தாவரப்பெயர் :- COCUTUS HIRSUTUS.

3. தாவரக்குடும்பம் :- MENISPERMACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் வேர் ஆகியன.

5. வளரியல்பு :- கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. தமிழகத்தில் எல்லாப்பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45 அடி நீளம் வரை படரக்கூடியது. பூத்துக் காய்காய்க்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். பழம் நீல நிறமாக 4 எம்.எம். உருண்டையானது. இலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

6. மருத்துவப் பயன்கள் :- இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.

பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.

இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.

கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தழர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book